ஸிகார் பொக்கிஷம் - தேடல் ஆரம்பம்..!

முதன் முதல்ல மனுஷன் இந்த பூமியில தோன்றி சுமார் 70 லட்சம் வருஷங்கள் ஆயிருச்சு. ஆரம்பத்துல காடு, மேடு, மலைகள்ல  வாழ்ந்துகிட்டு இருந்த மனுஷன், தன்னை சுத்தி நடக்குற ஒவ்வொரு விஷயத்தை பாத்தும் பயந்துகிட்டே இருந்தான். இடி இடிச்சாலோ, மின்னல் வெட்டினாலோ, மழை வெள்ளம் வந்தாலோ, காடு பத்தி எரிஞ்சாலோ, இல்ல ஏதாவது மிருகம் தன்னை துரத்தினாலோ, மனுஷன் பயந்து ஓடிக்கிட்டே இருந்தான். அவன் பயப்படறதுக்கு அவனை சுத்தி பல விஷயங்கள் அப்போ இருந்துச்சு. தன்னை காப்பாத்திக்க தன்னால என்ன செய்யமுடியுமோ அதெல்லாம் மனுஷன் செய்ய ஆரம்பிச்சான். மத்த மிருகங்கள் எப்படி ஆபத்து நேரத்துல தன்னை பாதுகாத்துக்குதுங்கன்னு பார்த்து அதெல்லாம் செய்ய ஆரம்பிச்சான். மழை வெயில்ல இருந்து தப்பிக்க குகைகள்ல வாழ ஆரம்பிச்சான். மிருகங்களோட தோலை எடுத்து ஆடையா போர்த்திக்கிட்டான். பயமுறுத்துனா பயந்து ஓடக்கூடிய மிருகங்களை சத்தம் போட்டு பயமுறுத்துனான். தன்னை விட பெரிய மிருகங்களை கூர்மையான கற்களை ஆயுதங்களா பயன்படுத்தி விரட்டினான். தன்னால சமாளிக்க முடியாத மிருகங்களை மத்த மனுஷங்களோட சேர்ந்து கூட்டா எதிர்க்க ஆரம்பிச்சான். மிருக மாமிசங்களை மட்டுமே நம்பி வாழாம, பழம், கனிகளை உண்டு வாழவும் கத்துக்கிட்டான். கடைசியில அந்த பழங்கள், கனிகளோட விதைகளை விதைச்சு வச்சா, தனக்கு தேவையான உணவு தன்னால கிடைக்கும்னு கத்துக்கிட்டான்.  இப்படி தன்னைக் காப்பாத்திக்க என்னவெல்லாம் செய்ய முடியும்னு தேடிக்கிட்டே இருந்தான். மத்த எந்த ஒரு உயிரினத்துக்கும் இல்லாத இந்த குணம் தான், இந்த தேடல் தான், 68 லட்சம் வருசமா மனுஷனை காப்பாத்தி கூட்டிட்டு வந்தது. அவனோட அதே தேடல் தான், அதே ஆர்வம் தான், இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தையும் அவனுக்கு கத்துக்குடுத்துச்சு. அது தான் நெருப்பை உருவாக்குறது.

சுமார் 2 லட்சம் வருஷங்களுக்கு முன்னாடி ஏதோ ஒரு நாள்ல தன்னால ரெண்டு கல்லை உரசி ஒரு தீப்பொறியை உண்டாக்க முடியும்னு கத்துக்கிட்டான். அந்த சின்ன தீப்பொறியை வச்சு ஒரு கட்டையை எரிய வைக்கும் போது தான், தன்னால தீயை கட்டுப்படுத்த முடியும்னு மனுஷன் கத்துக்குறான். அதன் பிறகு நடந்தது எல்லாமே மனுஷனுக்கு சாதகமாவே இருந்தது. தீயை வச்சு யானை போன்ற பெரிய விலங்கை கூட தனி ஆளாகவே எளிதா பயமுறுத்தி துரத்தினான். பச்சையான காய்கறிகளை சுட்டு சுவையா உண்ண ஆரம்பிச்சான். தான் மூட்டுற தீ மூலமா, குளிர், பனியில இருந்து தன்னை காப்பாத்திக்கிட்டான். இருட்டுலையும் தெளிவா தன்னை எந்த மிருகம் தாக்க வருதுன்னு பாத்து அதுங்க கிட்ட இருந்து தன்னைக் காத்துக்கிட்டான். மனிதனோட வாழ்க்கை முறை நெருப்புனால ரொம்பவே மாறி போச்சு. இது எல்லாத்தையும் தாண்டி மனிதன் சக்கரத்தை கண்டுபுடிச்சபோது, அவனோட பலமும், அவனுக்கு கிடைக்கிற ஆதாயமும் ரொம்பவே அதிகமாக ஆரம்பிச்சது. மற்ற எந்த மிருகத்தை காட்டிலும் இந்த உலகத்துல மனுஷன் வேகமா நகர ஆரம்பிச்சான். அவனோட மாற்றமும் முன்னேற்றமும் தான் அவனை அடுத்த கட்ட வாழ்க்கை முறைக்கு கொண்டு போச்சு.

