என்னருகே நீயிருந்தால் - பகுதி 3

3. சிறு முதல் சிரிப்பு

'ஏண்டி இப்படி செஞ்ச?'
என்று நான் கோபப்படும் முன்,
'என்ன மன்னிச்சிடுடா'
என்று கட்டிக் கொள்கிறாய்.
அப்புறம்,
கோபம் எப்படி வரும்?
காதல் தான் வரும்.

நாளை அந்த புத்தகத்தை தருவதாய்ச் சொல்லி, எப்படியோ சமாளித்து அபர்ணாவை அன்று அனுப்பி வைத்துவிட்டேன். பள்ளிகூட நண்பன் ஒருவனிடம் அந்த புத்தகம் இருப்பதை அறிந்து, அவனிடம் சென்று வாங்கி வந்தேன் அபர்ணாவிடம் கொடுப்பதற்காக. (அது ஏன் எங்க கிளாஸ் ஒருத்தர் கிட்ட கூட அந்த புக் இல்லன்னு 5 நிமிடம் கழிச்சு சொல்றேன்)

அடுத்தநாள் காலை, எங்கள் கல்லூரியில்...

"தம்பி வேலு. அண்ணி எங்கப்பா?" - நான் அபர்ணாவின் சக வகுப்பு மாணவனான, முத்து வேல், என்கிற வேலுவை விசாரித்துக் கொண்டிருந்தேன். அபர்ணாவைப் பற்றி நான் அறிந்துகொள்ள எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஆள் இவன்தான். (பையன் ரொம்ப நல்லவன். இல்லனா, என்ன பார்த்து பயப்புடுவானா?)

பதில் ஏதும் சொல்லாமல், புதிதாய் யாரையோ பார்ப்பது போல் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான் வேலு.

"டே வேலு. என்னாச்சு? என்னமோ புதுசா பார்க்குற மாதிரி பார்க்குற?"

"இல்லனா, டைம் 8.10 A.M தான் ஆகுது..." என இழுத்தான்

"அதுக்கு?"

"இன்னும் 10 நிமிஷம் இருக்கு"

"எதுக்கு?"

"கால்லேஜ் பஸ் வர்றதுக்கு"

". அபர்ணா கால்லேஜ் பஸ்ல வர்றதையே நான் மறந்துட்டேன். சரி சரி. விடு நான் பாத்துக்குறேன்"

"அண்ணா. ஒரு சின்ன சந்தேகம்"

நம்மள பார்த்து சந்தேகம் கேட்குறானே என்று எண்ணிக்கொண்டே, "என்ன?" என்றேன்.

"இல்லனா. எப்பவுமே, 2 பீரியட் முடிஞ்ச அப்புறம் தான் கால்லேஜ்க்கு  வருவிங்க. இன்னிக்கி என்னன்னா 1 மணி நேரம் முன்னாடியே வந்துட்டிங்க?"

ஆஹா. கரெக்டா பாயின்ட்ட புடிக்கிறானே என எண்ணிக்கொண்டே அவனிடம் கேட்டேன், "லாஸ்ட் செமஸ்டர் எவ்வளவு பெர்செண்டேஜ்?"

"98.2 % அண்ணா"

"1.8 % மிச்சம் இருக்கு பாரு. இந்த தடவ நல்லா படிச்சு 100% வாங்கு. ஓகே வா? அத விட்டுட்டு தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காத."

"சரின்னா"

"ம்ம்ம்" என்றவாறே, அங்கிருந்து நழுவி விட்டேன். விட்டால் வேறு ஏதாவது கேட்டுத் தொலைக்கப்போகிறான் என்றெண்ணி.

கல்லூரிப் பேருந்துகள் வந்து நிற்பதைப் பார்க்கும் விதமாக, எங்கள் வகுப்பறையில் ஒரு ஜன்னல் இருக்கும். அதைத் திறந்து விட்டுவிட்டு, அபர்ணாவின் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்தேன். வினாடிக்கு ஒரு முறை மணியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த பத்து நிமிடம், ஏனோ கணித வகுப்பின் கடைசி 10 நிமிடத்தை விட மிக மெதுவாக, மிகக் கொடுமையாக நகர்ந்து கொண்டிருந்தது. எப்படியோ ஒருவழியாக அந்த 10 யுகங்கள் கரைந்தன. என் வேதனையைப் புரிந்து வைத்த என் நண்பனைப்போல், சரியான நேரத்திற்கு கல்லூரியை வந்தடைந்தது எங்கள் கல்லூரிப் பேருந்து. சில வினாடிகளில், அபர்ணா பேருந்தை விட்டு இறங்கி வர ஆரம்பித்தாள்.

