ஒரு பயணம்
ஒரு வழியாக நான் அந்த குளிர்சாதனப் பேருந்தில் ஏறியிருந்த போது, மழை வலுத்திருந்தது. காற்றின் அசாத்திய வேகமும், இடியின் ஓலமும், மழையின் தீவிரமும் பேருந்தின் கூரையைப் பிளந்துகொண்டு உள்ளே வந்துவிடவா என்று கேட்டுக்கொண்டிருந்தது. யார் மீது என்ன கோபமோ அவைகளுக்கு? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பயணச்சீட்டை வாங்கிவிட்டுக் காலியாய் இருந்த ஓர் இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டேன். முக்கால்வாசி மட்டுமே நிரம்பியிருந்த பேருந்தில் அமர்வதற்கு நிறைய இடம் இருந்தது. சில பெரியவர்கள் தங்கள் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். நடுத்தர வயதைத் தொட்டிருந்த சிலரோ, எதையோ எண்ணிச் சிந்தித்துக்கொண்டும், மொபைல் போனில் பேசிக்கொண்டும் இருந்தனர். என் வயதையொத்த சில யுவ, யுவதிகள் தங்கள் காதுகளை 'இயர் போனில்' சிறை வைத்திருந்தனர். சில காதல் ஜோடிகள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துகொண்டு மழையை அணு அணுவாய் ரசித்துக்கொண்டிருந்தனர். நடந்துகொண்டிருந்த இந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் சிறிதும் பொருத்தம் இன்றி என் மனதோடு போராடிக்கொண்டிருந்தேன் நான். மூளைக்குள் குடைந்துகொண்டிருக்கும் அந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை எனக்கு. நேரம் ஆக ஆக, அக்கேள்விகளின் உக்கிரமும், கூச்சலும் அதிகமாயிற்று. வெளியே மழை தீவிரமெடுக்கத் தொடங்கியிருந்த அதே நேரத்தில், உள்ளே என் மன ஓட்டங்களும் கட்டுக்கடங்காமல் ஓடத்துவங்கின. எங்கே பதில் தேடப்போகிறேன் இந்தக் கேள்விகளுக்கெல்லாம்?
"எதற்காக இப்படி ஒரு வாழ்க்கை? எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன்? வாழ்வதற்காகப் பணம் சம்பாதிக்கிறேனா? இல்லை பணம் சம்பாதிப்பதற்காக வாழ்கிறேனா? இந்த இளமையின் துடிப்பையும் வலிமையையும் இன்னும் எத்தனை காலத்திற்கு, முன்பின் அறியாத, முகம் தெரியாத ஓர் அந்நிய நாட்டின் தொழிற்கூடத்திற்குத் தாரை வார்க்கப்போகிறேன்? எத்தனை நாட்கள் இன்னும் தூக்கத்தைத் தொலைக்கப் போகிறேன்? இன்னும் எத்தனை முறை இன்னொருவன் என் உழைப்பைச் சுரண்டுவதைப் பார்த்துக்கொண்டும், 'ஒருவனைக் கீழே தள்ளித்தான் நீ முன்னேறமுடியும்' என்கிற அருவருக்கத்தக்க உபதேசத்தைக் கேட்டுக்கொண்டும் இருக்கப்போகிறேன்? முன் சிரித்துப் பின் முதுகில் குத்தும் கயவர்களை எத்தனை காலம் சகித்துக் கொண்டிருக்கப்போகிறேன்? ஊர் மறந்து, உறவுகள் மறந்து, நண்பர்கள் மறந்து, இந்த நாட்டையும் மறந்து எத்தனை நாள் வெளிநாட்டிற்குச் சேவகம் செய்யப்போகிறேன்? இன்னும் எத்தனை யுகங்கள் எனக்கு இந்த 'நரக' வாசம்? ஆண்டாவா? எதற்காக இத்தனை சோதனை? எனக்கு ஏன் இந்தத் தண்டனை? நிம்மதியான வாழ்வு என்று ஒன்று கிடையாதா? மகிழ்ச்சியான வாழ்க்கை என்று ஒன்று இல்லவே இல்லையா? ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம்....". அடங்காமல் என் மனசாட்சி என்னை உயிரோடு கொன்றுகொண்டிருக்க, குழப்பம் தாளாமல் வெடிக்கப்போகும் தலையை என் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டேன். எங்கேயோ சுற்றித் திரிந்துகொண்டிருந்த என் மனத்தை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது அந்தக் குரல்.