காடு மலைகள்ல மட்டுமே சுற்றி திரிஞ்சுக்கிட்டு இருந்த மனுஷன், ஆற்றுவெளிகளைக் கண்டு அங்கையே வாழலாம்னு முடிவெடுத்தான். நாகரிகமும் சமூக அமைப்பும் அங்க தான் முதன் முதலா மனிதர்களுக்கு மத்தியில தோன்றுது. ஒண்ணா ஒரே சமூகமா சேர்ந்து வாழ மனுஷன் ஆரம்பிக்கிறான். விவசாயம் செய்து வாழ கத்துகிறான். பொருட்களோட உற்பத்தி அங்க தான் ஆரம்பிக்குது. தனக்கு வேணும்ன்ற பொருளை தானே உற்பத்தி பண்ணிக்கிறான். தன்னால உற்பத்தி பண்ண முடியாத பொருளை, பண்டமாற்று முறை மூலமா, மத்தவங்க கூட மாத்திகிறான். ஆனா பண்டமாற்று முறை திருப்தியா இல்லாத போது, வியாபாரம் செய்ய பொதுவா ஒரு பொருள் வேணும்னு கண்டு புடிக்கிறான். அந்த பொதுவான ஒரு பொருள் தான் கொஞ்ச நாள்ல பணம், காசுன்னு பேர்ல வருது. ஆரம்பத்துல ஏதேதோ பொருளை பணமா வச்சு வியாபாரம் செய்தாலும், 40,000 வருஷம் முன்னாடி தங்கம்ன்ற ஒரு பொருளை பொது பொருளா வச்சு வியாபாரம் செய்யலாம்னு முடிவு பன்றான் மனுஷன். அந்த தங்கம் வந்த கொஞ்ச நாள்லையே  அடுத்தடுத்த மாற்றங்களும் மனுஷங்களுக்குள்ள வர ஆரம்பிக்கிது.

