Monday, March 31, 2014

ஒரு வெட்டி(பையன்) கதை


இந்தக் கதையின் நாயகன், நாயகன் அப்படின்னுலாம் சொல்ல முடியாது. கதையோட கரு (ஓவரா பேசுறேன்ல) என்னை சுத்தி இருக்குறதுனால, ஒரு வகையில என்னை பத்தின கதைன்னு வச்சுக்கலாம். ங்கொய்யால நீயெல்லாம் ஹீரோவா அப்டின்னு நீங்க கேக்குறது தெரியுது. ஆனாலும், உங்களுக்கு வேற வழி கெடையாது. இந்தக் கொடுமையெல்லாம் நீங்க அனுபவிச்சுத் தான் ஆகணும். என்னை சுத்தி நடக்கவே நடக்காத விஷயங்கள வச்சு ஒரு கதை எழுதலாம்னு நெனச்சப்பதான் இந்த ஐடியா வந்துச்சு. இந்தக் கதை நல்லா இருக்குனு நெனச்சிங்கன்னா, இன்னொரு கதை எழுதி உங்கள சந்தோஷ(???)ப்படுத்துவேன். மொக்கையா இருக்குனு சொன்னிங்கன்னா, நல்லா இருக்குனு நீங்க ஒத்துக்குற வரை கதையா எழுதி சாவடிப்பேன். என்ன பண்லாம்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க.... ;) ஓகே. லெட்ஸ் ஸ்டார்ட் தி கதை.


பகுதி-1: ஆபிஸ் அலப்பரைஇன்னையில இருந்து சரியா ஒரு வருஷம் மூணு மாசத்துக்கு முன்னாடி, ஏதோ ஒரு நாள்....!

வழக்கம் போல, என்னோட ரெட் கலர் அபாச்சி பைக்க பார்க்கிங் ல போட்டுட்டு இன்னிக்கி என்ன வில்லங்கத்த சந்திக்கப் போறோமோன்னு ஒரு பீதியோடையே ஆபிசுக்குள்ள நுழைஞ்சேன். ஆக்சஸ் கார்ட எடுத்து கதவுகிட்ட காட்டிட்டு, திருடன் வீட்டுக்குள்ள நுழையிற மாதிரி சத்தமே இல்லாம உள்ள நுழைஞ்சேன். நேரா என் பிளேசுக்கு போற மாதிரியே ஓரக்கண்ணால, என் லீட் மணி வந்துட்டாரான்னு பார்த்தேன். அவரு சீட் காலியா இருந்துச்சு. அப்பாடா, இன்னிக்கி நமக்கு யோகம் டா. லீட் வர்றதுக்கு முன்னாடி வந்துட்டோம். சைலண்ட்டா போய் நம்ம பிளேசுல உக்காந்துரவேண்டியது தான் அப்டின்னு, கமுக்கமா போய் உக்காந்த்துக்கிட்டேன்.

அன்னிக்கி வந்த மெயில் எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கும் போதே, என்னையே அறியாம தலை ஒரு யூ டர்ன் அடிச்சது. காரணம், டெஸ்டிங் டீம் ல புதுசா ஜெயின் பண்ணியிருக்குற பொண்ணு. பாவி மவ. இம்புட்டு அழகாவா இருப்பா! சென்னை வெயிலுக்குள்ள எப்படிடா இப்டி உருகாத ஐஞ்சரை அடி ஐஸ்க்ரீம் சிலைய செஞ்சீங்க அப்படின்னு தான் கேக்கத் தோனுச்சு அவள பார்த்ததும். மூணு நாளைக்கு முன்னாடி தான் ஜாயின் பண்ணிருக்கா டீம்ல. நார்த் இந்தியா. சொந்த ஊரு பேரு, ஏதோ ஜாமோ, பட்டரோ சொன்னானுங்களே. ஆ. ஜாம்ஷெட்பூர். அங்க இருந்து இங்க வந்து எங்க தூக்கத்தெல்லாம் தூக்கிட்டு போயிட்டா. பேரு தான் கண்டு பிடிக்க முடியல. இந்த வினித் பய கண்டு பிடிச்சிட்டான். ஆனா சொல்ல மாட்டேங்குறான். சரி இருக்கட்டும் அவன கவனிச்சிக்கிறேன். அதுக்கு முன்னாடி இவள கவனிச்சிக்கிறேன். ம்ம்ம். எம்புட்டு கலரா இருக்கா. நான்லாம் இவ கலருக்கு மாறனும்னா, பேர் அண்ட் ஹான்ட்சமாலையே தினமும் குளிக்கனுமே. ம்ம்ம். அடடா...

