பொன்னம்மாள் பாட்டி
"அய்யனாரப்பா! என் புள்ளைய நீதான் எப்பவும் பாத்துக்கணும். அவனுக்கு எந்த ஒரு நோய் நொடியும் வந்துராம, நல்லபடியா இருக்கணும். அவனுக்கு யாராலையும் எந்த தொல்லையும் வந்துரக் கூடாது. முக்கியமா, அந்த மூணாவது தெருல இருக்குறாளே அந்த முண்டக்கண்ணி, அவ என் மவன் மேல எந்தக் கண்ணும் வச்சுடக்கூடது. கடன்காரி. அவ முழியே சரியில்ல. வேற எந்த ஒரு குத்தம் குறை பண்ணியிருந்தாலும் எம்மகன மன்னிச்சு அவன நல்லபடியா பார்த்துக்கப்பா. அவன் நல்லபடியா வளந்து, பெரிய ஆளாகி, நாலு பேரு மெச்சுற மாதிரி பெரிய உத்தியோகஸ்தனா வரணும். பெரிய கொழாய் சட்டையெல்லாம் மாட்டிக்கிட்டு தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கலீசுல பேசணும். இதையெல்லாம் இந்த சிறுக்கி பார்த்துப்புட்டு தான் கண்ண மூடனும். இதெல்லாம் நீதானப்பா நடத்தி வைக்கணும். இதெல்லாம் நடந்துட்டா, வருஷந்தவராம உன் எல்லைக்கு வந்து, கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்யா சாமி. நீதான் பாத்துக்கணும். நீதான் பாத்துக்கணும்". அய்யனார் காலடியில் இருந்த விபூதியை கை நிறைய எடுத்து நெற்றி முழுக்க இட்டுக்கொண்டாள் வேலம்மாள். தன் மனதில் இருந்த எல்லா வேண்டுதலையும், சரியாகச் சொன்னால் ஒரே ஒரு வேண்டுதலை அய்யனாரின் எல்லையில் அவரையே துணையாய் எண்ணி அவரிடம் ஒப்படைத்துவிட்டாள் வேலம்மாள். முப்பதுகளைக் கடந்த வேலம்மாவிற்கும் அவள் கணவன் ராசைய்யாவிற்கும் உலகம் என்றால் அது அவர்களின் மகன் குமார் தான். வருடந்தவறாது குலதெய்வமான எல்லை காக்கும் அய்யனாருக்கு படையல் வைத்து வழிபடுவது அவர்கள் வழக்கம். இன்றும் அப்படித்தான். எல்லா பூஜைகளையும் முடித்தபின் அய்யனார் காலடி விபூதியை எடுத்துக் கொண்டு மகனுக்கு இட்டுவிட எண்ணினாள். ஆனால், அவள் கண்மூடி வேண்டும் போதே, பக்கத்தில் சுற்றித் திரிந்த தட்டாம் பூச்சியுடன் விளையாடச் சென்றுவிட்டான் 5 வயதேயான குமார்.
"எலேய். ஐயா. என் சீமான். இங்க வாடி என் தங்கம்"
"என்னம்மா?"
"ஐயா ராசா. இங்க கொஞ்சம் வாடி. கொஞ்சம் ஐயனார் துண்ணூறு (விபூதி) வச்சு விடுறேன். அத வச்சுக்கிட்டு போய் அப்பறமா விளையாடுடா என் தங்கம்"
"போம்மா. நான் துண்ணூறுலாம் வேணாம். நான் வரல."
"ராசா. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. சாமி துண்ணூறு வச்சுக்கணும். வேணாம்னுலாம் சொல்லக்கூடாது."
"எனக்கு வேணாம் போம்மா"
"நல்ல புள்ளையில்ல. அம்மா பேச்ச கேப்பியாம். அப்பதான் சாயந்தரம் ஐயன் வரும் போது மிட்டாய் நெறையா வாங்கிட்டு வரும்"
"எனக்கு மிட்டாயெல்லாம் வேணாம் போ. நான் தட்டான் புடிக்க போறேன்"
"ஏய் இங்க பாரு. சாமி பாரு சாமி"
"சாமியெல்லாம் பாத்தாச்சு போ"
"எலேய். இப்போ நான் சொல்றத கேக்கப் போறியா இல்லையாடா?" சற்றே பொறுமை இழந்த வேலம்மாள் அதிகாரத் தொனியில் கூற ஆரம்பித்தாள். வேலம்மாளின் பொறுமை சற்றே எல்லை கடந்திருந்தது. ஆனால் குமாரின் பிடிவாதமோ குறையவில்லை.
