Friday, October 4, 2013

குங்பூ - பகுதி ஐந்து

5. லோயர் பாடி

நம் தாய் மண்ணிற்கு அடுத்த படியாக நம்மைத் தாங்கும் நம் கால்களை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பேசப்போகிறேன்.

பிறந்தது முதல் நம் உடலைத் தாங்கிக்கொண்டிருப்பவை நம் கால்கள் தான். கிட்டத்தட்ட போதுமான அளவு நம் கால்களுக்கு வலு இருக்கும். ஆனால், நாம் குங்பூவில் செய்யவிருக்கும் அனைத்து உடற்பயிற்சிகளை சமாளிக்கும் அளவிற்கு வலு இருக்குமா என்றால் இல்லை என்பதே உண்மை. குறிப்பாக முழங்கால் அல்லது மூட்டுப்பகுதி, தொடை, மற்றும் காலடி பகுதிகளுக்கு வலு தேவைப்படுகிறது. அதற்கு வலு கூட்டும் உடற்பயிற்சிகளும் இருக்கின்றன. அவற்றைப் பற்றி சற்று காணலாம்.

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே ஓர் சமநிலையில் தான் இருக்கிறது. காற்று, மழை, வெப்பம், ஒளி, காந்த புலங்கள், சூரிய குடும்பம், கிரகங்கள், நட்சத்திரங்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல் அனைத்துமே. இந்தச் சமநிலைக்கு பாதிப்பு ஏற்படும் போது, விரும்பத் தகாத நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இயற்கையின் சமநிலை ஏதோ ஓர் விதத்தில் குலையும் போது தான், இயற்கைச் சீற்றங்கள் உண்டாகின்றன. பஞ்ச பூதங்களால் ஆன மனித உடலும் அவ்விதமே. அதன் சமநிலையை பாதிக்கும் எந்த ஒரு செயலும் தவறானதே. இன்றைய காலங்களில் ஜிம் போன்ற உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்லும் பலரும் கவனிக்கத் தவறுவது இவ்விடயமே. முறையாக ஜிம் மாஸ்டரின் அறிவுறுத்தலை ஏற்காமல், மேற்பகுதி உடலை (Upper Body) மட்டும் வளப்படுத்திவிட்டு, கீழ் பகுதி உடலை (Lower Body) மறந்து விடுகின்றார்கள். உடலின் ஒரு பகுதியை மற்றும் வலுப்படுத்திவிட்டு மற்ற பகுதிகளை வலுப்படுத்தாமல் இருப்பது மிகவும் தவறான செயலாகும். வேர் சரியாக இல்லாமல் மரம் முழுவதுமாக வளராது.

இது மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தைப் பற்றி யோசிக்கும் நண்பர்களுக்கு/தோழிகளுக்கு இன்னும் ஒரு சில பிரச்சனைகளும் உண்டு. பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி யோசித்த உடனே நம் பலருக்கும் தோன்றும் முதல் உடற்பயிற்சி வாக்கிங் அல்லது ரன்னிங். நீங்கள் முதல் ரகத்தை தேர்வு செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால், உடல் பருமனான நண்பராக இருந்து, உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர எண்ணி, இரண்டாவது ரகத்தை தேர்வு செய்தீர்களேயானால் சற்று கவனிக்க வேண்டுகிறேன். நீண்ட காலமாக, உடற்பயிற்சி ஏதும் செய்யாமல் அல்லது உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பவர்கள் தான் பெரும்பாலும் உடற்பருமன் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். உடற்பயிற்சியே செய்யாமல் இருந்திருப்பதால், புதிதாக ரன்னிங் உடற்பயிற்சியை எடுத்துக் கொள்ளும் போது ஆரம்பத்தில் நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும், நீண்டநாள் நோக்கில் பார்த்தோமானால் சில பிரச்சனைகள் வருகின்றன. அதாவது, நீங்கள் ரன்னிங் செல்லும் போது திடீரெனெ உங்கள் எடை முழுவதும் உங்கள் கால் பகுதிகளை நோக்கி அழுத்தப் படுகின்றன. இதனால் உங்கள் மூட்டுப் பகுதி மெதுமெதுவாக பாதிக்கப்படுகிறது. இது எல்லோருக்கும் அவர்கள் உடல் வலிமை மற்றும் பருமனைப் பொறுத்து சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஏற்படுகிறது. நம் மூட்டுப் பகுதியில் இருக்கும் சில ஜவ்வுப் பகுதிகள் தான் நம் மூட்டுகளை உராய விடாமல் இடையில் நின்று தடுக்கிறது. அந்த ஜவ்வுப் பகுதிகள் பாதிக்கப்படும்போது சாதாரணமாக மூட்டு வலி ஏற்படுகின்றது. "தும்பைப் பிடிக்க எண்ணி வாலை விட்ட கதையாய்" உடலைக் குறைக்க எண்ணி மறுபடியும் உடலைப் பாழ்படுத்தவே ஆரம்பிக்கிறோம், நம்மையும் அறியாமலேயே.

