காதல் நிச்சயிக்கப்பட்டுவிட்டது



இன்றும் நினைவிருக்கிறது,
பெண்பார்க்கும் படலத்தில்
என்னிடம் தனியே பேச,
என் தந்தையிடம் அனுமதி வாங்கியது...!

பெரியோர்கள் சம்மதத்துடன்,
பேசவந்தாய் என்னிடம் முதன்முதலில்...!

தனியறை.
தொலைவில் உறவுகள்.
அமைதியான சூழல்.
அருகில் நீ.
எவ்வளவோ சொல்லியும் கேளாமல்
எகிறத்தொடங்கியது இதயத்துடிப்பு
உன் அருகாமை கண்டு...!

"உங்க பேர் என்ன?"
"என்ன படிச்சிருக்கிங்க?"
"என்னென்னன புடிக்கும் உங்களுக்கு?"
"என்னைப் பிடிச்சிருக்கா?"
எத்தனை கேள்விகள் எழுதிவைத்தேன் மனதில்..!
எல்லாம் மறந்தது இன்று உன் அருகில்..!

பாழாய்ப்போன உதடுகள், உன்னைப்
பார்த்ததும்தானா மூடிக்கொள்ளவேண்டும்...?

தடுமாறி நின்றபோதுதான் தெரிந்தது, என்
தவிப்புகள் உன்னால் ரசிக்கப்படுகிறது என்று...!

பத்துநாளாய் புகைப்படத்தில்
நான் ரசித்த கண்கள்,
பக்கத்தில் நின்று
என்னை ரசிக்கும்போது,
தடுமாறித்தான் போனது, என்
தைரியமான மனமும்...!

ஆசையோ கட்டிக்கொள்ளச் சொல்ல,
நாணமோ எட்டித் தள்ள,
வேண்டாம் என்று சொல்லியும், முகத்தில்
வெட்கமாய் பூத்துவிட்டிருந்தது காதல்...!

தவிக்க விட்டது போதும் என்றெண்ணியோ,
தன்னால் கேட்டாய்,
"எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.
உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?" என்று.

"பைத்தியமாய் இருக்கிறேன்"
என சொல்லத்தோன்றினாலும்,
பரிதாபமாய் நின்றுகொண்டிருந்தேன்.
படித்த மொழிகளையெல்லாம், உன்
பார்வையில் மறந்திருந்ததால்...!

"எதையாவது சொல்லித்தொலையேன்" என
இதயம் கூக்குரலிட்டாலும்,
என்ன சொல்ல என்று தெரியாமல்
இதழ்கள் ஊமையாயின.

மௌனத்தின் அர்த்தம் புரியாததாலோ என்னவோ,
மறுமுறை நீயே கேட்டாய்,
"அப்போ பிடிக்கலைன்னு
எல்லார்கிட்டயும் சொல்லிடவா?" என்று.

ஐயோ என இதயம் அலற,
நீயோ வாசல் நோக்கி நகர,
அடுத்த நொடி,
வெட்கத்தை உடைத்துவிட்டு
வெளியே வந்து விழுந்தது வார்த்தைகள்,
"பிடிச்சிருக்கு" என்று..!

புன்னகையுடன் நீ
என்னைப் பார்த்தாய்.
பொங்கிவரும் வெட்கம் மறைக்க
நான் மண்ணைப் பார்த்தேன்.

வானிலிருந்து ஒரு தேவதை,
வந்திறங்கி சொல்லியது,
"உங்கள் காதல் நிச்சயிக்கப்பட்டுவிட்டது" என்று..!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1