உயிர்ப்பி! (ஒரு பிரபஞ்சம் கடந்த பயணம்!)




"பிளிங்க்! பிளிங்க்! பிளிங்க்!"

இடைவிடாமல் ஒளி சமிக்ஞைகளை (Light Signals) தன்னுடைய கையில் இருந்த எமிட்டரை (Emitter) வைத்து அனுப்பிக்கொண்டிருந்தான் வினய். சில நிமிட காலம் மட்டுமே திறந்திருக்கும் அந்த வார்ம்ஹோலை (Worm Hole)* அவன் பயன்படுத்த இது தான் சரியான தருணம். இதை விட்டுவிட்டால் அடுத்து இதுபோல் ஒரு வார்ம் ஹோலைக் கண்டுபிடிப்பது மிகச்சிரமம். மிகச்சிரமம் மட்டுமல்ல. ஒருவேளை அவனுடைய ஆயுட்காலத்தில் அது முடியாமல் கூட போகலாம். அதனால் தன்னால் முடிந்தமட்டும் ஒளி சமிக்ஞைகளை அந்த வார்ம் ஹோலுக்குள் அனுப்பிக் கொண்டிருந்தான். இடையிடையே தன்னுடைய ரிசெப்டாரில் (Receptor) ஏதேனும் பதில் சமிக்ஞைகள் வருகிறதா என்று கண்காணித்துக்கொண்டே இருந்தான்.

"இன்னும் எவ்வளவு நேரம் டா வினய்?"

ஒருவாறாக பொறுமையிழந்து வினய்யின் கவனத்தைக் கலைத்தான் சித்தார்த். வினய்யின் நண்பன் என்று சொல்வதை விட வினய்யின் நிழல் என்று சித்தார்த்தைக் கூறலாம். அவ்வளவு தூரம் வினய்யின் நெருங்கிய நண்பனாக இருந்தான். ஆனால் குணாதிசயங்களில் மட்டும் இருவருக்கும் மலையளவு வேறுபாடு இருந்தது. படிப்பிலும் ஆராய்ச்சியிலும் வினய் படு சுட்டியாக இருந்தால், சித்தார்த்தோ விளையாட்டிலும் பிரபஞ்சத்தைச் சுற்றி பொழுதைக் கழிப்பதிலும் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தான். அதனால் தானோ என்னவோ, வினய்யின் ஆராய்ச்சிகள் அவனுக்கு சலிப்பை ஏற்படுத்தத் துவங்கியிருந்தது.

"இன்னும் கொஞ்ச நேரம் டா சித்து" - கெஞ்சினான் வினய்.

"எவ்வளவு நேரம் டா? அப்படி அந்த வார்ம் ஹோலுக்குள்ள லைட் அடிச்சு என்ன தாண்டா பண்ணப்போற?" என்றான் சித்தார்த்.

"இல்ல சித்து. ஒருவேளை, பேரல்லல் யூனிவர்ஸ்ன்னு (Parallel Universe) ஒன்னு இருந்தா, அங்க இருக்கிற மக்களுக்கு இந்த மெஸேஜ் போச்சுன்னா, இது அவங்கள தொடர்பு கொள்றதுக்கு ஒரு வாய்ப்பா அமையும்ல. அதான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்" - என்றான் வினய்.

"ஏன்டா. அந்த யூனிவெர்ஸ்ல உனக்குத் தெரிஞ்ச ஆளுங்க இருந்தா விர்ச்சுவல் கால்** போட்டு பேசிட்டு போயிட்டே இருக்க வேண்டியது தானே. இப்படி உக்காந்து ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி பண்ண மாதிரி லைட் அடிச்சிக்கிட்டு இருக்க?" - சித்து.

"ஹா ஹா. அப்படி எல்லாம் அனுப்ப முடியாது சித்து" - வினய்

"ஏன்? அவங்களுக்கு சிக்னல் கிடைக்காதா?" - சித்தார்த்.

" சிக்னல் மட்டும் இல்ல. அவங்க உலகத்துக்கு போறதுக்கு வழியே இல்ல" - வினய்.

"என்னது? வழியே இல்லையா? அதான் லைட் அடிச்சிக்கிட்டு இருக்கியா? அப்ப இந்த லைட் அவங்களுக்கு போயிருச்சுன்னா, அவங்களும் உனக்கு இந்த மாதிரி லைட் அனுப்புவாங்களா?" - சித்தார்த்

"ஆமா. அனுப்ப சான்ஸ் இருக்கு. ஒரு வேளை இந்த லைட் அவங்களுக்கு போச்சுன்னா" - வினய்.

"போச்சுன்னாவா? அப்ப கன்பார்மா போக சான்ஸ் இல்லையா?" - சித்தார்த்

"ம்ம்ம். கொஞ்சம் சான்ஸ் இருக்கு" - வினய்.