"யோவ். செவனேன்னு ரன்னிங் போய்க்கிட்டு இருக்கேன். நீ என்னமோ ரன்னிங் போறதே தப்புன்றமாதிரி சொல்ற. போற போக்க பாத்தா எல்லாமே தப்புன்னு சொல்லுவ போல? என்னயா நெனச்சுகிட்டு இருக்க உன் மனசுல" என்று சிலர் கோபிக்க வருவது புரிகிறது. ஆனால் என் வாதம் உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் முதலில் சில நாட்கள் நடை பயிற்சியே மேற்கொள்ளவும். கணிசமான அளவு உடல் எடை குறைந்த்த பின்னர் மெதுவாக ரன்னிங் பயிற்சியை எடுத்துக்கொள்ளவும் என்பதே. 

குறிப்பிட்டு சொல்லும் படியாக கால்களுக்கு என்று தனியான உடற்பயிற்சிகள் மிகவும் குறைவே. ஏனென்றால் மற்ற உடற்பயிற்சிகளுடன் கால்களை வலுப்படுத்தும் விடயங்களும் இணைக்கப்பட்டிருப்பதால், கால்களை வலுப்படுத்துவதற்காகப் பிரத்தியேகமாக சில உடற்பயிற்சிகளே இருக்கின்றன. நான் ஏற்கனவே முந்தைய பகுதிகளில் கூறியிருந்தது போல் நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் காற்றில் அமர்ந்திருப்பது நம் கால்கள் மற்றும் மூட்டுப்பகுதிகளை நன்கு வலுப்படுத்தும். கீழ்க்காணும் படத்தைக் காணவும். இதில் ஒரு பெண்மணி, தனக்கும் சுவற்றிற்கும் நடுவிலே ஒரு ரப்பர் பந்தை வைத்துக் கொண்டு அமர்ந்த நிலையில் இருக்கிறார். இதே போல், இந்தப் பந்து இல்லாமல், வெறும் காற்றில் அமர்ந்த நிலையில் இருப்பது தான் ஒரு வித குங்பூ பயிற்சியாக எங்களுக்கு அளிக்கப் படுகிறது. அதே போல், குழந்தை தவழ்வது போலவே, கால் முட்டி தரையில் படமால் நடப்பதும் ஒரு வகை பயிற்சியாகும்.

Image description not specified.

ஆனால் இவற்றைப் போலவே இன்னொரு பயிற்சியும் இருக்கிறது. நம்மில் பலருக்கும் பழக்கமான, வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால், நமக்கு பள்ளி நாட்களில் தண்டனையாகக் கொடுக்கப்பட்ட உடற்பயிற்சி அது. அது தான் தோப்புக் கரணம்... :)

Image description not specified.

சாட்டை படத்தில் சமுத்திரக்கனி சொல்லியிருப்பார், தோப்புக்கரணம் போடுவதால், காதிலுள்ள நரம்புகள் வழியாக மூளை தூண்டப்பட்டு நன்கு வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இதனால் தான் நம் முன்னோர்கள் வகுப்புகளில் நன்றாகப் படிக்காத மாணவர்களைத் தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டனை தருவார்கள் என்று. இது எந்த அளவு உண்மையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதே போன்ற உடற்பயிற்சியே எங்களுக்கு கால்களை வலுப்படுத்தவும் அளிக்கப்படுகின்றது. அதாவது கைகளை நேராக நீட்டிக் கொண்டு, முதுகை வளைக்காமல், முடிந்த வரை தோப்புக்கரணம் போடுவது போல் உட்கார்ந்து எழுவது தான் அந்த உடற்பயிற்சி. கால் தொடைகள் மற்றும் கால் பகுதியை வலுப்படுத்த இந்த உடற்பயிற்சி உதவுகிறது. பள்ளிகூடத்துல தோப்புக்கரணம் போட்டேனோ இல்லையோ, இப்போலாம் தினம் தினம் பிள்ளையார கும்புடுறப்ப தோப்புக்கரணம் போட ஆரம்பிச்சிட்டேன். எல்லாம் ஒரு வேண்டுதல் தான்... ;)

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...