ஸிகார் பொக்கிஷம் - ஆகாயத்தின் சாவி..!

சமரின் பேச்சை அரசர் நம்ப ஒரு துளியும் தயாராக இல்லை. இருந்தாலும் சமர் சொல்ல ஆரம்பிச்ச விஷயம் பெரிசா இருந்ததால ஒரு கணம் அரசர் யோசிச்சாரு. 

மறுபடியும் ஒரு முறை சமர் கிட்ட திரும்ப கேட்டாரு, "உண்மையை சொல்லு. ஆகாயத்தின் சாவி உன்கிட்டயா இருக்கு?" அப்படின்னு.

சமர், தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு, ஒரு பெருமூச்சை வாங்கிக்கிட்டு, அழுத்தம் திருத்தமா, இன்னொரு முறை சொன்னான்.

"ஆமா. ஆகாயத்தின் சாவி என்கிட்டே தான் இருக்கு!"ன்னு

"உன்ன நான் எப்படி நம்புறது?" அப்படின்னு அரசர் கேட்க, சமர் தன் இடது கையை மூடியிருந்த சட்டை துணியை விலக்கி கையை நீட்டினான். அரசர் அவன் கையை பார்த்த போது, அவரையே அறியாம அவரோட கண் ஆச்சரியத்தில பெருசா விரிய ஆரம்பிச்சது. அதுவரை பழைய கதைகளிலும், மற்றவர்கள் வாயால சொல்லியும் கேள்விப்பட்ட அந்த விஷயத்தை நேர்ல பார்க்கும் போது, துருப அரசருக்கு ஒரு நிமிடம் அவருக்கு மூச்சே நின்னுடும் போல இருந்தது.

சமர் காட்டிய இடது கையில ரொம்ப கருமையான மையால பச்சை குத்தினது மாதிரி அழுத்தமா பதிஞ்சு இருந்தது ஒரு உருவம். தலையின் இரண்டு பக்கமும் காதுகளுக்கு மேல மூணு நாலு ராட்சத கொம்புகளோட, முதுகுக்கு பின்னால நீளமா இரண்டு றெக்கைகளோட, உடல் முழுக்க மீனோட செதில்கள் மாதிரி பெரிய பெரிய கூரான முரட்டு தோலோட இருந்தது அந்த உருவம். கண்கள் ரெண்டும் சிறியதா இருந்தாலும், சிவந்து கூர்மையான பார்வையோட இருந்துச்சு. சமரோட கையில அந்த உருவம் வெறும் அரை ஜான் அளவே இருந்தாலும், அதோட கூறிய பார்வையும் கரிய தோற்றமும், முரட்டு உடல் அமைப்பும், ஏதோ ஒரு இனந்தெரியாத பயத்தை அரசர் யாசிந்தன் மேல ஏற்படுத்துச்சு. வார்த்தைகள் ஒரு சேர வராம, தட்டு தடுமாறிக்கிட்டே பேச ஆரம்பிச்சாரு அரசர். 

"இது... இது... இது வந்து.." அப்படின்னு சொல்லும் போதே அரசருக்கு பலமா மூச்சு வாங்குச்சு.

"ஆமா அரசே. இது அகோரா வே தான்" அப்படின்னு பதில் சொன்னான் சமர்.

"இல்ல. இது உண்மையான அகோராவா இருக்க முடியாது. இருக்க முடியாது." அப்படின்னு தடுமாறிக்கிட்டே பதில் சொன்ன அரசர், நிக்க முடியாம தடுமாறி விழ போனாரு. 

பக்கத்திலேயே காவலா நின்றிருந்த தளபதி சாகர், நொடிப்பொழுதில தாவி அரசரை தாங்கி பிடிச்சிக்கிட்டாரு.

"அரசே. அரசே. உங்களுக்கு என்ன ஆச்சு? என்ன செய்யுதுன்னு சொல்லுங்க?" அப்படின்னு கவலையோடு கேட்டாரு தளபதி.