"அப்பா! அப்பா! அப்பா!"
அவளுக்கு வயது 6 இருக்கலாம். எனக்கு முன்னால் சில இருக்கைகள் தள்ளி ஜன்னலோரமாக அமர்ந்திருந்தாள். ஜடை என்று சொல்ல முடியாவிட்டாலும், குடுமி என்று சொல்லும் அளவுக்கு இரட்டைக் குடுமியுடன், வெளிர் நீல நிற ஸ்கர்ட்டில் அமர்ந்திருந்தாள். தவறு. வீற்றிருந்தாள் என்றே நான் சொல்லியிருக்கவேண்டும். ஒரு கையை ஜன்னல் கண்ணாடிமேல் வைத்துக்கொண்டு, மறு கையைத் தன் தந்தையின் கை மீது வைத்துக்கொண்டு, தன் பிஞ்சுக் கால்களை ஒன்றன் மீது ஒன்றாய் போட்டுக்கொண்டு, ஒரு இளவரசியாய் அமர்ந்திருந்தாள். எல்லா அப்பாக்களுக்கும் தங்கள் மகள் இளவரசி தானே! அவளும் இளவரசி தான்.
எல்லோரும் மழையை ரசித்துக்கொண்டிருக்க, அவள் மட்டும் மழையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். முழுவதுமாக இறுக்கி மூடப்பட்டிருந்த அந்தப் பேருந்தில், ஜன்னல் கண்ணாடி வழியாகத் தெரிந்த உலகுடன் அவள் கதை பேசிக்கொண்டு வந்தாள். ஒரு நிமிடம் கண்ணாடியில் வழிந்தோடும் மழைத்துளிகளுடன் தன் கை விரலால் ஓட்டப்பந்தயம் நடத்திக் கொண்டிருந்தாள். மறுநிமிடம் வெளியே இயங்கிக்கொண்டிருந்த அவசர உலகத்தைக் கை காட்டி நிறுத்தப் பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தாள். நடுநடுவே அவளுக்கென்று சில கேள்விகளும் இருந்தது. ஆனால் எல்லாவற்றிலும் உற்சாகம் நிரம்பி வழிந்தது.
"அப்பா! அந்த அண்ணா ஏன்பா மழையில நனைஞ்சுகிட்டே போறாங்க? அவங்க எங்க போறாங்க?"
"அவங்க அவங்களோட வீட்டுக்கு போறாங்கம்மா"
"நாமளும் வீட்டுக்குத் தானே போறோம்? நாம ஏன் மழையில நனையாம போறோம்?"
"மழையில நனைஞ்சா குட்டிமாக்கு காய்ச்சல் வந்துருமே. அப்பறம் அம்மா திட்டுவா. டாக்டர்கிட்ட வேற போய் ஊசி போட்டுக்கனுமே. அதான்"
"அப்போ, அந்த அண்ணனுக்கு எல்லாம் காய்ச்சல் வராதா?"
"அவங்க பெரிய அண்ணன் பா. அதனால அவங்களுக்கெல்லாம் காய்ச்சல் வராது"
"அப்போ நானும் பெரிய பொண்ணாயிட்டு மழையில நனைஞ்சா எனக்கும் காய்ச்சல் வராதா?"
"அப்போ வராதுமா"
"நாய்குட்டிலாம் நனைஞ்சுகிட்டே நிக்கிதேப்பா? ஏன்பா?"
"அதுக்கெல்லாம் வீடு இல்லையேம்மா. அதான்"
"நாய்க்குட்டியோட வீடு எங்க போச்சு?"
"தெரியலியேம்மா"......