கடல் அலைகள் அதிகமாகப் பிடிக்கும் என்பதாலோ என்னவோ, வெளிர் நீலமும், ஊதாவும் கலந்த சுடிதாரில் அபர்ணா நடந்து வந்துகொண்டிருந்தாள். கைகளில், புத்தகங்களும் நோட்டுகளும் இருந்ததாலோ என்னவோ, அவற்றிற்குப் பதிலாக, அவளின் துப்பட்டா காற்றோடு கதை பேசிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. எப்போதும் போல் அவளின் கொலுசுகள், அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்பதைப் பறைசாற்றிக் கொண்டே வந்தன. நல்ல வேளை, அவள் கண்ணின் மொழிகள் எனக்குப் புரியாவிட்டாலும், அவளின் கால் கொலுசு மொழிகள் எனக்குக் கொஞ்சம் புரிந்தது. சரி. இதுதான் நேரம், என்று அவளை நோக்கிச் சென்றேன், அந்த இன்ஜினியரிங் கிராபிக்ஸ் புக்கைக் கொடுப்பதற்கு.

எங்கள் வகுப்பறையைக் கடந்து செல்லும்போது, துணிவை வரவழைத்து அவள் பேரைச் சொல்லி அழைத்தேன்.

"அபர்ணா"

குரல் கேட்டு நின்றாள் அவள். சிறு புன்முறுவலுடன் பேசத்தொடங்கினாள், "சொல்லுங்க"

"நீங்க கேட்டிங்களே, இன்ஜினியரிங் கிராபிக்ஸ் புக்"

". கடைசி உங்க பிரண்ட் உங்ககிட்ட புக்க குடுத்துட்டாரு போல"

நான் ஏதும் புரியாமல் விழித்தேன். "என்ன சொல்றிங்க?" என்றேன் சிறு தடுமாற்றத்துடன்.

"உங்க பிரண்ட் அறிவுகிட்ட இருந்து தானே வாங்கிட்டு வரிங்க இந்த புக்க?"

"அது உங்களுக்கு எப்படி தெரியும்?"

"நீங்க அவருகிட்ட இந்த புக்குக்காக கெஞ்சிக்கிட்டு இருந்தது பார்த்து தான், எங்க அம்மா என்கிட்ட சொன்னாங்க"

(ச்சே. மாட்டிக்கிட்டியேடா செல்வா. சரி எப்படியாவது சமாளி)

"உங்ககிட்ட இந்த புக் இல்லையா? இல்லைனா, இல்லன்னு சொல்லிருக்கலாம்ல"  - அபர்ணா.

"இல்லங்க, உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னுதான்..." என்றே சற்றே வழிந்தேன்.

"சரி, உங்ககிட்ட ஏன் இந்த புக் இல்ல?"

"என்கிட்ட மட்டும் இல்ல, எங்க கிளாஸ் யார் கிட்டயும் அந்த புக் இருக்காது"

"யார்கிட்டையுமே இருக்காதா? ஏன் அப்படி?"

"இன்ஜினியரிங் கிராபிக்ஸ் எக்ஸாம் முடிச்சிட்டு எல்லாரும் பிரண்ட் அக்காவோட மேரேஜுக்கு போறதா பிளான். ஆனா கிப்ட் அப்புறம் பஸ்சுக்கு யார் கிட்டயும் அமௌண்ட் இல்ல. அதனால...."

"அதனால?"

"எக்ஸாம் 10 நிமிடம் முன்னாடியே முடிச்சிட்டு வந்து..."

"வந்து...?"

"எல்லா பசங்களோட புக்கையும் சுட்டு எடை கடையில போட்டு அமௌண்ட் ரெடி பண்ணிடலாம்னு நான் தான் ஐடியா குடுத்தேன்" - தயங்கி தயங்கி ஒருவழியாக உண்மையை ஒத்துக்கொண்டேன்.

சற்றே அதிர்ச்சியுடன் கேட்டாள் அபர்ணா, "அடப்பாவி, கிளாஸ் இருக்குற 60 பேர் புக்சுமா?"

"ம்ஹ்ம். 61. புரபொசர் புக்கும் சேர்த்து..."

"அடப் பாவிகளா?"

என்ன செய்யலாம் இவனை என்பது போல் என்னைப் பார்த்தாள் அவள். தப்பு செய்து அம்மாவிடம், மாட்டிக்கொண்ட பையன் போல் நான் நின்றுகொண்டிருந்தேன். தலையை லேசாக ஆட்டிக்கொண்டே என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தாள். பின் பதில் ஏதும் சொல்லாமல், புத்தகத்தை வாங்கிக்கொண்டு நடக்கத் துவங்கினாள்.

"போச்சுடா. சுத்தமா சொதப்பிட்டியேடா" எனக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தது மனது. ஆனால் அவளோ, சில தூரம் சென்ற பின்,


அந்த ஆயுதத்தை என் மேல் வீசிச் சென்றாள். அவளின் 'சிறு முதல் சிரிப்பை'. அவ்வளவு நேரம் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்த மனம், ஆனந்தத்தில் கூத்தாடத் தொடங்கியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1