"அவன் கை. அவன் கை. அந்த அகோரா..." அப்படின்னு வார்த்தையை முழுசா சொல்ல முடியாம தவிச்சாரு அரசர். சமரோட கையில இருந்த அந்த உருவத்தை பாத்து தான் மன்னர் குழம்பி போயிருக்காருன்னு தெரிஞ்சுக்கிட்ட தளபதி சாகர், உடனே பக்கத்தில இருந்த காவலாளியை கூப்பிட்டாரு.

"வீரனே! அவன் கையில இருக்குற அந்த உருவத்தை உடனே அழிச்சிடு" அப்படின்னு உத்தரவு போட்டாரு. 

வீரனும் தளபதியோட உத்தரவுக்கு அடி பணிஞ்சு சமரோட கையில இருக்குற அகோராவோட உருவத்தை அழிக்க முயற்சி செஞ்சான். கையால அழிச்சிடலாம்னு முயற்சி செஞ்சு பார்த்தன். அவனால முடியல. சரி தண்ணீரால அழிக்க முடியும்னு நெனச்சு தண்ணீரை சமரோட கையில ஊத்தி அழிக்க முயற்சி செஞ்சான். அப்பவும் முடியல. வேற என்னவெல்லாமோ செஞ்சு அழிக்கலாம்னு பாத்தான். எதுவும் பயன்படல. கடைசியா நெருப்பால் சூட்டுடலாம்னு பாத்தான். நெருப்பை பாத்து சமர் பயந்து ஓட முயற்சி செய்யவும் பக்கத்தில இருந்த வீரர்கள் அவனை கெட்டியா புடிச்சிக்கிட்டாங்க. ஒரு கொள்ளிக்கட்டையில நெருப்பை எடுத்துட்டு வந்து சமரோட விருப்பமே இல்லாம அவன் கையில கொள்ளிக்கட்டையை வச்சு தேய்ச்சாங்க. அப்போவும் அந்த உருவம் கொஞ்சம் கூட அழியிற மாதிரி இல்ல. கடைசியா, அவன் கையை வெட்டி எறிஞ்சுடுங்கன்னு தளபதி உத்தரவு போட்டாரு. அதைக் கேட்டு ஆவேசமா வீரன் வாளை உயர்த்தும் போது, அரசர் வீரனை தடுத்து நிறுத்திட்டாரு.

"நிறுத்து வீரனே!" அப்படின்னு சொல்லி பேச ஆரம்பிச்ச அரசர் கொஞ்சம் கொஞ்சமா இயல்புக்கு வந்தாரு. ஒரு இரண்டு நிமிட அமைதிக்கு பிறகு மறுபடியும் தொடர்ந்து பேச ஆரம்பிச்சாரு அரசர்.

"அவன் கையில இருக்குற அந்த உருவம் அகோராவோட உருவம். அது நாம என்ன செஞ்சாலும் அழியவே அழியாது" அப்படின்னாரு.

அது வரை தன்னை தாங்கி பிடிச்சிருந்த தளபதி சாகரை விட்டு, அரசர் தானாகவே நடந்து வந்து சமரை பார்த்தாரு. ஆரம்பத்தில சமர் மேல கோவத்தோட அந்த பலி மேடைக்கு அவர் வந்திருந்தாலும், இப்போ சமரை பார்க்கும் போது பெரும் குழப்பம் தான் மிஞ்சியிருக்கு அரசருக்கு. 'இவன் உலத்திலேயே மிகப்பெரிய புத்திசாலியா? இல்ல உலகத்திலையே வடிகட்டி தேடின முட்டாளா?' அப்படின்னு தனக்கு தானே நெனச்சுக்கிட்டாரு. ஒரு பத்து நிமிடம் எதுவுமே பேசாம மௌனமா சமரை பாத்துக்கிட்டு இருந்த அரசர், கடைசியா தளபதி சாகர் பக்கம் திரும்பினார்.

"தளபதி! ஸிகார் பொக்கிஷத்துக்கு இவனுக்கு தான் வழி தெரியும். இவனை கூட்டிட்டு அரசவைக்கு வாங்க" அப்படின்னு உத்தரவு போட்டாரு.

தளபதிக்கோ பயங்கர ஆச்சரியம். அதுக்கும் மேல அதி பயங்கர குழப்பம்.

