என்னருகே நீயிருந்தால் - பகுதி 2
உன் சோம்பலோடு
சேர்த்து
முறித்துப் போட்டாய்,
என்னுடைய
பத்தொன்பது வருட
பிரம்மச்சரியத்தையும்..!
அடுத்த நாள்
என்ன நடந்ததுன்னு சொல்றதுக்கு முன்னாடி, ஒரு சின்ன முன்னோட்டம்.
நான், செல்வா. படிக்கிறது இன்ஜினியரிங் 2ஆம் வருடம். ஊருல இருக்குற எல்லா அப்பா மாதிரியே, எங்க
அப்பாவும் நான் ஒரு இன்ஜினியர் ஆகணும்னு சொல்லி ஒரு இன்ஜினியரிங் காலேஜுல என்னை சேர்த்து
விட்டாரு. அதுவும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் கோர்ஸ்ல. ஆனா எனக்கோ கம்ப்யூட்டரும்
பிடிக்கல, இன்ஜினியரிங்கும் பிடிக்கல. என்னதான் பேக் பெஞ்ச் ஸ்டுடன்ட் ஆகுற தகுதி எனக்கு
இல்லாம போயிருந்தாலும், பேக் பெஞ்ச்க்கு முன்னாடி உள்ள பெஞ்ச்ல உக்கார்ற தகுதி இருந்துச்சு.
வாழ்க்கை ஏகப்பட்ட சொதப்பல்களோட போய்க்கிட்டு இருந்தது. கூட சில உருப்படாத வெட்டிப்பசங்களும்
சேர்ந்து தொலைய, (அதாங்க பிரண்ட்ஸ்) வாழ்க்கை இன்னும் சூப்பரா சொதப்ப ஆரம்பிச்சது.
அப்போதான் எதிர்பாராம ஒரு நாள் அவளை சந்திக்கவேண்டியதா போயிருச்சு.
அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (?) 9 மணி அளவில், அலாரம்
வைத்தது போல என் அம்மா
என்னை எழுப்பினார்.
"டேய்.
எழுந்திரிடா சீக்கிரம்!" - அம்மா
"என்னம்மா?"
- என்றேன் கண்ணைத் திறக்காமலே.
"எழுந்து
வெளிய வா. சீக்கிரம்"
"காலங்காத்தாலையே
ஏன்மா எழுப்புற? ஒரு 2 மணி நேரம்
கழிச்சு எழுப்புமா"
"காலங்காத்தாலையா?
டேய் கிறுக்கா. மணி 9 ஆச்சு"
"9 தானே
மா ஆகுது. ஒரு 11 மணிக்கு
எழுப்பு மா"
"இப்போ
நீ வருவியா மாட்டியா?" - அம்மாவின்
குரலில் எரிச்சல் சேர்ந்துகொண்டிருந்தது
"வர்றேம்மா!
ஒரு 5 மினிட்ஸ்"
"இப்போ
நீ எழுந்து வரல, மத்தியானம்
உனக்கு சாப்பாடு இருக்காது"
"சோறு
கெடயாதா? அப்போ சொல்லுங்க. என்ன
வேலை செய்யணும். இப்போவே செய்திடுவோம்"
"நீ
ஒரு வேலையும் செய்ய வேண்டாம். அந்த
பொண்ணு எதோ புக் கேக்குறா
பார். அது உங்கிட்ட இருந்தா
குடு"
"எந்த
பொண்ணு?" என்று வடிவேலு ஸ்டைலில்
திரும்பிப் பார்த்தேன். அங்கே அவள் நின்றுகொண்டிருந்தாள்.
அவள் பெயர் 'அபர்ணா'
அபர்ணா.
தேவதையை நான் நேரில் பார்த்திருக்கிறேன்
என்று என் அமாவிடம் சொன்ன
போது, நான் பைத்தியமாகிவிட்டேன் என
என் அம்மா நினைக்கக் காரணமானவள்.பள்ளி செல்லும் காலத்தில்,
பின்னலிடப்பட்ட அவளின் இரட்டை ஜடையும்,
முக பாவத்திற்கேற்ப நடனமாடும் குடை ராட்டின தோடுகளும்,
கோபத்தையும் சந்தோஷத்தையும் காட்டும் கொலுசுகளும், மா நிறத்தையும் மீறி
அவளைச் சிவக்க வைக்கும் வெட்கமும்,
ஆயிரமாயிரம் அர்த்தம் சொல்லும் கண்களும், இளையராஜாவின் சங்கீதத்தோடு சேர்த்து என் மனதில் பதிந்துவிட்ட
ஒன்று.
எங்கள்
வீட்டிற்கு சில வீடுகள் தள்ளி
தான் அவள் வீடு இருக்கிறது.
