என்னருகே நீயிருந்தால் - பகுதி 1

1. கிரிக்கெட் மேட்ச்


இரத்தத்தை மட்டும்
உடல் முழுவதும்
பரப்பிக்கொண்டிருந்த என் இதயம்,
காதலையும் சேர்த்து
பரப்பத்தொடங்கியது.
உன்னைப் பார்த்தபின்..!


தன்னால் எவ்வளவு கோபத்தைக் காட்டமுடியுமோ அவ்வளவு கோபத்தையும் காட்டிக்கொண்டிருந்தது சூரியன். வானத்தில் இருந்து வெப்பம் மழையைப் பொழிவதுபோல் இருந்தது. கண்கள் பார்க்கும் திசையெல்லாம் கானல் நீரே நிரம்பியிருந்தது. நேரம் மதியம் 1 மணி இருக்கலாம். அங்கிருந்த அத்தனை முகங்களிலும் வியர்வைத்துளிகள் கூடாரமிட்டிருந்தன. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த அங்கிருந்த யாருக்கும் நேரமில்லை. எல்லோர் முகத்திலும் வியர்வையை மீறிய ஒரு வித பதற்றம், ஒரு எதிர்பார்ப்பு. அங்கிருந்த அத்தனை கண்களும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தன. என்னுடைய thigh pad ஐக் கட்டிக்கொண்டு, களம்புகத் தயாரானேன்.

"டே மாமா! லாஸ்ட் ஓவர் டா! 6 ரன் எடுக்கனும்டா. பத்தாததுக்கு பௌலிங் போடறது Mech தினேஷ் டா. நம்ம ஜெயிக்கிறதே இப்போ உன் கையில தாண்டா இருக்கு." காலில் விழாத குறையாக கதறிக்கொண்டிருந்தான் ராகேஷ்.

Mech Department தினேஷ். அனைவரும் பயப்படுவதற்கு முக்கியமான காரணம் அவன்தான். அவன் ஓவரில் அதிகபட்சமாக ஒரு அணி எடுத்த ரன்கள் 10. அவ்வளவு துல்லியமாக இருக்கும் அவன் பந்துவீச்சு. இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே அவன் லட்சியம். இப்போது அவன்தான் பந்துவீசப் போகிறான். நான் எதிர்கொள்ளப்போகிறேன்.

"கவலைப்படாதடா மாமா. நான் நம்ம டீம்ம காப்பாத்துறேன். ஒரே பால் ஒரு சிக்ஸ். முடிஞ்சுரும் மேட்ச். கவலைய விடு" - நான்.

"அந்தமாதிரி ஏதும் சுத்தி நீ அவுட் ஆயிருவன்னு தெரிஞ்சுதாண்டா உன்னை கடைசி விக்கெட்க்கு இறக்கி விடுறோம். இப்பவும் அப்படி ஆடி அவுட் ஆயிரதடா ராசா", ராகேஷ் கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னை அசிங்கப்படுத்தி விட்டு தொடர்ந்தான்.

"ஆப்போசிட்ல சாமி இருக்கான்டா. அவன்கிட்டயாவது ஸ்ட்ரைக்க குடுத்துரு. அவன் two 's ஓடியாவது ரன் எடுத்து குடுத்துருவாண்டா" என்றான்.

"சரி சரி." என்றேன் சற்று கம்மிய குரலில்.

கிளம்ப எத்தனித்தபோது, வினோத் ஆரம்பித்தான், "செல்லம் ராசா. சிங்கள் எப்படி எடுக்கனும்னு தெரியும்ல".

"அநியாயத்துக்கு அசிங்கப் படுத்துறாய்ங்களே" என்று எண்ணிக்கொண்டே பேட்டிங் செய்யக் களமிறங்கினேன். தினேஷ் அங்கு பில்டிங்ஐ சரிசெய்து கொண்டிருந்தான் அவன் டீம் கேப்டன்னுடன் சேர்ந்து.

உள்ளுக்குள் என் மனது எரிமலையாய் குமுறத் தொடங்கியிருந்தது, "செல்வா. இவனுங்க முகத்துல கரிய பூசனும்டா. இதுக்காகவாவது ஒரு சிக்ஸ் அடிச்சே ஆகணும். தைரியமா இரு. எவ்ளோ பெரிய பவுலரா இருந்தா என்ன. நம்ம சிக்ஸ் அடிக்கலாம். கவனமா இரு. நம்ம கலக்குறோம் இன்னிக்கி." என்றது.