"கொஞ்சம்னா, எவ்வளவு?" - சித்தார்த்

"ஒரு 0.0001%" - வினய்.

"அடப்பாவி. வெறும் 0.0001% தானா? இதுக்காகவா எனக்கு சாப்பாடு கூட வாங்கி தராம இப்படி காலையில இருந்து ஆராய்ச்சின்ற பேர்ல என்னைய சாவடிக்கிறியேடா. ஏன்டா இப்படி? அது சரி. இப்படி நீ லைட் அடிச்சு யாரை காப்பாத்த போற?" - சித்தார்த்


"யாரையும் காப்பாத்த போறதில்ல சித்து. ஆனா இந்த முயற்சியை நாம எடுக்கலன்னா வேற யாரு எடுப்பா? நம்ம மனித இனத்துக்கும், நம்மைப்போல இருக்கிற மற்ற வேற்று கிரக உயிரினங்களுக்கும் இந்தக் கண்டுபிடிப்பு உதவலாம். இதன் மூலமா, பாரல்லல் யூனிவர்ஸ்ல இருக்குற மக்களோட தொடர்பு கிடைக்கும். அதன் மூலமா அவங்களோட தொழில் நுட்பம், மருத்துவம், விஞ்ஞானம், சுற்றுச்சூழல் இந்த மாதிரி பல விஷயங்களைக் கத்துக்க முடியும். அதோட அவங்க வாழ்க்கை முறை, வரலாறு, அப்புறம்..."

"யப்பா. டேய். நீ லைட் அடிச்சு ஆராய்ச்சி கூட பண்ணிக்கோ. ஆனா, இப்படி லெக்ச்சர் எடுத்து சாவடிக்காத. யூனிவர்சிட்டி ல தான் அந்த AI ரோபோ (Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு உள்ள ஒரு ரோபோ) தொல்லை தாங்க முடியலைன்னா, இங்க நீ என்னை கொல்றியேடா" என அங்கலாய்த்தான் சித்து. அழாத குறையாக அவன் இருக்கும் இருப்பைப் பார்த்து இதற்கு மேலும், இவனைக் காக்க வைப்பது முறையல்ல என்று தோன்றியது வினய்க்கு. ஒரு வழியாய்க் கேட்டான், "இப்ப என்னடா பண்ணலாம் சித்து" என.

"இப்ப கெளம்பி சாப்பிட போலாமா, வேணாமா மை லார்ட்!"  எனக் குமுறினான் சித்து.

"சரி கிளம்பலாம் வா" என அங்கிருந்த தன் விண்கலத்தை இயக்கத் துவங்கினான் வினய். விண்கலத்தைத் திருப்பிவிட்டு ஒருமுறை ஏக்கமாக அந்த வாரம் ஹோலைப் பார்த்தான். கிடைத்த வாய்ப்பை விட்டுவிட மனமில்லை என்றாலும், இந்த முயற்சியின் வெற்றி மிகக் குறுகியது எனபது அவனுக்கு நன்றாகத் தெரியும். இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து வேறு ஒரு வாரம் ஹோலைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். ஒரு வேளை, பேராசிரியர் பிரியனிடம் வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டுப்பார்க்கலாம் என மனத்தைத் தேற்றிக்கொண்டு கிளம்பத் துவங்கினான் வினய்.



அதே நேரம், நம் பூமி அமைந்திருக்கும் பால்வெளியைப்போல் (Galaxy), விண்வெளியின் இன்னொரு மூலையில் அமைந்திருக்கும் ஒரு பிரபஞ்சத்தில் உள்ள ஒரு செந்நிற கிரகத்தில் இருக்கும் விண்வெளி நிலையமான SRO வில்  அலறியது ரோபோ Z1 "பாஸ். இன்னொரு கிரகத்தில் இருந்து ஒரு தகவல் வந்திருக்கிறது. பாஸ் இன்னொரு கிரகத்தில் இருந்து ஒரு தகவல் வந்திருக்கிறது!" என....!


- செல்லா


*Worm Hole - வார்ம் ஹோல் என்பது ஒரு அறிவியல் கூற்று. பிரபஞ்சத்தில் இரு வேறு கிரகங்களை இணைக்கும் பாதையாக வார்ம் ஹோல் இருக்கும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். சிலர் நம் பிரபஞ்சம் போலவே இருக்கும் இன்னொரு பிரபஞ்சத்தை (Parallel Universe) இணைக்கும் பாலமாகவும் வார்ம்ஹோலைக் கருதுகிறார்கள். 

**விர்ச்சுவல் கால் (Virtual Call) - எதிர்காலத்தில் நேருக்கு நேர் பேசிக்கொள்ள உதவும் ஒளிக்கற்றையாலான கருவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!