அவளின் அப்பா தாலுகா அலுவலகத்தில்
வேலை பார்ப்பவர். எங்களுடைய டீ கடைக்கு அடிக்கடி
வருவதால், என் அப்பாவுடன் அவருக்கு
நல்ல பழக்கம் இருந்தது. ஆனால்
அவள் என்னைவிட 1 வயது சிறியவள் என்பதால்,
பள்ளியில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்ததே இல்லை. எனக்கும் கொஞ்சம்
அதிர்ஷ்டம் இருந்தது. தெரிந்தோ தெரியாமலோ என் கல்லூரியிலேயே அவள்
இப்போது சேர்ந்திருந்தாள். ஆனால் அதைவிட பெரிய
அதிர்ஷ்டம் இன்று என்னைத்தேடி அவள்
வந்திருப்பது.
எப்படி
ஆரம்பிப்பது என்று தெரியாமல், அவளைப்பார்த்து
நின்றுகொண்டிருந்தேன். நல்லவேளையாக அவளே ஆரம்பித்தாள்.
"உங்ககிட்ட
லாஸ்ட் இயர் புக் ஒன்னு
இருக்கானு கேட்க வந்தேன்"
"என்ன
புக்"- (அய்யய்யோ. இந்த வருஷத்து புக்கே
எங்க இருக்குனு தெரியாது. பயபுள்ள போன வருஷத்து
புக்க கேக்குறாளே)
"இன்ஜினியரிங்
கிராபிக்ஸ்"
"ஒரு
நிமிஷம். நான் மாடியில போய்
பார்த்துட்டு வர்றேன்"
உடனடியாய்
மாடிக்குப்போய் முதல் வேலையாக என்
போனை எடுத்தேன். (அந்த புக் எப்படி இருக்கும்னு தெரிஞ்ச தானே எடுத்து குடுக்குறதுக்கு. அத கேட்கலாம்னு தான்) அடுத்தடுத்து என் நண்பர்களுக்கெல்லாம் போன்
செய்ய, சோதனைக்கேன்றே ஒருவனும் போனை எடுக்காமல் போக,
கடைசியாய் வினோத் போனை எடுத்தான்.
"ஹலோ
மாமா ஒரு ஹெல்ப் டா"
- நான்
"அதிருக்கட்டும்
டா மாமா. திடீர்னு வசதியாயிட்டியா
என்ன?" - வினோத்
"ஏன்டா
அப்படி கேக்குற"
"இல்ல.
போன்லாம் பன்றியே அதான் கேட்டேன்."
"டே!
வெறுப்பேத்தாதடா. நான் கேக்குறதுக்கு பதில்
சொல்லு. இன்ஜினியரிங் கிராபிக்ஸ் புக் எப்படி இருக்கும்?"
"டே!
என்னடா ஆச்சு உனக்கு? நம்மல்லாம்
எப்போ புக் வச்சு படிச்சு
பாஸ் ஆயிருக்கோம். ஏன்டா இப்டி கெட்டுப்போயிட்ட?
"
"ஏன்
எதுக்குனுலாம் கேக்காதடா. சொல்லு. எப்படி இருக்கும்?"
"எனக்கு
ஞாபகமே வரலையேடா. இந்த செம் ல
அப்படி ஒரு சப்ஜெக்ட் இருக்கா
என்ன?"
"மாமா.
அது லாஸ்ட் இயர் சப்ஜெக்ட்
டா"
"காலைல
எக்ஸ்சாம்க்கு படிக்கிற சப்ஜெக்டையே நாம சாயங்காலம்
மறந்துடுவோம். இதுல லாஸ்ட் இயர்
சப்ஜெக்ட் பத்தி கேக்குறியேடா. மாமா,
திருந்திட்டியா? Arrear க்கு ஏதும் படிக்க
ஆரம்பிச்சிட்டியா?"
"அதெல்லாம்
இல்லடா மாமா. ஜூனியர் ஒருத்தன்
கேக்குறான்டா. நாமதான் படிக்கல. படிக்கிற
பையனுக்காவது ஹெல்ப் பண்ணலாமேன்னு தாண்டா
கேக்குறேன். சொல்டா"
"அவ்ளோ
நல்லவனாடா நீ?"
"மாமா.
கேக்குறான்டா. சொல்டா."
"ஒரு
நிமிஷம் இரு. இன்ஜினியரிங் கிராபிக்ஸ்...."
என்றவாறே மௌனமானான் வினோத். இரு நிமிடங்களுக்குப்
பிறகு,
"மாமா.
அந்த புக் நம்ம கிளாஸ்ல
யார்கிட்டையுமே இருக்காதுடா"
"ஒருத்தர்
கிட்ட கூடவா இருக்காது?"
"ம்ஹும்"
"ஏண்டா?"
"என்ன
ஏண்டா? அதுக்கு காரணமே நீ
தானடா. உனக்கு ஞாபகமில்ல, அந்த
பெரிய சைஸ் ஆரஞ்சு கலர்
புக்?"
மூளைக்குள்
திடீரென ஓர் மின்னல் வெட்டியது.
'பெரிய சைஸ் ஆரஞ்சு கலர்
புக்'. அடக் கடவுளே! போயும் போயும்
அந்த புக்கையா இவள் வந்து கேட்கவேண்டும்.
உள்ளங்கை தானே நெற்றியில் வந்து
மோதிக்கொண்டது.
நீங்க கலக்குங்க பாஸ்...
பதிலளிநீக்கு