ஸிகார் பொக்கிஷம் - தூக்கு தண்டனை குற்றவாளி..!
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால இந்து மகா சமுத்திரத்தில இருந்த ஆயிரக்கணக்கான தீவுகள்ல மிக முக்கியமான தீவா கருதப்பட்டது தான் யாசிந்தன் மன்னன் ஆட்சி செய்யுற துருப தேசம். தலைமுறை தலைமுறையா நல்லாட்சியையும் மக்களின் நன்மையையும் மட்டுமே மனசில வச்சிக்கிட்டு ஆட்சி செஞ்சுகிட்டு வர்ற அரச குடும்பம் தான், யாசிந்தன் மன்னனுடையது. கண்ணுக்கெட்டுற தூரம் வரை இருக்குற கடலும், இயற்கை வளம் நிறைந்த அந்த தீவும் தான், துருப நாட்டு மக்கள் கட்டிக் காப்பாத்திட்டு வந்த சொத்து. வழி வழியா வந்த முன்னோர்களோட கடல் வாணிப திறமையினாலையும், மூச்சடக்கி கடலுக்குள்ள இறங்கி முத்து பவளம் போன்ற பல ரத்தினங்களை சேகரிச்சு விற்பதனாலையும் பல நாடுகளில் இருந்தும் மக்கள் துருப தேசத்தை நோக்கி எப்போதும் வந்துக்கிட்டே இருப்பாங்க. துருப தேசமும் எப்போவுமே ஒரு பெரிய நகரம் மாதிரி தொழில் வளம் மிகுந்த இடமா இருந்துச்சு. தீவின் நடுவுல பிரம்மாண்டமா உயர்ந்து நிக்கிற மரங்கள் நிறைந்த கோசாரமலை பலவிதமான உயிரினங்களும் வாழ வழிவகை செஞ்சு வச்சிருந்தது. தீவு முழுவதும் பரவிக்கிடந்த தென்னை மரங்களும், வாழை மரங்களும், பலவகையான செடி கொடிகளும் அந்த தீவை எப்போதும் பச்சை பசேல்னு வச்சிருந்தது. இயற்கை அன்னையின் ஆதரவாலையும், நாட்டு மக்களின் கடுமையான உழைப்பாலையும், நல்ல அரசர்களின் ஆட்சியாலையும் ஒரு பூலோக சொர்க்கம் மாதிரி இருந்தது துருப தேசம்.
அந்த ஊர்ல மக்கள் கூடுற முக்கியமான இடத்திற்கு மத்தியில இருந்தது அந்த பலி மண்டபம். சுமார் இருபது அடிகளுக்கு மேலாக நீளம் இருக்குற அந்த பலி மேடையின் கடைசியில நாலு படிகள் இருந்துச்சு. படிகளின் மேல ஏறி பலிமண்டப மேடையை அடைஞ்சா, மிகப்பெரிய மரத்தாலான கழுவேற்றும் கட்டை ஒன்று இருந்துச்சு. ஒரு ஓரத்திலே மரத்தாலான பீப்பாயும் இருந்துச்சு. வழக்கமா மிகக் கொடுமையான குற்றங்கள் செஞ்சவங்களுக்கு தண்டனை குடுக்குறதுக்காக அந்த மேடை உருவாக்கப்பட்டு இருந்துச்சு. ஊருக்கு மத்தியில அமைஞ்சிருக்க காரணம், மக்கள் எல்லாரும் அங்க கொடுக்கப்படற தண்டனையை பார்க்கணும், மறுபடியும் இது மாதிரி குற்றம் செய்ய நினைக்கிற குற்றவாளிகளுக்கு பயம் வரணும்ங்கிற அரசரின் எண்ணம் தான். பெரும்பாலும் பெரும் குற்றம் செஞ்சவங்கள தூக்கிலிடும் வழக்கம் இருந்ததால, கழுமரக் கட்டையில் சில எலும்புக்கூடுகள் எப்போவுமே தொங்கிக்கிட்டு இருக்கும். அன்னைக்கும் ஒரு குற்றவாளிக்கு தண்டனை நிறைவேத்துறதுக்காக அந்த பலிமேடை காத்துக்கிட்டு இருந்துச்சு. ஆனா வழக்கமாக நடக்குற மாதிரி, அன்னைக்கி மாட்டிக்கிட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கிடையாது. அதுக்கு பதிலா சிரச்சேதம் செய்யச் சொல்லி அரசர் உத்தரவு கொடுத்திருந்தாரு. அதுவும் தலை கீழாக தொங்க விட்டு சிரச்சேதம் செய்யணும்னு மன்னரே விரும்பி சொல்லியிருந்தாரு. மன்னர் மட்டும் இல்லாம, அந்த ஊர் மக்களும் அன்னைக்கி கொடுக்க இருக்குற தண்டனையை காண ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. அதனால அந்த பலி கொடுக்குற இடமே திருவிழா மாதிரி கூட்டமா இருந்துச்சு. எல்லாரும் ரொம்ப ஆர்வமா தண்டனை குடுக்குறத பார்க்க வந்துருந்தாங்க.