வாயில இருந்து ஜொள்ளு வர இருந்த அந்த நிமிஷம், எனக்குப் பின்னாடி இருந்து யாரோ என்னைக் கூப்பிட்டாங்க.

"சுந்தர். ரொம்ப பிசியா?"

இந்தக்கொரலு... அய்யய்யோ... என் லீட் மணி வாய்ஸ்ல இது..... இப்பத்தனையா நீ வரலனு நெனச்சு சந்தோஷமா இருந்தேன். அதுக்குள்ளே எப்படியா வந்த, அப்படின்னு யோசிச்சுக்கிட்டே ஸ்லோ மோஷன்ல திரும்புனேன்.

"மணி. இப்பதான் உங்கள தேடிக்கிட்டு இருந்தேன். உங்க பிளேசுல பார்த்தேன். நீங்க இல்ல. அதான் வரலையோன்னு நெனச்சு சுத்தி முத்தி பார்த்துக்கிட்டு இருந்தேன்" - மானா வாரியா பொய் சொன்னேன். மவனே. செத்ததுக்கு அப்பறம் கண்டிப்பா உனக்கு கும்பிபாகம் தாண்டி அப்டின்னு மைண்ட் வாய்ஸ் சொல்லுச்சு.

"ஒ. இசிட். இன்ட்ரஸ்டிங். எதுக்காக என்ன தேடுனிங்க?"

"அது வந்து. ஆ. வீக்லி ஸ்டேடஸ் ரிபோர்ட்டுக்காக. ஆமா. வீக்லி ஸ்டேடஸ் ரிபோர்ட்டுக்காக" - அகைன் எ சமாளிபிகேசன்.

"வாவ். நான் கூட உங்கள அதுக்காகத்தான் மீட் பண்ணனும்னு நெனச்சேன். கொஞ்சம் என் கேபின்க்கு வர்ரிங்களா?" அப்படின்னு சிரிச்சுக்கிட்டே மணி சொன்னப்ப, எனக்கு வயித்தில பீதிய கெளம்புச்சு. இன்னைக்கு பொழப்பு இவரு கூடத்தானா? என்ன நடக்கப்போகுதுன்னு தெரியலையே. பயந்துகிட்டே மணியோட கேபின்குள்ள போனேன்.

நம்ம மேனேஜர் இல்ல லீட்ட கேபின்குள்ள போறதும், சிவாஜி பட ஆபிஸ் ரூம்குள்ள போறதும் ஒன்னு. வாங்கி கட்டாம திரும்ப வரவே முடியாது. தப்பா அனுப்பிச்ச வீக்லி ஸ்டேடஸ் ரிபோர்ட்டுக்காக அரை மணி நேரம், கதறக் கதற டோஸ் வாங்குனேன். என்ன தான் வளச்சு வளச்சு ஆப்பு வாங்குனாலும், அத கொஞ்சம் கூட வெளிய காட்டிக்காம சிரிச்ச மாதிரியே கேபின் விட்டு வெளிய வந்தேன். அப்படியே மேனேஜ் பண்ணிக்கிட்டே போய் என் எடத்துல உக்காந்தேன்.

