நீ
முதல் முறையாய்
அமைதியாகிப்போனது நம் வீடு
இந்த இருபத்தைந்து வருடங்களில்..!
வாசலை அடைத்தபடி
நிலைக்கதவில் யாரும் தொங்கிக்கொண்டிருக்கவில்லை
'என் அறை உள்ளே வராதே'
என என்னை விரட்ட ஆளில்லை
சமைக்கும் நேரமெல்லாம்
அம்மாவின் அருகே நின்று கதைபேச ஆளில்லை
இரவில் தான் சாப்பிடும்முன் அம்மாவிடம்,
'அவன் சாப்பிட்டானா?' என அப்பா கேட்பதில்லை.
எல்லாம் உன்னால் தான்.
உன் ஒருவனாலே தான்.
வெளிநாடு கிளம்பிய உன்னை
விமான நிலையம் வந்து வழியனுப்பியவரை
யோசிக்கவே இல்லை
இத்தனையும் நடக்குமென்று..!
யாரோ சொன்னார்கள்
'முதல் பிள்ளை பெண்ணாயிருந்தால்
இரண்டாவது பிள்ளைக்கு இரண்டு தாய்' என..!
யாருமே சொல்லவில்லை
'முதல் பிள்ளை ஆணாயிருந்தால்
இரண்டாவது பிள்ளைக்கு இரண்டு தந்தை' என..!
மருத்துவமனையில் நான் பிறந்திருந்தபோது,
மடியில் என்னைத் தூக்கிவைத்துக்கொண்டு,
'என் தங்கச்சி. நான் யாருக்கும் தரமாட்டேன்' என
ஐந்து வயதில் நீ செய்த அந்த
அழகான அட்டூழியம் தான்,
அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட
உன்னைப்பற்றிய முதல் நினைவு..!
உப்பு மூட்டையும் குதிரை சவாரியுமாய்
உன்னோடு கழித்த பொழுதுகள் சிறிது என்றால்,
புத்தகத்திற்கு அட்டை போடுவதும்
பாடம் படிப்பதுமாய் கழித்த பொழுதுகள் மற்றது..!
சுகமாய் வலித்துக்கொண்டிருக்கிறது,
ஒவ்வொருமுறை என்னைக்கொட்டிவிட்டு,
என்னிடம் மாட்டிக்கொள்ளாதபடி நீ
தப்பி ஓடிவிடும் தருணங்கள்..!
அடிநெஞ்சில் கனத்து நிற்கிறது,
நான் செய்த தவறுக்கு
அம்மாவை, என்னை அடிக்கவிடாமல் தடுத்து
நடுவில் நின்றுகொண்டு
நீ வாங்கிப்போன அடிகள்...!
இப்போதும் அலமாரியில்
ஒரு ஓரத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறது
அன்றொருநாள்,
இரவு பத்து மணிக்கு மேல் கடைக்குப்போய்,
எனக்காக வாங்கி வந்த நோட்டுப்புத்தகம்..!
இன்றும் சரியாய் இருக்கிறது,
எனக்கும் நம் தங்கைக்கும்
நடக்கும் வாக்குவாதத்தில்
நடுவராய் நின்று நீ சொன்ன தீர்ப்புகள்..!
வெளியுலகை நான் ரசித்த
அத்தனை பாதுகாப்பான நாட்களுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது
எனக்காக நீ விட்டுக்கொடுத்த உன் வாழ்வின் நிமிடங்கள்..!
எத்தனை நாட்கள்,
எத்தனை நினைவுகள்,
எல்லாம் உன் ஒருவனால் தான்..!
சிரித்துக்கொண்டே நீ செய்த குறும்புகளைப்போல்,
அன்றும் சொல்லிப்போனாய்
உன் வெளிநாட்டு வேலை வாய்ப்பைப்பற்றி
அதே சிரிப்புடன்..!
கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என்றெண்ணி,
சந்தோஷத்துடன் அனுப்பிவைத்தோம்,
தெரிந்தே உன்னையும்,
தெரியாமலே உன்னுடன் எங்கள் சந்தோஷத்தையும்..!
உன்னை விட்டுவிட்டு
உன் நினைவுகளையெல்லாம் சேமித்து வைத்திருக்கும் நம் வீடு,
ஒவ்வொரு நாளும் சொல்லிவிட்டுப் போகிறது,
நீ செய்த அத்தனை குறும்புகளையும்..!
அனுதினமும் ஆயிரம் முறை
உன்னைப்பற்றி நினைப்பது
அம்மா பாசம் என்றால்,
ஆலயம் சென்று
உனக்காக வேண்டிக்கொண்டு வருவது
அப்பா பாசம்..!
'இந்த மடியில தான்
எப்பவும் படுத்திருப்பான்
சாயங்காலம்.
அங்க ஒழுங்கா தூங்குறானோ இல்லையோ'
என்ற அம்மாவின் வார்த்தைக்கும்,
அலைபேசியில் நான் பேசும்போது,
'வெளியில போகும்போது
கனத்த சட்டை போட்டுட்டு போகச்சொல்லு.
பனி ஒத்துக்காம போயிறபோகுது'
என அக்கறையாய்ச் சொல்லும்
அப்பாவின் சொல்லுக்கும்
'அவன் என்ன சின்ன பையனா?'
அவனுக்கு எல்லாம் தெரியும்' என
சமாதானம் சொல்வேனே தவிர,
இல்லாத கடவுளைஎல்லாம்
வேண்டிக்கொண்டே தான் இருக்கிறேன் நானும்,
அங்கே நீ நன்றாக இருக்கவேண்டுமென..!
இரண்டு வருடத்தில் வந்துவிடுவாய் என்றாலும்,
எனக்குத்தான் புரியவில்லை, நீயின்றி
எப்படி இருக்கப்போகிறேன் இந்த இரண்டு வருடங்கள் என..!
வறுமை வரவேண்டாம் என எண்ணித்தான்
வழியனுப்பி வைத்தோமே தவிர,
வாழ்நாள் முழுவதும் வசதியாய் வாழ்வதற்கல்ல..!
விருப்பமில்லாமல் ஏற்றிருக்கும் இந்தப்பிரிவை
விருப்பப்பட்டு கொடுத்துவிடாதே வாழ்நாளெல்லாம்..!
எங்களுக்காகத் தானே அங்கே போயிருக்கிறாய்,
எங்களுக்காகவே கொஞ்சம் சீக்கிரம் வந்துவிடேன்..!
ஏனென்றால்,
நிஜங்களோடு வாழ்ந்து பழகிவிட்ட எங்களுக்கு
நினைவுகளோடு வாழத் துணிவு இல்லை..!
-செல்லா
புகைப்படம் மூலம்: இணையம்
கருத்துகள்
கருத்துரையிடுக