அங்க இருந்த எல்லார் மனசிலையும் அந்த குற்றவாளி மேல அவ்வளவு கோவம் இருந்தது. அதனால நிறைவேற்றப்படப்போற தண்டனையை பார்த்து சந்தோஷப்பட சிலர் வந்திருந்தாங்க. கூட்டத்தில இருந்த வேறு சிலரோ "சிரச்சேதம் செய்யுறது கூட எனக்கு அவ்வளவு திருப்தியா இல்ல, இவனை என் கையில விடுங்க. அவன் உடம்பை நசுக்கி பிழிஞ்சே கொன்னு போட்டுடறேன்" அப்படின்னு கோவமா தங்களோட கைகளை முறுக்கிக்கிட்டு நின்னுகிட்டு இருந்தாங்க. இன்னும் சிலரோ, கல்லால அடிச்சு கொல்லணும்னு கூச்சல் போட்டுக்கிட்டு இருந்தாங்க. எல்லாருக்கும் அவ்வளவு ஆத்திரம் இருந்தது. அப்படி ஊர் மக்களோட ஆத்திரத்தையும், மன்னரோட கோபத்தையும் சம்பாதிச்ச அந்த குற்றவாளியோ தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாத அளவுக்கு மயக்கத்துல தலைகீழா அந்த கழுமரத்துல தொங்கிக்கிட்டு இருந்தான். அப்படி மன்னரோட அன்புக்கும் (?!), ஊர் மக்களோட பாசத்துக்கும் (?!) பாத்திரமா இருந்த அந்த குற்றவாளியோட பேரு, 'சமர்'!
மக்களின் சலசலப்புக்கு நடுவுல ஒரு பெரிய ஆரவாரம் தொடங்குச்சு. திடீர்னு மக்கள் கூட்டத்தை விலக்கிக்கிட்டு பல போர் வீரர்கள் கூட்டம் கூட்டமா அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தாங்க. வந்த வீரர்கள் வேகமா செயல்பட்டு அந்த இடத்துல இருந்த கூட்டத்தை விலக்க ஆரம்பிச்சாங்க. வீரர்கள் கூட்டத்தை விலக்க விலக்க, பின்னால படை தளபதிகள் வரிசையா குதிரையில வர ஆரம்பிச்சாங்க. படைத்தளபதிகளின் குதிரைகளுக்கு நடுவுல ஒரு சிறிய ரதம் வந்துட்டு இருந்துச்சு. அந்த ரதத்தை பாதுகாக்கிற மாதிரி முன்னும் பின்னும் படை தளபதிகள் சூழ்ந்து வந்துக்கிட்டு இருந்தாங்க. இந்நேரம் மக்கள் கூட்டம் அமைதியாக ஆரம்பிச்சுருந்தது.
தளபதிகள் தங்கள் குதிரையில பலிமேடை அருகிலே வந்ததும் நின்னுட்டாங்க. நடுவுல வந்த ரதம் மட்டும் கொஞ்சம் படை தளபதிகளின் குதிரைக்கு முன்னால வந்து நின்னுச்சு. ரதம் நின்னதுமே இரு வீரர்கள் வேகமா ஓடி வந்து ரதத்தோட கதவை திறந்தாங்க. அவங்க கதவை திறந்ததும் உள்ளே இருந்து ரத்தினங்கள் பொருத்திய சிவப்பு நிற ஆடையில, கம்பீரமான தோற்றத்தில வெளிப்பட்டார், துருப ராஜ்ஜியத்தோட பேரரசர் யாசிந்தன்!