"காலங்காத்தாலையே வாங்கி கட்டிகிட்ட போல" அப்டின்னு ஒரு சவுண்ட் கேட்டுச்சு. இப்ப யாரு அப்டின்னு நெனச்சுகிட்டு எழுந்து பார்த்தா, பக்கத்து க்யூபிக்கள்ல உக்காந்துகிட்டு நக்கலா பாத்து சிரிச்சுக்கிட்டு இருந்தானுங்க வினித்தும், ஸ்ரீயும். இவனுங்க தான். என் உயிரை வாங்குற நண்பர்கள்.

"அதெப்புடிடா நான் வாங்கிக்கட்டும் போது மட்டும் கரெக்டா நோட் பண்ணுறிங்க?"

"எங்க வேலையே அதானே" - வினித்

"ஏண்டா மாமா. இப்படி அசிங்க அசிங்கமா திட்டு வாங்குறியே, உனக்கு வெட்கமா இல்ல?" - ஸ்ரீ

"அதையும் ஒட்டுகேட்டுட்டு வந்து என்கிட்டையே கேக்குறியே உனக்கு இது கேவலமா தெரியல" - நான்

"அடியே. அவன் கேவலப்பட்றது இருக்கட்டும். உன்ன தெருவறிய ஊரறிய நாடறிய கேவலப்படுத்திட்டாயங்காடி" அப்டின்னு சொல்லிகிட்டே 31 பல்லையும் (சமயத்துல ஓவரா பேசுறான்னு ஒரு பல்ல நாங்களே புடுங்கிட்டோம்) காட்டிகிட்டு சிரிச்சான் வினித்.

"என்னடா என்ன சொல்ற?" - அசிங்கப்பட்டோமா? மறுபடியுமா? ஒ காட் என அலறியது இதயம்.

"மொதல்ல உன் மெயில் பாக்ஸ ஓபன் பண்ணு ராசா" - வினித்

அவசரமா மெயில் தொறந்து பார்த்தா, உள்ள பட்ட அசிங்கத்த வெளிப்படையா ஊருக்கே மெயில் போட்டு நாரடிச்சிருந்தாறு மணி. கீழ, இது மாதிரி யாரும் செய்யக்கூடாதுன்னு ஒரு நோட் வேற. என்ன வச்சே காமெடி பண்ணுங்கடா.

இன்னிக்கும் அசிங்கப்பட்டோமா, அப்டின்னு நெனச்சுகிட்டு இருக்கும்போதே, சைலெண்ட்டா வினித்தும் ஸ்ரீயும் அவனுங்க எடத்த விட்டு என் எடத்துக்கு எழுந்து வந்து நின்னுகிட்டு நான் பட்ட அசிங்கத்த என் மெயில் பாக்ஸ்லையே பார்த்து ரசிச்சுகிட்டு இருந்தானுங்க.

போச்சுடா இன்னைக்கு என்ன பண்ண போறானுங்கனு தெரியலையே. கமுக்கமா மெயில் பாக்ஸ மூடிட்டு போயிடவேண்டியது தான் அப்படின்னு நெனச்சுகிட்டு இருக்கும் போதே, அந்த மெயில் வந்துச்சு. போயும் போயும் இவனுங்க இருக்கும் போது தானா அந்த மெயில் வரணும்...?!!??!

"டேய் மாமா. இன்னொரு மெயில் வந்துருக்குடா. மேனேஜரும் கிழிச்சுருப்பாரோ?" - என சிரிச்சிகிட்டே சொன்னான் ஸ்ரீ.

போச்சுடா. பாத்துட்டானுங்களா அப்டின்னு நெனைக்கும்போதே, சேர்ந்தாப்ல சொல்ல ஆரம்பிச்சானுங்க, "மாமு, மெயில் வந்துருக்கு பாரு. அத ஓபன் பண்ணுடா செல்லம்"ன்னு.