மனது கொடுத்த தைரியத்துடன் களமிறங்கினேன். கண்டிப்பாக நான் சுவாமியை ஆடவைக்கத் தான் முயற்சி செய்வேன் என எல்லாரும் நினைப்பார்கள், தினேஷ் உட்பட. அவன் பந்துவீச்சும் நான் சிங்கள் எடுக்க முடியாதபடியே இருக்கும். எனவே முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து விடவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

அத்தனை வித யுக்திகளையும் எண்ணிக்கொண்டு தினேஷ் பந்துவீச வந்துகொண்டிருந்தான் என்னை நோக்கி. இதோ வீச வந்துவிட்டான்.

பந்து தினேஷின் கையில் இருந்து விடுபட்டு என்னைநோக்கி வந்துகொண்டிருந்தது.

உடலின் அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி, பற்களை இறுகக் கடித்து, மூச்சை நிறுத்தி, ஓங்கி, ஒரே ஒரு சுற்று, என் மட்டையை சுழற்றினேன்.

"டக்" என்ற சத்தம் கேட்டது.

பார்த்தேன். பந்து ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டது. உயர உயர செல்ல ஆரம்பித்தது.

இன்னும் கொஞ்சம் தான். இன்னும் கொஞ்சம். அதோ அதோ, பவுண்டரி லையனை கடக்கப் போகிறது. ஆகா. பிரமாதம். அவ்வளவு தான். ஓ யெஸ்! சிக்ஸ்!

சந்தோஷத்தில் எனக்குத் தலை கால் புரியவில்லை. நான் என் டீம் ஐ வெற்றி பெறச் செய்துவிட்டேன். அதுவும் ஒரு சிக்ஸ் அடித்து. சந்தோஷத்தில் எகிறிக் குதிக்கலானேன்.

"சிக்ஸர் சிக்ஸர். ஹே நான் சிக்ஸ் அடிச்சிட்டேன். ராகேஷ்! நான் சிக்ஸ் அடிச்சிட்டேன்"

"##$@$&*$@! பின்னாடி திரும்பி பாருடா நாயே! 3 ஸ்டிக்கும் புடுங்கிருச்சு. #$@$^*$%! வழக்கம் போல சுத்தி லூசுத்தனமா அவுட் ஆயிட்டியேடா. "

"என்னது அவுட் ஆயிட்டேனா. அப்போ அந்த சிக்ஸ்?" அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.

"அது சைடுல விளையாடிகிட்டு இருக்குற பக்கத்துக்கு டீம் பேட்ஸ்மன் அடிச்சது டா. $%@#@@! உருப்புடுவியாடா நீ. #&@^#%@&@&#^#! இருடா உன்ன...."

அடுத்த 15 நிமிடங்களுக்கு என் உடலை மைதானமாய் எண்ணி, என் அருமை (?) நண்பர்கள் அனைவரும் விளையாடிவிட்டனர். ஒரு பெரிய அடைமழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது.




இது தாங்க என் வாழ்க்கை. நான் ஒழுங்கா தான் எதாவது செய்யணும்னு நெனைப்பேன். ஆனா, ஏகத்துக்கு சொதப்பி, நல்லா வாங்கிக்கட்டிக்குவேன். ஒரு கிரிக்கெட் மேட்ச்கே இப்படின்னா, நான்லாம் லவ் பண்ணா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க. ஆனா, விதி யார விட்டது. எது நடக்கக்கூடாதுன்னு நினைக்கிறோமோ அது தானே முதல்ல நடக்குது. அதே தான். இந்த மேட்ச் முடிஞ்ச அடுத்தநாளே என் வாழ்க்கை மேட்ச் ஆரம்பிச்சிருச்சு. என்ன வாழ்க்கை சார் இது....!

கருத்துகள்

  1. நல்ல தொடக்கம் .. வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  2. அருமையானதொரு தொடக்கம்.... வாழ்த்துகள் செல்லா...உன் வாழ்க்கை வரலாறு தொடர் கதையாக வந்து வெற்றி பெருவதற்கு வாழ்த்துகள்...

    --பிரவின்குமார்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!