அரசரோட வருகையை அறியாம இன்னும் மயக்கமாவே தொங்கிக்கிட்டு இருந்தான், சமர். குற்றவாளிகளை பலியிடுற வீரனை மன்னர் யாசிந்தன் ஒரு ஓரப்பார்வை பார்க்க, உடனே அவன் வேகமாக பலி மேடையில ஏற ஆரம்பிச்சான். மேடையோட ஒரு பக்கத்துல இருந்த மர பீப்பாயில இருந்து தண்ணியை மோர்ந்து சமரோட முகத்தில வேகமா அடிச்சான். வீரன் மாறி மாறி தண்ணியை சமரோட முகத்தில அடிக்க, கொஞ்சம் கொஞ்சமா சமர் சுய நினைவுக்கு வர ஆரம்பிச்சான்.
சளப். சளப்ன்ற சத்தம் வீரன் தண்ணிய ஊத்த ஊத்த வந்துச்சு.
தண்ணியோட தாக்கம் தாங்காம தலையை ரெண்டு மூணு முறை சிலுப்பிக்கிட்டே சமர் பேச ஆரம்பிச்சான்.
"யாருப்பா அது ரொம்ப நேரம் மூஞ்சியிலையே தண்ணி ஊத்துறது? கொஞ்சம் உடம்புக்கும் ஊத்துனேனா நான் கொஞ்சம் குளிச்சுக்குவேன்ல. குளிச்சு வேற 3 மாசம் ஆகுது."
சமரோட நக்கலான பேச்சை கேட்டு வீரன் முறைக்க ஆரம்பிச்சான். இருந்தும் வீரனை பார்த்து சமர் தொடர்ந்து பேச ஆரம்பிச்சான்.
"ஓ! நீயா. ரொம்ப நல்லா தண்ணிய ஊத்துற. இதுக்குன்னு தனியா உனக்கு சம்பளம் தரங்களா?"
ம்ம்ம்ம் என வீரன் கர்ஜித்தவாறே அரசரை பார்க்க சொல்ல, சமர் தனக்கு எதிர்க்க நின்னுக்கிட்டு இருந்த அரசரை பார்க்க ஆரம்பிச்சான். அதோட தன் சேட்டையையும் ஆரம்பிச்சான்.
"துருப நாட்டின் பேரரசருக்கு என் வணக்கங்கள்! எப்படி இருக்கீங்க? உங்கள பத்தி நெறய கேள்விப்பட்டிருக்கேன். துருப நாட்டை நீங்க ரொம்ப சிறப்பா நேர் வழியில ஆட்சி செய்யுறீங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா இங்க பாருங்க. எல்லாரும் தலை கீழாக நிக்கிறாங்க" அப்படின்னு சமர் சொல்ல, மன்னர் ஹும்ன்ற ஒற்றை வார்த்தையோட நிறுத்திக்கிட்டாரு.
மன்னருக்கு அருகிலே நின்னுக்கிட்டு இருந்த தலைமை தளபதி சாகர் பேச ஆரம்பிச்சாரு.
"நாங்க தலை கீழ இல்ல. நீ தான் தலை கீழ தொங்கிக்கிட்டு இருக்க" அப்டின்னாரு.
ஒரு நிமிஷம் தன் தலையை குனிஞ்சு பார்த்தான் சமர். தன் கால் கழுமரத்தோட கட்டப்பட்டிருக்கிறத பாத்துட்டு திரும்பவும் ஆரம்பிச்சான்.
"ஆமா. நான் தான் தலைகீழா தொங்கிக்கிட்டு இருக்கேன். என்ன செய்யுறது, உங்க ஆளுங்க அடிச்ச அடி அப்படி. ஏடாகூடமா அடிச்சு என் மூளைய கொளப்பிட்டாங்க. அதனால தான் நான் தலைகீழா இருக்கேனா, இல்ல நீங்க தலைகீழா இருக்கீங்களாண்ணே தெரியல."
"உன்ன குழப்புறத விட, உன் தலையை பிளந்து உன் மூளையை கையால எடுத்து, அத நசுக்கி கொல்லணும்ன்றது தான் எங்க ஆசை." அப்டின்னாரு படை தளபதி.
"ஆகா. என்ன ஒரு நல்ல எண்ணம். தலைமை படை தளபதினா இப்படி தான் இருக்கணும். அப்பறம் என்ன. உங்க ஆசைய நிறைவேத்திக்க வேண்டியது தானே. இன்னும் ஏன் காத்துக்கிட்டு இருக்கீங்க?" அப்படின்னு திரும்பவும் துடுக்கா பேசுனான் சமர்.