"அரசே என்ன சொல்றிங்க? இவன் பேச்சை நம்புறீங்களா? இவன் நமக்கு ஸிகார் பொக்கிஷத்துக்கு வழி காட்டுவான்னு நினைக்கிறீங்களா? இவன் நம்மை ஏமாத்தி தப்பிச்சிப்போக தான் முயற்சிப்பான். இது உங்களுக்கு தெரியாததா? இருந்தும் ஏன் இவன நம்புறீங்க?" அப்படின்னு குழப்பத்தோடு கேட்டாரு.

"ஏன்னா இவன் கையில தான் அகோராவோட உருவம் இருக்கு" அப்படின்னு பதில் சொன்னாரு அரசர்.

"அந்த அகோராவோட உருவத்தை வச்சு எப்படி நம்ப முடியும் இவனை? அதோட ஏதோ ஆகாயத்தின் சாவின்னு ஏதோ சொன்னானே. அது என்னன்னு அவன் காட்டவே இல்ல. அப்படியே அவன் சொல்றது உண்மையாவே இருந்தாலும், இது தான் அந்த பொக்கிஷத்துக்கு வழின்னு எப்படி நம்புறது? நம்மள ஏமாத்திட்டு அவனே அந்த ஸிகார் பொக்கிஷத்தை எடுத்துட்டு போயிடலாம்னு நெனைக்க மாட்டானா?" அப்படின்னு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே போயிட்டு இருந்தாரு தளபதி சாகர்.

"தளபதி!" அப்படின்னு ஒற்றை வார்த்தையிலே அரசர், தளபதி சாகரோட கேள்விகளையெல்லாம் நிறுத்தினாரு. மன்னர் கோவமாயிட்டாரோன்னு நெனச்ச தளபதியும், அமைதியாய் மௌனம் காத்தார்.

சில நொடிகள் இடைவெளி விட்டு அரசர் தளபதியை பார்த்து சொன்னாரு "ஸிகார் பொக்கிஷத்தோட தேடலின் ஆரம்பம் தான் அகோரா. அந்த அகோரா மிருகம் தான், 'ஆகாயத்தின் சாவி'!" அப்படின்னு அழுத்தம் திருத்தமா சொன்னாரு அரசர்.

அதோட"எவன் ஒருவன் கையில அழியாத அகோராவோட உருவம் இருக்குதோ, அவனால மட்டும் தான் ஸிகாரோட பொக்கிஷத்துக்கான வழியை கண்டு புடிக்க முடியும். அவன் தான் கண்டு புடிச்சாகனும்." அப்படின்னாரு.

"அப்படியே இருந்தாலும், அவன் பொக்கிஷத்தை கண்டு புடிச்சதும் அதை எடுத்துக்கிட்டு தப்பிச்சு ஓட முயற்சிக்க மாட்டானா? அவ்வளவு பெரிய பொக்கிஷத்தை நமக்கு தர அவன் என்ன முட்டாளா?" அப்படின்னு மெல்லிய குரல்ல கேட்டார் தளபதி.

"ஹுஹூம்" அப்படின்னு சிரிச்சிக்கிட்டே தளபதியோட காது கிட்ட வந்து பதில் சொன்னாரு மன்னர் "அவனால பொக்கிஷத்தை கண்டு புடிக்கத்தான் முடியும். தொடவோ, எடுத்துக்கிட்டு ஓடவோ முடியாது. அப்படி ஒரு வேளை தொட்டாலோ, எடுத்துக்கிட்டு ஓட முயற்சி செஞ்சாலோ, அவன் உடனே இறந்துடுவான்" அப்படின்னு.

