மொழிய முடியா இக்கணம்



இன்று தான் கேட்கிறேன் 
அந்த வார்த்தையை
அந்த முதல் வார்த்தையை
நீ என்னிடம் சொல்ல எண்ணிய
அந்த முதல் வார்த்தையை

பட்டுக்குரலெடுத்து
பளிங்குபோல் மிருதுவாக
அலைபேசியின் வாயருகில்
அழகான உன் பூவிதழ்பதித்து
அடுக்கடுக்காய் எழுத்துகளை
அச்சுப்பிசகாமல் கோர்த்துவைத்து
மெல்லிய சிறு இடைவெளியில்
மெதுவாக,
மென்மையாக,
"மாமா" என நீ அழைத்தது.

இது தானா!
இது தானா அந்த நிமிடம்!
எத்தனை நாள்,
எத்தனை நாள் ஏங்கியிருப்பேன்
இந்த வார்த்தையைக் கேட்க..!
எத்தனை தடவை திண்டாடியிருப்பேன்
உன்னைப் பேசவைக்க..!
எத்தனை நிமிடங்கள் காத்திருந்திருப்பேன்
உன் குரலைக் கேட்டிருக்க..!
எத்தனை முறை போராடித் தோற்றிருப்பேன்
உன்னை,
என் பெயரைச் சொல்லவைக்க..!
ஆனால்,
இன்று,
யாருமே சொல்லித்தராமல்,
எந்த போராட்டமும் இல்லாமல்
நீ அழைக்கிறாய்
நீயாக அழைக்கிறாய் என்னை..!
முதல் முறையாக..!
ஆனால் முழுவதுமாக..!

"ஆங்"
"மாமா"
"மாமா"
"மம்மா"
"மாமா"
"மாமா.. அக்கு"
"அம்மா... மாமா"
"மாமாகு"

அந்தக் கீச்சுக்குரலுக்குள் ஒளிந்திருந்து வெளிவரும்
அத்தனை வார்த்தைக்குள்ளும்தான்
எவ்வளவு சந்தோசம்.
என்னுடன் பேசுவதை எண்ணி..!

அள்ளியணைக்கும் தூரத்தில் நீயும் இல்லை
ஆர்ப்பரித்து மகிழும் இடத்தில் நானும் இல்லை
என்ன செய்வேன் இந்த உணர்வுகளை இப்போது,
என் தாய்த்தமிழில் கட்டிவைப்பதைத் தவிர..!

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்
பனிக்கு நடுவில் உறைந்திருக்கும்போதும்,
மெல்லிய உன் விரல் தீண்டல் போல
நெஞ்சத்தைத் தொட்டு இதமாக்கிவிட்டுப் போனது,
நீ என்னிடம் பேசிய அந்த முதல் வார்த்தை

உன் அருகில் இருந்த
அத்தனை நாளும்
இப்படித்தான் அழைத்திருப்பாயோ?
மௌன மொழிகள் கூட
புரிகிற மனதுக்கு, ஏனோ
மழலை மொழிகள் மட்டும் புரிவதில்லை

முதன்முதலாய்ப் பேசிவிட்ட
மகிழ்ச்சியினாலோ என்னவோ,
மறுபடி மறுபடி
உச்சரித்துக்கொண்டிருந்தாய்
என் பெயரை.
மனம் நிறைந்த மகிழ்ச்சியில்
மறுமொழியிட நா எழாது
மெல்லிய மௌனம் மட்டுமே
மிச்சமிருந்தது என்னிடம்..!

அரைமணி நேர
அமுத மொழிக்குப் பின்
அயர்ந்து போனாய் நீ,
அசந்து போனேன் நான்..!
முடிவாய் சிறு முத்தத்தைப்
பரிசாய்த் தந்துவிட்டு
மூழ்கிப்போனாய் தூக்கத்தில் நீ..!
மொழியால் மொழியமுடியாத இக்கணத்தை
மனதில் வடிக்கத் துவங்கியிருந்தேன் நான்...!

புகைப்படம் மூலம்: இணையம்

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!