இடுப்பில சொருகி வச்சுருக்கிற தன்னோட போர் வாளை எடுத்து வேகமா பலி மேடை ஏறி போய், இடது கையால சமரோட தலை முடியை இறுக்கி பிடிச்சிக்கிட்டு, வலது கையை வாளோட உயர்த்தி, அரசரை நோக்கி "உத்தரவிடுங்கள் மன்னா. இப்பொழுதே இவன் தலையை இப்போதே வெட்டி கழுகுகளுக்கும் பருந்துகளுக்கும் இரையாக்கிவிடுறேன்" என கர்ஜிக்க ஆரம்பிச்சாரு தளபதி. சமரும் தளபதியோட இந்த எதிர்பாராத செயலால பயந்து போய் உயிர் பயத்துல கண்ணை இறுக மூடிக்கிட்டான்.
"கொஞ்சம் பொறுங்க தளபதி. அவசரப்படாதீங்க. இவர் நமக்கு ரொம்ப வேண்டியவர். கொஞ்சம் பொறுமையா பேசுங்க" அப்படின்னு சொல்லிக்கிட்டே மெதுவா அந்த மேடையை நோக்கி வர ஆரம்பிச்சாரு அரசர்.
"ம்ம்ம்ம்ம். சமர். இவரு இந்த நாட்டுக்கு எவ்வளவு பெரிய உதவியெல்லாம் செஞ்சுருக்காரு தெரியுமா தளபதி?" அப்படின்னு சொல்லிக்கிட்டே அரசர் சமர் கிட்ட வந்து நின்னாரு.
"உதவி செய்யுறது தான் என் ரத்தத்திலையே ஊறிப் போன ஒன்னாச்சே. ஆனா நீங்க எந்த உதவிய சொல்றிங்கன்னு தான் புரியல" அப்படின்னு சொன்னான் சமர்.
"ஒண்ணா ரெண்டா. நெறைய இருக்கே. அமைச்சரே!" அப்படின்னு தன் பக்கத்துல இருந்த அமைச்சரை கூப்பிட்டாரு அரசர். அரசர் கூப்பிட்டதும், அமைச்சர் முன்னாடி வந்து நின்னாரு.
"சமர் நம்ம நாட்டுக்கு செஞ்ச நல்ல விஷயங்கள் எல்லாத்தையும், கொஞ்சம் விலாவாரியா படிச்சு சொல்றீங்களா?" அப்டின்னாரு அரசர்.
"உத்தரவு மன்னா!" என்ற அமைச்சர் தன் கையில இருந்த ஒரு மடலை எடுத்து படிக்க ஆரம்பிச்சாரு. அதுல ஒரு பெரிய பட்டியலே இருந்துச்சு.
"இதுவரை சமர் என்கிற இந்த கடல் கொள்ளையனால், துருப தேசமும், துருப தேசத்து மன்னர் யாசிந்தன் அவர்களும் அடைந்த பாதிப்புகள் பின்வருமாறு.
- பொய்யான அடையாளங்களுடன் நாட்டிற்குள் நுழைந்தது
- ஆள் மாறாட்டம் செய்து அரச மாளிகைக்குள் நுழைந்தது.
- அரச சிறைச்சாலைக்கு வெடி வைத்து கைதிகளை தப்பிக்க வைத்தது.
- போர் வீரர்களை கைதிகளை நோக்கி திசை திருப்பிவிட்டு, அரசரின் குடும்ப சொத்தான நவரத்தின மாலையை திருடியது.
- கைது செய்ய வந்த வீரர்களிடமிருந்து தப்பிக்க அரச அரண்மனைக்கு நெருப்பு வைத்தது.
- தப்பித்த கைதிகளுடன் இணைந்து நாட்டில் கலவரத்தை தூண்டியது. கணக்கிலடங்காத பொருட்சேதங்களை விளைவித்தது.
- தன்னைப் பின்தொடராமல் இருக்க, மன்னர் ஆணையிட்டதாக ஏமாற்றி, நாட்டின் போர்வீரர்களை வைத்தே அரச கப்பல்களை தீக்கு இரையாக்கியது.
மேற்கூறிய இத்தகைய குற்றங்களால் துருப நாட்டிற்கும், துருப நாட்டின் மக்களுக்கும் ஏராளமான பொருள்சேதமும், இழப்பும் ஏற்பட்டது. நேர்ந்த இழப்புகளை சரி செய்ய அரச கொண்ட முயற்சியால், அரச கஜானா கையிருப்பு பத்தில் ஒரு பங்காக குறைந்தது. நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய இந்த இழப்புகள் எல்லாம் ஒரே ஒரு தனிநபரால் இந்த நாட்டிற்கு நிகழ்ந்திருக்கிறது. இத்தகைய அதிபயங்கர செயல்களை நிகழ்த்திய குற்றவாளியின் பெயர், சமர் என்று அறியப்படுகிறது. முற்றும்" அப்படின்னு முடிச்சாரு அமைச்சர்.