என்னதான் சமூகமா ஒரே எடத்துல மனுஷன் வாழ ஒத்துக்கிட்டாலும், மனுஷங்களுக்குள்ள பிரச்சனை இல்லாம இல்ல. எல்லா நேரமும் எல்லா மனுஷனும் ஒண்ணா இருக்குறது இல்ல. தங்களுக்குள்ள பிரச்சனை வரும் போதெல்லாம், யார் சொல்றது சரி, யார் சொல்றது தப்பு, யார் பேச்சை கேக்குறது, யார் பேச்சை கேக்க கூடாதுன்னு முடிவு சொல்ல ஒரு மூணாவது ஆள் வேணும்னு நெனச்சாங்க. அப்படி இருக்குற அந்த மூணாவது ஆளுக்கு சகலவிதமான உரிமையையும் மரியாதையையும் கொடுத்தாங்க. அவனை தன் தலைவனா ஏத்துக்கிட்டாங்க. அந்தத் தலைவன் சொல்லக்கேட்டு அடிபணிஞ்சு நடக்கவும் ஆரம்பிச்சாங்க. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை அந்த தலைவன்கிட்ட குடுத்து அவனையே அதை பாத்துக்கவும் மற்ற மனுஷங்க சொல்ல ஆரம்பிச்சாங்க. நாளடைவில் அவனையே தங்களை ஆளுற அரசனாகவும் மாத்திட்டாங்க. இதுவரை சின்ன சின்ன குழப்பங்களோட போய்க்கிட்டு இருந்த மனித வாழ்க்கை இதுக்கு அப்புறமா ஏகப்பட்ட குழப்பங்களை சந்திக்க வேண்டியதா இருந்துச்சு.
யார் தங்களை நல்லா பாத்துப்பாங்க, நல்லவிதமான வழி நடத்துவாங்கனு நம்பி சகல விதமான பொறுப்புகளையும் மனிதர்கள் ஒப்படைச்சாங்களோ, அதே அரசர்கள்ல சிலர் சூழ்ச்சிக்காரர்களாகவும், வஞ்சகர்களாகவும் இருந்தாங்க. மற்ற மக்கள் நலன்ல அக்கறை இல்லாம தனக்கு என்ன வேணும்னு மட்டும் யோசிக்க ஆரம்பிச்சாங்க. தங்கத்தை வெறும் பண்டமாற்று பொருளா பாக்காம அதை ஒரு சொத்தா பார்க்க ஆரம்பிச்சாங்க. தனக்கு வேணும்ன்ற அளவுக்கு சேர்த்து வச்சுக்கணும்னு நெனச்சாங்க. ஏன், தனக்கு வேணும்ன்ற அளவுக்கு மேலையே சேர்த்து வச்சுக்கவும் ஆசைப்பட்டாங்க. அப்படி ஆசைகள் வளர்ந்ததுல சில அரசர்கள் பண்ண கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பல கொள்ளைகள், போர்கள் செய்து மற்ற நாடுகள்கிட்ட இருந்து செல்வங்களை கொள்ளையடிச்சாங்க. அதையும் மீறி எதிர்க்கிற எல்லாரையும் கொன்று குவிச்சாங்க. அப்படி அது வரை வந்த அரசர்கள் பண்ண எல்லாத்தையும் விட ஒரு அரசன் அதிகமான பொன், பொருள், நகைகள், ஆபரணங்கள் எல்லாம் சேர்த்து வைக்கணும்னு ஆசைப்பட்டான். அத மாதிரியே எக்கச்சக்க பொன் பொருள்களை சேகரிச்சும் வச்சுக்கிட்டான். அதுக்கு இடையூறா இருந்த மற்ற நாட்டு அரசர்களையும் தன்னோட படை பலத்தால கொன்று குவிக்க ஆரம்பிச்சான். உலகத்தோட மிக பயங்கரமான அரசனா மாறி இருந்த அவன், பல்லாயிரம் கிலோ பொன் பொருள்களை தன்னோட குறுகிய ஆட்சிகாலத்துலையே அடைய ஆரம்பிச்சிருந்தான். பல நாடுகளும், பல நாட்டு மன்னர்களும் பயந்து நடுங்குற அளவுக்கு, மிகப்பெரிய கொடுமைக்கார சர்வாதிகாரிய இருந்து இவ்வளவு சொத்தையும் குவிச்சது கிரந்த பேரரசை ஆண்ட "ஸிகார்" மன்னன்.

ஆனால், உலகத்தையே மிரட்டி பணிய வச்சுருந்த அந்த ஸிகார் மன்னனும், அவனோட பொக்கிஷமும், கடைசி வரை யாருக்குமே தெரியாம காணாம  போயிருந்தது. அவனுடைய கடைசி காலம் பற்றி யாருக்குமே தெளிவா தெரியல. உள்நாட்டு போர் மற்றும் மக்களோட கோபத்தை சமாளிக்க முடியாம, தப்பிச்சு கடல் வழியா போகும் போது கப்பல் கவிழ்ந்து இறந்து போயிட்டான்னு மட்டும் தான் நெறய பேருக்கு தெரியும். ஆனா உண்மையிலயே அவன் எப்படி இறந்தான், அவனுக்கு என்ன ஆச்சு, இது எல்லாத்துக்கும் மேல அவன் பாத்து பாத்து சேர்த்து வச்சுருந்த அந்த பல்லாயிரம் கிலோ பொக்கிஷம் எங்க? அப்படின்னு யாருக்கும் தெரியல. இது எல்லாமே ஒரே மர்மமாவே தான் இருந்தது, அந்த ஒரு நாள் வரும் வரை..!

-பொக்கிஷம் தேடப்படும்!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1