இரு தேவதைகள்
நிரம்பி வழிந்துகொண்டிருந்தது அந்த மருத்துவமனை
பெயர் சொல்லத்தெரியாத மருந்துகளின் வாசத்தால்!
மழித்துத் துடைக்கப்பட்டிருந்த சலவைக்கல் தரையாய்
சலனமின்றிக்கிடக்கிறது என் மனம்.
இன்னும் என்ன இருக்கிறது?
என்ன மிச்சம் இருக்கிறது?
எல்லா எதிர்பார்ப்புகளும்
எல்லாக் கனவுகளும்
காற்றோடு காற்றாய் கரைந்த பின்
இன்னும் மிச்சமென்ன இருக்கிறது!
ஒரு மகள்,
ஒரே மகள்.
இல்லை இல்லை!
ஒரே தேவதை.
ஒரே தெய்வம்.
அப்படித்தான் அவள் எனக்கு!
மூவேழ் ஆண்டுகட்குமுன்,
ஒரு தேவதைத்திருநாளில்,
பூமியில் வந்து அவதரித்தாள் அவள்!
ஒரு ஆண்மகன் என என்னையும்,
ஒரு அன்னை என என் மனைவியையும்
ஊரறிய அறிவிப்பதற்காக..!
அன்று,
அந்த நன்னாளில்,
அவ்வழகிய நேரத்தில்,
பத்துமாதம் சுமந்த சுகத்தை
இறக்கிவைத்தக் களிப்பிலோ என்னவோ,
அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் என் மனைவி.
அழகாய்த் தூங்கிக்கொண்டிருந்தாள் என் மகள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரும்பிக்கொண்டிருந்த கேசம்,
சிறுமொட்டாய் மூடிக்கிடக்கும் கண்கள்,
சிறு இதழ், அதில் குறு நகை,
கனவிலும் கூட கடவுளிடம் பேசும் கை கால்கள்,
வெண்பஞ்சாய் வெளுத்திருந்த தேகம்!
அவ்வப்போது சிணுங்கல்கள், அழகாய்ச் சிறு அழுகைகள்!
அத்தனையும் செய்வது அவள், என் மகள்!
தொடவா? நானா? அவளையா?
இத்தனை மென்மையைத் தாங்குமோ என் தேகம்?
இந்தத் தீண்டுதலைத் தாங்குமோ என் நேசம்?
தொட்டுப்பார்க்கலாமா?
தொட்டுப்பார்க்கும் அளவிலா இருக்கிறாள் இவள்!
இளவரசிபோலன்றோ மிரட்டுகிறாள் தூக்கத்திலேயே!
எளியோன் நான், இளவரசியைத் தீண்டவோ?
அரைமணிநேர என் அவஸ்தையை
முடித்து வைத்தாள் என் மனைவி,
"பயப்படாம தூக்குங்க உங்க பொண்ணை.
ஒன்னும் ஆயிறாது உங்க பொண்ணுக்கு!" எனச் சிரித்தவாறே!
அவளுக்கென்ன தெரியும், நான் படும் அவஸ்தை!
அதுவாகத்தான் இருக்கும்.
என் வாழ்நாளில்,
அவ்வளவு கவனமாய்
அவ்வளவு சிரத்தையாய்,
அதி சிரத்தையாய் நான் செய்த ஒரே விஷயம்.
அப்பப்பா!
என் வலக்கை கீழிருக்க,
இடக்கை மேலிருக்க,
ஒய்யாரமாய் அதன்மேல் தூங்கிக்கொண்டிருந்தாள்!
என் மகள்.
என் மகள்!
என்ன செய்வேன்?
எதுவும் தோன்றவில்லை.
எதுவும் ஓடவில்லை.
அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்!
இப்போதே உடைந்து வந்து,
இவளை அள்ளி அணைத்துக்கொள்ளவோ,
உச்சி முகர்ந்திடவோ எனக்
கேட்டுக்கொண்டிருந்தது என் பாச அணை,
கண்ணில் சிறுதுளி ஆனந்தக் கண்ணீராய்!
ம்ஹூம். அழக்கூடாது!
ஆண்மகனாயிற்றே! அழக்கூடாது!
நினைப்பதெல்லாம் நடக்குமா எப்போதும்?
கட்டிவைத்திருந்த அத்தனை மன வெள்ளத்தையும்
உடைத்து எறிந்தாள் என் கண்மணி தன் காலால்!
மண்ணில் பிறந்ததும் முதன் முதலாய்க்
கால்பதித்தாள் என் நெஞ்சில்!
ஒரு சிறு உதை..!