அமைச்சர் வாசிச்சு முடிச்சதும் மன்னர் சிரிச்சுக்கிட்டே சமர் கிட்ட வந்தாரு.
"நான் எத்தனையோ பெரிய போர்கள் செஞ்சப்ப கூட என் மக்களுக்கு எந்த பாதிப்பும் வரல. என் கஜானாவும் பாதி கூட காலி ஆகல. அப்படி இருக்குற என் நாட்டுக்குள்ள, ஒரே ஒரு நாள் இரவு வந்துட்டு, என் நாடு, நகரம், அரண்மனை, கப்பல், சிறைச்சாலைன்னு எல்லாத்தையும் சேதப்படுத்தி, ரெண்டு வருஷமா எங்க எல்லாருக்கும் கஷ்டத்தை அன்பளிப்பா அளிச்சுட்டு, என் கஜானாவையும் காலிபண்ணிட்டு போன உன்னோட உதவி ரொம்ப பெரிய உதவி இல்லையா சமர்? அப்படி உதவி பண்ண உன்னை கவனிக்காம விட்டா அது தப்பில்லையா? சொல்லு சமர்" அப்படின்னு ஒரு கூர்மையான கோவத்தோட பார்வையாலேயே குத்தி கிழிக்கிற மாதிரி சமரை பார்த்தாரு மன்னர்.
"ஆங். புரியுது. புரியுது. உங்க அன்பு எனக்கு ரொம்ப நல்லாவே புரியுது. இவ்வளவு அன்பு வச்சுருக்குற நீங்க உங்க அன்புக்கு பாத்திரமா தங்கம், வைரம், முத்து, மாணிக்கம் இந்த மாதிரி ஏதாவது பரிசு கொடுக்கலாமே" அப்படின்னு கொஞ்சம் கூட நக்கல் குறையாம பதில் சொன்னான் சமர்.
இவன் சரிப்பட்டு வரமாட்டேன்னு நெனச்ச அரசர் தன் பார்வையாலேயே, "இவன கொஞ்சம் கவனி" அப்படிங்கிற மாதிரி தளபதி சாகரை பார்த்தார் அரசர். அரசரோட கண் பார்வையை புரிஞ்சுகிட்டு உடனே களத்திலே எறங்குனாரு தளபதி. மன்னரும் அந்த எடத்துல இருந்து கொஞ்சம் விலகி நிக்க ஆரம்பிச்சார்.
"உனக்கு சிரச்சேதம் எல்லாம் இல்ல. உன் உடம்ப கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம துண்டு துண்டா வெட்டி கடலுக்கு மேல தெரியிற பருந்துருக்களுக்கு உணவா போடப்போறேன். அதுக்கு முன்னாடி சில பரிசையும் நான் உனக்கு தர்றேன்" அப்படின்னு சொல்லிக்கிட்டே சமரை அடிக்க ஆரம்பிச்சாரு தளபதி. சமரோட தலையை காலைல உதைச்சும், அவனோட வயித்துல பல முறை தன் கையால குத்தியும் தன்னோட ஆத்திரத்தை கொஞ்சம் தணிச்சுக்கிட்டாரு. சுத்தியிருந்த மக்களும், சமர் அடிவாங்க அடிவாங்க சந்தோஷத்துல கூச்சலிட்டாங்க. சமரோ உயிர் போற அளவுக்கு இருந்த வலியால ஐயோ அம்மான்னு அனத்திக்கிட்டு இருந்தான். கொஞ்ச நேரம் கழிச்சு அடிச்சது போதும்னு அரசரே தன் கையை தூக்கி தளபதியை நிறுத்தினாரு. கடைசியா அரசர் சமர் கிட்ட வந்து நின்னாரு.
"உனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் தரேன். உன்னை நான் ஏன் கொல்லாம விடணும்னு ஒரே ஒரு காரணம் சொல்லு. காரணம் சரியா இருந்தா உன்னை நான் விட்டுடறேன்" அப்டின்னாரு அரசர்.
