ஒரு கருப்பு பெல்ட்..!

வழக்கமான மாலைப்பொழுது. அலுவலகம் முடிந்து எப்போதும் போல் வீட்டிற்கு வந்து உடைகளை மாற்ற எண்ணினேன். நான் வீட்டிற்கு வரவும், அகில் எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. என்னைக் காட்டவேண்டி அகிலைப் படுக்கையிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தார் விக்கி. காலையில் மனமில்லாமல் அலுவலகத்திற்கு என்னை வழியனுப்பியவன், மாலை நான் வீட்டிற்கு வந்ததும் மிகவும் குஷியாகிவிட்டான். விக்கியின் கைகளில் இருந்த அவன், என்னைப் பார்த்ததும் உடனே இறங்கிக்கொண்டு, வாய் நிறைய புன்னகையுடன் தன் கை இரண்டையும் நீட்டியவாறே குதித்துக் குதித்து என்னைப்பிடிக்க ஓடிவந்தான். ஆசையாய் ஓடிவந்தவன் என்னைக் கட்டிக்கொள்வான் என எதிர்பார்த்தேன். ஆனால் அவனோ, அருகில் வந்ததும் நின்றுவிட்டான். நின்றதோடு மட்டுமில்லாமல் என் வலது கையையே பார்த்துக்கொண்டிருந்தான்.


அப்படி என்ன நான் கையில் வைத்திருக்கிறேன் என எனக்கே யோசனை தோன்ற என் வலது கையைப் பார்த்தேன். என் வலது கையில் என் பெல்ட் மட்டும் இருந்தது. "இதையா ஆச்சரியமாகப் பார்க்கிறான்?" என்றெண்ணி "வேணுமா?" என்று அவனைப் பார்த்தவாறே கையில் இருந்த பெல்ட்டை அவன் கைகளுக்கு அருகில் கொண்டு சென்றேன். 


அவ்வளவு தான்! ஒன்றும் இல்லாத அந்த கருப்பு பெல்ட்டை வாங்கிக்கொண்டவன் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனான். அவன் மகிழ்ச்சியால் என்னையும் திக்குமுக்காடச் செய்தான். கண்கள் இரண்டும் மின்ன மின்ன, இதழ்களில் புன்னகை தவழ, தெய்வத்திடம் இருந்து வரம் வாங்கிக்கொள்ளும் பக்தன் போல், இரு கையாலும் என் பெல்ட்டை ஏந்திக்கொண்டு சிரித்துக்கொண்டே இருந்தான். அவன் கைகள் ஏந்தியிருந்த ஒவ்வொரு நிமிடமும் அந்த பெல்ட்டை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். அதனுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அதற்கு ஏதேதோ கதைகள் சொன்னான். சிரித்துக்கொண்டே இருந்தான். ரசித்துக்கொண்டே இருந்தான். 


அகில் சிரித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம், என் உலகம் தனது இயக்கத்தை சிறிது நிறுத்திக்கொள்கிறது. நேரங்கள் ஓடுவதில்லை. காலங்கள் நகர்வதில்லை. பூமி நகர்கிறதா என்று தெரியவில்லை. சூரியன் உதிப்பதும் மறைவதும் கூட நினைவில் நிற்பதில்லை. என் நுரையீரல் கூட சற்று மெதுவாகவே சுவாசிக்கிறது. திடீரென என் மூளைக்குள் இருக்கும் மூன்று நாளைக்கு அப்புறம் முடிக்க வேண்டிய அலுவலக வேலை, ஒரு வருடத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய கம்பியூட்டர் கோர்ஸ், கல்யாண நாள், காது குத்து, திருவிழா, தீர்த்தம் என எல்லாம்........ கிட்டத்தட்ட எல்லாம்.... மறைந்து விடுகிறது. கண்கள் அவன் சிரிப்பை மட்டுமே ரசித்துக்கொண்டிருக்க, இதயம் புன்னகைக்க ஆரம்பிக்கிறது. 'மனமே! எதிர்காலத்திலோ இறந்தகாலத்திலோ கிடந்து தவிக்காதே. நிகழ்காலத்தில் வாழ்க்கையை வாழ்!' என்று புத்தர் எப்போதோ உபதேசித்ததெல்லாம், இத்தனை வருடம் கழித்து இன்று தான் சாத்தியமாகிறது. நிகழ்காலம் என்று ஒன்று இருப்பதே புலன்களுக்கு இப்போதுதான் புலப்படுகிறது. எல்லாம் அவன்(அகில்) ஒருவனால்..!


பெருந்தவம் செய்த முனிவர்களுக்குக் கடவுள்கள் கேட்டதையெல்லாம் வரமளித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. அப்படி என்ன தவம் தான் நான் செய்தேனோ தெரியவில்லை. நான் கேட்காமலே இவ்வளவு பெரிய வரத்தை எனக்களித்திருக்கிறார் கடவுள்! கையில் ஏந்தி, நெஞ்சில் தாங்கி, காலமெல்லாம் கண்ணில் வைத்து இவனைக் காப்பதைவிட, காரியமேதும் எனக்கிருக்கப்போகிறதா இந்தப்பூவுலகில்?

கருத்துகள்

  1. பதில்கள்
    1. தங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றிகள்! நான் அடிக்கடி எழுதாத போதும், என் பதிவில் உங்கள் பின்னூட்டத்தைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பதிவை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1