தன் பிஞ்சுக்கால்களால்,
இந்த அப்பனின் நெஞ்சில் ஒரு சிறு உதை..!
அவ்வளவுதான்..!
அழுது தீர்த்தேன் அத்தனை வேகமாய்!
போதும்! எதற்கு நடிப்பானேன்?
ஏன் நடிப்பானேன்?
என் மகள் முன் தானே அழுகிறேன்!
என் மகளைக்கண்ட பூரிப்பில் தானே அழுகிறேன்!
அழுதுவிட்டுப்போகிறேன்!
அவளுக்காய்.
அவளுக்கே அவளுக்காய்..!
என்ன வேண்டும் இந்த மண்மேல் எனக்கு இனி
இவளைப் பார்த்திருப்பதைத்தவிர..!
இவளைக் காத்திருப்பதைத்தவிர..!
இன்றும்,
இந்நொடி வரையிலும்
வேறெதுவும் வேண்டப்பட்டதில்லை எனக்கு,
இவளைத்தவிர..!
இருந்தும்,
இருந்தும்..!
கை பிடித்து நடக்கும்போது
என்னைத்தேடிய அவள் ஏனோ,
இன்னொருவன் கை பிடிக்கும் போது
தேடவில்லை..!
வேண்டாம் என்பேன் எனப் பயந்தாளோ?
வேற்றுமதத்தவன், வெறுப்பேன் என நினைத்தாளோ?
வீட்டை அலங்கரித்து வீதியெல்லாம் தோரணமிட்டு
பந்தக்கால் நட்டுப் பட்டுத்துணியுடுத்தி
ஊரார் அட்சதையிட உறவினர்கள் வாழ்த்துரைக்க
வான் சென்ற முன்னோரும் மண்வந்து ஆசி கூற
நானும் நின்றிருக்க நன்னாளில், நடந்தேறும் இவள் திருமணம் என
மனத்தால் களித்திருந்தேன், மணநாள் குறித்திருந்தேன்!
விடிந்தால் வரும் அவள் மணநாள் என
விழிமூடி நான் காத்திருக்க,
விடிந்தது அந்த நாள், என் மகள்
விட்டுப்போன காகிதத்துடன்..!
சொல்லித் தெரியவேண்டியதில்லை மற்றது.
சொல்லில் தெரியக்கூடியதுமில்லை சிலது.
கடந்து போன காயங்களின்
வடுக்கள் மட்டும் மீந்திருக்க
நிகழ்காலம் நிழலாடிக்கொண்டிருக்கிறது!
'பெண் குழந்தை பிறந்திருக்கு.
உள்ள போய் பாருங்க' என்ற
செவிலியின் உதட்டசைவில்
மீண்டும் உயிர்பெற்றது என் உடல்.
'பெண் குழந்தை பிறந்திருக்கு.
உள்ள போய் பாருங்க' என்ற
செவிலியின் உதட்டசைவில்
மீண்டும் உயிர்பெற்றது என் உடல்.
உள்ளே,
அந்த அறையின் தொட்டிலை
ஆக்கிரமித்திருந்தாள் இன்னொருத்தி!
அத்தனை களேபகரங்களுக்கும்
தொடர்பே இல்லாத ஒருத்தி..!
அவளைப்போல்,
அச்சு அசலாய் அவள் அன்னையைப்போல்,
சிறிதும் பிசகாமல் செதுக்கி அனுப்பியிருந்தான் பிரம்மன்..!
எத்தனை வருத்தம்
எத்தனை ஏக்கம்
இருந்தும்,
இவளேதும் செய்யவில்லையே!
இவள்மேல் பழியில்லையே!
மையிடும் விழிமூடி உறங்கும் மலரை,
மடியில் கிடத்திக்கொண்டேன் வாஞ்சையாய்..!
பிஞ்சுத் தீண்டலிலும் கூட
இவள் பெற்றவள் போலத்தான்!
ஏமாற்றங்களும் ஏக்கங்களும் கரைய
பாசமும் பரிவும் கூடிப்போனது அவள்மேல்..!
ஆசையாய் நான் முத்தமிட,
மறுமொழியாய்ச் செல்லமாய் உதைத்தாள் என் மார்பில்..!
அப்படியே அவள் அன்னைபோலவே..!
சிலிர்த்துப்போனேன் நான்..!
மீண்டும் இந்நன்னாளில்
இன்னொரு தேவதை என் வீடு தேடி வந்ததற்காக..!
-செல்லா
புகைப்படம் மூலம்: இணையம்
கருத்துகள்
கருத்துரையிடுக