தளபதிக்கு உள்ளுக்குள்ள தூக்கி வாரி போட்டது. என்னது, பொக்கிஷத்தை தொட்டா இருந்துடுவானா? என தனக்கு தானே கேட்டுக்கிட்டாரு. ஒரு புரியாத குழப்பத்தில் தளபதி அரசரை பார்க்க, ஒரு சின்ன புன்னகையோடு அரசர் சொன்னாரு "ஸிகார் மன்னன் பொக்கிஷத்தை அடையிற பாதையோட துவக்கமே ஆகாயத்தின் சாவின்னு சொன்னேன்ல. அதுக்கு அர்த்தமே, ஸிகார் பொக்கிஷத்தை அடையிற, அடையணும்னு நினைக்கிற எல்லாருமே இறந்து ஆகாயத்துக்கு போயிருவாங்க. ஸிகார் பொக்கிஷத்தை அடையுறதும் மரணத்தை அடையிறதும் ஒன்னு தான். அதான் புதையலோட ஆரம்ப புள்ளிக்கு 'ஆகாயத்தின் சாவி'ன்னு கொடூரமா பேர் வச்சுருக்கான் அந்த ஸிகார் மன்னன்" அப்படின்னு சொல்லிக்கிட்டே பலி மேடையை விட்டு கீழே இறங்கி நடக்க ஆரம்பிச்சாரு மன்னர். மன்னர் சொன்னதை கேட்டு தளபதி சாகருக்கு தொண்டையெல்லாம் வறண்டு போன மாதிரி இருந்தது. மன்னர் சொன்னதெல்லாம் கேட்டு உறைஞ்சு போயிருந்த தளபதி, மன்னர் பலி மேடையை விட்டு கீழே இறங்கி போறதை பாத்து திடீர்னு சுயநினைவுக்கு வந்தவரா பலி மேடையை விட்டு கீழே வேகமா இறங்கி ஓடினார்.

"ஆனா மன்னா. அவன் ஒரு வேளை அந்த புதையலையே தேடாம இருந்துடான்னா?" அப்படின்னு கேட்டாரு.

அதுக்கு மன்னரோ, "அது நடக்காது. ஏன்னா, அவன் புதையலை இன்னும் ஒரு வருஷ காலத்துக்குள்ள கண்டு புடிக்கலன்னா, அந்த அகோரா அவனோட ஆன்மாவை கொஞ்சம் கொஞ்சமா கடிச்சு சாப்பிட்டிடும். அது புதையலை கண்டு புடிச்சி இறக்கிறதை விட மோசமான மரணமா இருக்கும்" அப்படின்னு சிரிச்சிக்கிட்டே பதில் சொன்னாரு. இந்த பதிலை கேட்டு தளபதிக்கு மயக்கமே வரும் போல இருந்தது. அவரோட குழப்பம் மேலும் மேலும் அதிகமாயிட்டே போனது. 

"மன்னா! அப்படின்னா, புதையல் எடுத்தாலும் எடுக்கலன்னாலும் தன் உயிர் போகும்னு தெரிஞ்சே தான் இவன் அந்த பொக்கிஷத்தை எடுக்க முயற்சி செய்யுறானா?" அப்படின்னு அப்பாவியா கேட்டாரு.

"ஆம் தளபதி." அப்படின்னு சொன்ன அரசர், ஒரு பெருமூச்சை விட்டு, "உலகிலே இருக்கிற எத்தனையோ பைத்தியக்காரங்கள்ல இவனும் ஒருத்தன்" அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்த படை வீரர்களை பாத்து பேச ஆரம்பிச்சாரு.. 

"வீரர்களே. சமரை என்னோட அரண்மனைக்கு இழுத்துட்டு வாங்க" அப்படின்னு உத்தரவிட்டுட்டு தன்னோட ரத்தத்தில் ஏறி மன்னர் அரண்மனைக்கு போனாரு. தன்னை சுத்தி என்ன நடந்துகிட்டு இருக்கு, தான் கேள்வி படறதெல்லாம் உண்மையா, இல்லை இது எல்லாம் கனவா, அப்படின்னு தன்னை சுத்தி நடக்கிற எதையுமே நம்ப முடியாம பாத்துக்கிட்டு இருந்தாரு தளபதி சமர். இவ்வளவு பெரிய பிரச்சனையில் போய் தலையை குடுத்த சமரோ, ஒண்ணுமே நடக்காதது போல, வீரர்களின் குதிரை பின்னாடி ஓடிட்டு இருந்தான்.


- பொக்கிஷம் தேடப்படும்.


-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1