"என்னை கொல்லாம விட்டீங்கன்னா அதுக்கு பதிலா உங்களுக்கு நான் நெறய பொற்காசுகள் தருவேன்" அப்டின்னான் சமர்.
"ஹும். நெறையனா, எவ்வளவு? ஒரு ராத்திரியில என் நாட்டை அழிச்சியே, அதை ஈடுகட்டுற அளவுக்கு பொற்காசுகள் தருவியா?" அப்டின்னாரு அரசர்.
"அந்த பொருட்சேதத்துக்கு ஈடான பொற்காசுகள் மட்டும் இல்ல. அதுக்கு மேலையே தர்றேன்." அப்டின்னான் சமர்.
"அவ்வளவு பொற்காசுகளை தர்ற அளவுக்கு உன்கிட்ட என்ன இருக்கு?" அப்டின்னாரு அரசர்.
கொஞ்சம் தன் பேச்சை நிறுத்திக்கிட்டு குரலை கொஞ்சம் மெதுவாக்கி அரசர் கிட்ட "என்கிட்டே ஸிகார் மன்னனோட புதையலுக்கான வழி இருக்கு" அப்படின்னு சொன்னான் சமர்.
அது வரை முகத்தை கூர்மையா வச்சுக்கிட்டு சமர் கிட்ட நின்னு பேசிட்டு இருந்த அரசர், ஒரு ரெண்டு அடி பின்னாடி போனார். ஒரு ஒரு நிமிஷம் எதுவும் பேசமா இருந்த அரசர், மெதுவா ஒரு புன்சிரிப்பை உதிர்த்தாரு. கொஞ்ச நேரத்துல அதே புன்சிரிப்பு பெரிய அரக்க சிரிப்பா மாறுச்சு.
"ஹ்ஹாஹ்ஹா! ஹ்ஹாஹ்ஹா! ஹ்ஹாஹ்ஹா! ஹ்ஹாஹ்ஹா! ஹ்ஹாஹ்ஹா! ஸிகார் பொக்கிஷத்துக்கு உனக்கு வழி தெரியுமா? ஹ்ஹாஹ்ஹா! நல்ல நகைச்சுவை! நல்ல நகைச்சுவை!" அப்படின்னு சொல்லிட்டே அரசர் மற்ற போர் வீரர்களையும், ஊர் மக்களையும் பார்த்தாரு. அவங்களும் அரசரை போலவே சிரிக்க ஆரம்பிச்சாங்க.
அரசரும் இதுக்கு மேல பேச ஒன்னும் இல்ல அப்படிங்கிற மாதிரி மெதுவா பலிமேடையை விட்டு நகர ஆரம்பிச்சாரு. தளபதியோ கோபமா தன் வாளை உயர்த்தி, "இனிமேலும் உன் பொய்யை நாங்க நம்ப தயாரா இல்ல. இந்த பூமியை விட்டு, வானுலகம் போறதுக்கு தயாராகு" அப்படின்னு கத்திகிட்டே சமரை வெட்டப்போனாரு.
தாங்க முடியாத உயிர் பயத்துலையும் கூட சமர் அடி வயித்தில இருந்து கத்தினான் "ஆகாயத்தின் சாவி என்கிட்டே தான் இருக்கு" அப்படின்னு.
அதைக் கேட்டதும், அரசர் உடனே சமர் பக்கம் திரும்பினாரு. அரசரின் முகம் ஒரு குழப்பமான ஆச்சரியத்துல இருக்குறத அங்க இருந்த எல்லோராலையும் உணர முடிஞ்சது. அரசர் திரும்பியதை பார்த்த தளபதியும், ஓங்கிய வாளை கீழே இறக்கினாரு.
பலி மேடையை விட்டு விலகி போயிருந்த அரசர், திரும்ப பலி மேடையை நோக்கி மெதுவா வந்தாரு. ஒரு நம்பிக்கை இல்லாத மெல்லிய குரல்ல, அரசர் சமரை பாத்து "நீ இப்போ என்ன சொன்ன? அதை திரும்ப சொல்லு" அப்படின்னு கேட்டாரு.
சமர், தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு, ஒரு பெருமூச்சை வாங்கிக்கிட்டு, அழுத்தம் திருத்தமா, இன்னொரு முறை சொன்னான்.
"ஆகாயத்தின் சாவி என்கிட்டே தான் இருக்கு!"
-பொக்கிஷம் தேடப்படும்!
-செல்லா
கருத்துகள்
கருத்துரையிடுக