வாழ்வை வாழலாம்

வாருங்கள்!


சிறிது 

பாதை மாறிப் 

போகலாம்!


தார்ச்சாலைகளை விட்டுவிட்டு,

சிலதூரம் 

காடுகளுக்குள் செல்லலாம்!


மண் பாதைகளையும்,

மலர் வாசங்களையும்

கொஞ்சம்

மனதோடு எடுத்து வரலாம்!


நீண்ட நெடிய

வனாந்தரத்திற்குள்,

சிறிது

நடைபயணம் சென்று வரலாம்!


மழை மேகங்களைத்

தடுத்து நிறுத்தும்

மலைகளுக்குக் 

கவிதைகள் சில 

பாடி வரலாம்!


வெண்புகையாய்

நம்மைச்சூழும்

வெண்பனியை,

விரலோடு கொஞ்சம்

கொஞ்சி வரலாம்!


தாய்ப்பாலாய்த்

தாகம் தீர்க்கும்

அருவிகளின்

தாயன்பில் 

நன்றாய்

நனைந்து வரலாம்!


ஓங்கி வளர்ந்த

மரங்களின் தோப்பில்

கொஞ்சம் 

ஓய்வும் கொள்ளலாம்!


தீராத

நெடுவெளிகளில்

காணாத உயிர்களைத்

தேடித் திரியலாம்!


மனிதன்

தீண்டா

தொலை தூரங்களைக்

காலால் கொஞ்சம்

அளந்து வரலாம்!


விடியல் கொஞ்சம்

விடைபெறும் வரை

விளையாடிக்

களிக்கலாம்!


விளையாடிய

களைப்பு தீர,

மீண்டும் விடியும் வரை

சிறிது

விண்மீன்களின்

அரவணைப்பில்

உறக்கமும் கொள்ளலாம்!


வாருங்கள்.

வாழ்வைக் கொஞ்சம்

வாழலாம்..!


-செல்லா




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1