"மாட்டேன் போம்மா" என்று குமார் சொல்லவும், கோபத்தில் அவன் முதுகில் ஓர் அடி வைத்தாள். ஐந்து விரலும் கிட்டத்தட்ட பதிந்துவிட, கூக்குரலிட்டான் குமார். அதே நேரம் பொன்னம்மாள் பாட்டியும் அந்த வழி வந்து சேர சரியாக இருந்தது.
பொன்னம்மாள் வேலம்மாளின் தாய். பேரன் அழுவதைக் கண்டு மனம் பதறிய பொன்னம்மாள் குமாரை வாரி அணைத்துக் கொண்டு அவனைச் சமாதானம் செய்யலானாள்.
"ஏ ராசா. ஏ ஐயா. எதுக்குடி அழுகுற? ஆம்பளப்புள்ள அழக்கூடாதுடி என் தங்கம். அழாதைய்யா அழாத. ஆச்சி கேக்குறேன்ல என்னனு சொல்லுயா. சொல்லு"
அழுகையின் நடுவிலே அந்த வார்த்தை குமாரின் வாயிலிருந்து வெளிவந்தது "அம்மா அடிச்சிட்டா ஆச்சி" என்று
"கூறுகெட்ட சிறுக்கி. ஏண்டி புள்ளையபோட்டு இப்படி அடிச்ச?"
"பின்ன என்ன ஆத்தா. அய்யனாரு துண்ணூற வச்சுக்க சொன்னா மாட்டேன்னு அடம் பிடிக்கிறான். வீம்பு எல்லாம் அப்படியே அவுக ஐயன் மாதிரியே. கொஞ்சமும் கொறைச்சலில்ல."
"அடி போடி இவளே. இதுக்கு போய் புள்ளைய அடிச்சிக்கிட்டு இருக்குறா. இங்க கொண்டா அந்த துண்ணூற" என்று வாங்கி நெற்றியில் பெரிய பட்டையை இட்டுக்கொண்டாள் பொன்னம்மாள்.
"அடி ஏன் தங்கம். இதுக்கெல்லாம போய் அழுவாக. வாயா என் ராசா. வா வா வா" என்று குமாரைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.
"சாமி கிட்ட என்னையா கேட்ட?"
"ம்ம்ம். நல்லா படிக்கணும்னு கேட்டேன். ம்ம்ம். அப்பறம்.... ம்ம்ம்ம்.. அப்பறம்.. அதுக்குள்ளே தட்டான் வந்துருச்சு. அத புடிக்க ஓடிட்டேன்... "
"தட்டான் புடிக்க ஓடிட்டியா? என் ராசா. ஹா ஹா ஹா" என்று பொக்கை வாய் தெரிய சிரித்துக் கொண்டே தன் நெற்றியோடு பேரனின் நெற்றியை ஒற்றிக்கொண்டு தலையை அசைத்து பாசத்தைப் பரிமாறுவது போல் சிறிது அய்யனார் விபூதியையும் பரிமாறினாள் பொன்னம்மாள்.
"போய்யா. போய் நல்லா வெளையாடு. போ" என்றாள் பொன்னம்மாள். தட்டானை பிடிக்கவேண்டும் என்ற நினைப்பில் அடி வாங்கியதை மறந்துவிட்டு துள்ளிக் குதித்து ஓட ஆரம்பித்தான் குமார்.
'சில விஷயங்களை இப்படியும் செய்யலாம்' என்று வேலம்மாளுக்கு சொல்லாமல் பார்வையிலேயே சொல்லிக்காட்டினாள் பொன்னம்மாள். புரிந்தது போல் தலையசைத்தாள் வேலம்மாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக