ஒரு விபரீத விளையாட்டு!


"ஆதி. ஓடு. ஓடு. நிக்காம ஓடு" - என கத்திக்கொண்டே பின்னால் ஓடிவந்தான் நகுல். அவன் பின்னே பரத்தும் இன்பாவும் பின்னங்கால் பிடரியில் படும் அளவு ஓடி வந்துகொண்டிருந்தார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தோம் நால்வரும். மாட்டிக்கொண்டால் உயிர் போவது நிச்சயம். தேவையா இந்தத் தொல்லை எனது தோன்றியது. முதலிலேயே இன்பா வேண்டாம் என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினான். நாங்கள் இந்தக் காட்டிற்குள் வந்ததும் இல்லாமல் அவனையும் வலிய இழுத்து வந்தோம். இப்போது எல்லோருடைய உயிரும் இந்தக் காட்டுவாசிகளின் கையால் போய்விடும் போல் இருக்கிறது. உயிர் பிழைத்தால் நிச்சயம் இந்தப்பக்கம் வரவே கூடாது என்று தோன்றியது.

"ஆஆ. ஹூஹூ! ஹூஹூ! ஹோ. ஹோ. ஹோ" என அலறிக்கொண்டே பின்தொடர்ந்தார்கள் அந்தக் காட்டுவாசிகள். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் துரத்திக் கொண்டு முன்னால் வந்துகொண்டிருந்தான் அவர்களின் தலைவன். அவன் துரத்தி வரும் வேகமும் ஆக்ரோஷமும் பாகுபலியின் காளகேயனைப் போல் இருந்தது. பின்னால் வருபவர்களும் காளகேயனின் கூட்டத்தினர் போலத்தான் இருந்தார்கள். கண்டிப்பாக இவர்கள் கையில் மாட்டிக்கொண்டால் நிச்சயம் மரணம் அவ்வளவு சுலபமாக இருக்காது என்று தோன்றியது. மரணபயம் உடலை அசுரவேகத்தில் இயக்கிக்கொண்டிருந்தது. பயத்தில் கால்கள் தானாக ஓடிக்கொண்டே இருந்தன. மேடு பள்ளம் என்று பாராமல் வழி தெரியும் திசையில் விழுந்து எழுந்து புரண்டு ஓடிக்கொண்டிருந்தோம். அப்போது தான் நாங்கள் எதைத் தேடி வந்தோமோ அது கண்ணில் பட்டது.

"நகுல் அங்க இருக்கு பாரு" என்று கத்திக்கொண்டே அவனுக்கு அதைக் காட்டினேன்.

நான் காட்டிய திசையில் பார்த்துக்கொண்டே என்னைப்பார்த்துக் கத்தினான் "வேணாம் ஆதி. இது ரொம்ப ரிஸ்க். விட்டுரு. ஓடிடலாம்" என்று.

"இல்லடா. எடுத்துடலாம். நீங்க ஒடுங்க. நான் எடுத்துட்டு வர்றேன்" - என்றேன் உறுதியுடன்

"லூசுப்பயலே. மாட்டுனா ஆதி 65, நகுல் சுக்கா, இன்பா பிரியாணின்னு போட்டு சாப்டுட்டு போயிட்டே இருப்பானுங்க. இந்த ரணகளத்துல உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா?" - கதறினான் பரத்.

"நான் எடுத்துட்டு வர்றேன். நீங்க ஒடுங்கடா" என காற்றில் கத்திவிட்டு பாதை மாறி ஓடிக்கொண்டிருந்தேன்.

"போடாங்" என பரத் திட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தபோது நான் பாதி தொலைவைக் கடந்திருந்தேன்.

இருவேறு திசைகளில் பிரிந்து ஓடிக்கொண்டிருந்தோம் இப்போது. எங்களைப்போலவே அந்த ஆதிவாசிகளின் கூட்டமும் இரு திசைகளில் பிரிந்து எங்களைத் துரத்தி ஓடி வந்துகொண்டிருந்தார்கள். நால்வர் மட்டும் என்னைத் துரத்த மற்றவர்கள் என் நண்பர்களைத் துரத்திச் சென்றுகொண்டிருந்தனர்.

பயமா, ஆசையா எது என்று தெரியவில்லை. தூரத்தில் மின்னிக்கொண்டிருந்த அந்தப்பொருளை நோக்கி வேகமாய் உடல் ஓடிக்கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக என் பின்னால் வந்துகொண்டிருந்த ஆதிவாசிகள் பின்தங்கியிருந்தனர். ஆனால் மற்றவர்களைத் துரத்திக்கொண்டிருந்த ஆதிவாசிகள் முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.

நான் என் இலக்கை அடைந்திருந்தபோது என்னைத் தொடர்ந்துவந்த ஆதிவாசிகளைக் காணவில்லை. வழிதவறியோ அல்லது தொடர்ந்து வர முடியாமலோ பின்தங்கியிருக்கலாம்.

நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. வேகவேகமாக என் முன்னால் இருந்த அந்தப் பாறையில் ஏறினேன். அதன் உச்சியில் உள்ள இடுக்கில் சிக்கிக்கொண்டு இருந்தது அந்தத் தங்கக்கட்டி. அதற்காகத்தான், இந்தப் புதையலுக்காகத்தான் இவ்வளவு ரிஸ்க்கும். குறைந்தது இருபது கிலோவாவது இருக்கும். பாறைமுகட்டின் இடுக்கில் இருந்துகொண்டு அரசிளங்குமரி போல் கண்சிமிட்டியது. அதன் மினுமினுப்பு என் ஆர்வத்தை மேலும் கூட்டியது. அவசர அவசரமாக பாறையின் உச்சியில் ஏறி அதை எடுக்கலானேன். அப்போதுதான்

"ஆதி" என அலறினான் இன்பா.

"இன்பா" என்று கத்திகொண்டே இன்பாவின் குரல் வந்த திசையை நோக்கி ஓடினேன்.

"ஆதி" - இப்போது பரத்தின் குரல் கேட்க ஆரம்பித்தது. நான் ஓசை வந்த திசையை நோக்கி ஓடியபடியே இருந்தேன். தொலைதூரத்தில் உருவங்கள் தெரிய ஆரம்பித்தன.

பரத் என் கண்ணுக்குத் தெரிந்தபோது இன்பா ஏற்கனவே அந்தக் காட்டுவாசிகளின் பிடியில் இருந்தான். "பரத்த்த்" என அலறிக்கொண்டு நான் ஓடி வந்துகொண்டிருந்தேன்.

நான் என் நண்பர்களை நெருங்கிய வேகத்தை விட அந்தக்காட்டுவாசிகள் அவர்களை வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு கணத்தில் பரத்தும் மாட்டிக்கொள்ள, நான் அனைவரையும் காப்பாற்ற எண்ணி ஓடிக்கொண்டிருந்தேன்.

"ஆதி. இங்க வராத ஆதி. ஓடிடு. வேணாம் ஆதி. வேணாம்" - என இன்பா கெஞ்சிக்கொண்டிருந்தான். ஆனால் நான் விடுவதாயில்லை. எப்பாடு பட்டாவது அவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தேன்.

"கவலைப்படாத இன்பா. நான் வந்துட்டேன்" என கத்திக்கொண்டே ஓடி வந்துகொண்டிருந்தேன்.

"ஆதி ஓடிடுடா. இங்க வராத. வேணாம்" எனக் கத்தினான் பரத். ஆனால் அதற்குள் நான் அவர்களின் மிக அருகில் வந்திருந்தேன்.

"ஆஆஆஆதீதீஈஈஈஈஈஈஈஈ' என நகுல் என்னை நோக்கி வந்தபோது, அவனைப் பிடிக்கக் காட்டுவாசிகளின் தலைவன் முன்னேறியிருந்தான்.

"நகுல்லல்லல்" எனக் கத்திக்கொண்டே அந்தக் காட்டுவாசிகளின் தலைவனைத் தாக்குவதற்கு நான் தயாரானேன். ஓடி வந்த வேகத்தில் காலைத் தரையில் ஊன்றி எட்டி உதைக்க ஒரே தாவாக தாவினேன். சரியாக காட்டுவாசி தலைவனின் மார்பில் உதைக்கத் தாவினேன்.

"டமால்" என உடைந்து நொறுங்கியது என் அறையின் சுவற்றில் மாட்டிவைக்கப்பட்டிருந்த டீவி.

"அடேய். ஆதி. என்னடா ஆச்சு?" எனப் பதறியடித்தவாறே என் அம்மா உள்ளே வந்தபோது எனக்கு ஒன்று மட்டும் புரிந்திருந்தது. தங்கம் கிடைத்ததோ இல்லையோ. இப்பொழுது உதை கிடைக்கப்போகிறது என்று.

பயந்து போய் உள்ளே வந்த அம்மா என்னையும் உடைந்து கிடந்த டிவியையும் அதன் அருகில் கீழே கிடந்த என்னுடைய விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியையும் பார்த்தபோது, நடந்தது என்ன என்று அவரால் ஊகிக்க முடிந்திருந்தது. என்னை அடிப்பதற்கு வாட்டமாக கையில் விளக்குமாறை என் அம்மா எடுத்தபோது, நான் அவரைத் தாண்டிக்குதித்து ஓடத்துவங்கினேன் "இனிமே விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடி போட்டு வீடியோ கேம் ஆடக்கூடாதுப்பா" என்று எண்ணியவாறே.


- செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1