ஒரு கருப்பு பெல்ட்..!
வழக்கமான மாலைப்பொழுது. அலுவலகம் முடிந்து எப்போதும் போல் வீட்டிற்கு வந்து உடைகளை மாற்ற எண்ணினேன். நான் வீட்டிற்கு வரவும், அகில் எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. என்னைக் காட்டவேண்டி அகிலைப் படுக்கையிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தார் விக்கி. காலையில் மனமில்லாமல் அலுவலகத்திற்கு என்னை வழியனுப்பியவன், மாலை நான் வீட்டிற்கு வந்ததும் மிகவும் குஷியாகிவிட்டான். விக்கியின் கைகளில் இருந்த அவன், என்னைப் பார்த்ததும் உடனே இறங்கிக்கொண்டு, வாய் நிறைய புன்னகையுடன் தன் கை இரண்டையும் நீட்டியவாறே குதித்துக் குதித்து என்னைப்பிடிக்க ஓடிவந்தான். ஆசையாய் ஓடிவந்தவன் என்னைக் கட்டிக்கொள்வான் என எதிர்பார்த்தேன். ஆனால் அவனோ, அருகில் வந்ததும் நின்றுவிட்டான். நின்றதோடு மட்டுமில்லாமல் என் வலது கையையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்படி என்ன நான் கையில் வைத்திருக்கிறேன் என எனக்கே யோசனை தோன்ற என் வலது கையைப் பார்த்தேன். என் வலது கையில் என் பெல்ட் மட்டும் இருந்தது. "இதையா ஆச்சரியமாகப் பார்க்கிறான்?" என்றெண்ணி "வேணுமா?" என்று அவனைப் பார்த்தவாறே கையில் இருந்த பெல்ட்டை அவன் கைகளுக்கு அருகில் கொண்டு சென்றேன்.