அவள் கேள்விகள் நீண்டுகொண்டே சென்றுகொண்டிருந்தன. அத்தனைக்கும் மனம் தளராமல் பதில் சொல்லிக்கொண்டே வந்துகொண்டிருந்தார் அவளின் தந்தை. வெகுநேரமாய் நீடித்துக்கொண்டிருந்த அந்த உரையாடல் அங்கே சுற்றியிருந்த எல்லோரையும் சிறிது நேரத்தில் ஈர்த்துவிட்டிருந்ததில் ஆச்சரியம் இல்லை. அவள் கேள்விகளுக்கு சிறிது நேரத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் கூட பதில் சொல்லும் அளவுக்கு எல்லோரும் கலகலப்பாயிருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் அவள் கேள்விகள் அனைத்தும் நின்று போய்விட்டன. அதுவரை உற்சாகமாக இருந்த அவள் குரல் சற்றே கவலைகொள்ளத் தொடங்கியிருந்தது.
"அப்பா! அப்பா! என்னால வெளிய பாக்க முடியலப்பா"
பெருமழையின் காரணத்தாலும், குளிரூட்டியின் குளிர் காற்றினாலும், மக்களின் மூச்சுக் காற்று கண்ணாடி ஜன்னலில் மங்கலான ஆவியாக, பனிமூட்டமாகப் படரத் தொடங்கியிருந்தது. அதுவரை அவள் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த காட்சிகளை அந்த வெண்படலம் மறைத்துவிட்டிருந்தது.
"இது ஒன்னும் இல்லடா. இப்போ பாரு" என்று சொல்லியவாறே, அந்தப் பனிமூட்டத்தைக் கையால் துடைத்துவிட்டார் அவள் தந்தை. இப்போது மீண்டும் வெளியே அவளால் பார்க்க முடிந்தது. மறுபடியும் அவள் குதூகலமானாள். சற்று நேரத்தில் மீண்டும் ஒருமுறை பனி படர ஆரம்பித்திருந்தது. ஆனால் இம்முறை அவளே அதைத் துடைத்துவிட்டு விளையாடத்துவங்கியிருந்தாள். அவள் விளையாட்டில் இன்னுமொன்று கூடியிருந்தது.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த அடுத்த நொடியில், எதுவோ ஒன்று விளங்கியதைப்போல் இருந்தது எனக்கு. பொருளின் நிறையைக் கண்டுபிடிக்கத் தெரிந்துவிட்ட ஆர்க்கிமிடிஸ்ஸாய் உற்சாகம் கரைபுரண்டு ஓடத்துவங்கியது. மனமும் உடலும் ஒரு சேர ஊக்கம் பெற்று எழுந்தது. இவ்வளவு நாட்களாய் மனதை அரித்துக்கொண்டிருந்த அந்தக் கேள்விகள் எல்லாம் இப்போது காணமல் போயிருந்தது. என்னை நானே ஒருமுறை இந்த உலகக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டேன். ஆனால் இம்முறை எந்த பனிமூட்டங்களும் இல்லாமல். குழப்பம், வருத்தம், கோபம், ஏக்கம், பயம், கவலை என்ற அத்தனை எண்ணங்களையும் விலக்கிவிட்டுப் பார்த்துக்கொண்டேன். நான் நானாகத்தான் இருக்கிறேன். மக்கள் மக்களாகவே தான் இருக்கிறார்கள். தெருக்களும், வீதிகளும் அவைகளாகவே இருந்தன. இந்த உலகம், உலகமாகத்தான் இருக்கிறது. எப்போதும் போல், என்றும் போல் சுற்றிக்கொண்டே தான் இருக்கிறது, மிக அழகாக..!
சற்றுநேரத்தில் எனக்கான நிறுத்தம் வந்ததும் நான் பேருந்தில் இருந்து இறங்கிக்கொண்டேன். மழை இப்போது முற்றிலுமாய் விட்டிருந்தது. என் முன்னால் புதியதோர் உலகம் விரியத் தொடங்கியிருந்தது, எனக்காக..!
-செல்லா

சிறப்பான சிறுகதை! வாழ்த்துக்கள்! இன்றைய வலைச்சரத்தில் தங்களை அறிமுகம் செய்துள்ளார் கார்த்திக் சரவணன். சென்றுபார்க்க இதோ லிங்க்: http://blogintamil.blogspot.in/2015/06/blog-post_18.html வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்புக்கு நன்றி நண்பரே... :)
நீக்கு