"அது வந்துடா.." என நான் ஆரம்பிக்கும் முன்னாடியே, என் மெயில அவனுங்க ஓபன் பன்னிட்டானுங்க. ஆனா, அந்த மெயில தொறந்து பார்த்ததும் நாங்க மூணு பேருமே அப்படியே ஷாக் ஆயிட்டோம்...!!!

Monday, March 17, 2014

மொழிய முடியா இக்கணம்இன்று தான் கேட்கிறேன் 
அந்த வார்த்தையை
அந்த முதல் வார்த்தையை
நீ என்னிடம் சொல்ல எண்ணிய
அந்த முதல் வார்த்தையை

பட்டுக்குரலெடுத்து
பளிங்குபோல் மிருதுவாக
அலைபேசியின் வாயருகில்
அழகான உன் பூவிதழ்பதித்து
அடுக்கடுக்காய் எழுத்துகளை
அச்சுப்பிசகாமல் கோர்த்துவைத்து
மெல்லிய சிறு இடைவெளியில்
மெதுவாக,
மென்மையாக,
"மாமா" என நீ அழைத்தது.

இது தானா!
இது தானா அந்த நிமிடம்!
எத்தனை நாள்,
எத்தனை நாள் ஏங்கியிருப்பேன்
இந்த வார்த்தையைக் கேட்க..!
எத்தனை தடவை திண்டாடியிருப்பேன்
உன்னைப் பேசவைக்க..!
எத்தனை நிமிடங்கள் காத்திருந்திருப்பேன்
உன் குரலைக் கேட்டிருக்க..!
எத்தனை முறை போராடித் தோற்றிருப்பேன்
உன்னை,
என் பெயரைச் சொல்லவைக்க..!
ஆனால்,
இன்று,
யாருமே சொல்லித்தராமல்,
எந்த போராட்டமும் இல்லாமல்
நீ அழைக்கிறாய்
நீயாக அழைக்கிறாய் என்னை..!
முதல் முறையாக..!
ஆனால் முழுவதுமாக..!

"ஆங்"
"மாமா"
"மாமா"
"மம்மா"
"மாமா"
"மாமா.. அக்கு"
"அம்மா... மாமா"
"மாமாகு"

அந்தக் கீச்சுக்குரலுக்குள் ஒளிந்திருந்து வெளிவரும்
அத்தனை வார்த்தைக்குள்ளும்தான்
எவ்வளவு சந்தோசம்.
என்னுடன் பேசுவதை எண்ணி..!

அள்ளியணைக்கும் தூரத்தில் நீயும் இல்லை
ஆர்ப்பரித்து மகிழும் இடத்தில் நானும் இல்லை
என்ன செய்வேன் இந்த உணர்வுகளை இப்போது,
என் தாய்த்தமிழில் கட்டிவைப்பதைத் தவிர..!

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்
பனிக்கு நடுவில் உறைந்திருக்கும்போதும்,
மெல்லிய உன் விரல் தீண்டல் போல
நெஞ்சத்தைத் தொட்டு இதமாக்கிவிட்டுப் போனது,
நீ என்னிடம் பேசிய அந்த முதல் வார்த்தை

உன் அருகில் இருந்த
அத்தனை நாளும்
இப்படித்தான் அழைத்திருப்பாயோ?
மௌன மொழிகள் கூட
புரிகிற மனதுக்கு, ஏனோ
மழலை மொழிகள் மட்டும் புரிவதில்லை

முதன்முதலாய்ப் பேசிவிட்ட
மகிழ்ச்சியினாலோ என்னவோ,
மறுபடி மறுபடி
உச்சரித்துக்கொண்டிருந்தாய்
என் பெயரை.
மனம் நிறைந்த மகிழ்ச்சியில்
மறுமொழியிட நா எழாது
மெல்லிய மௌனம் மட்டுமே
மிச்சமிருந்தது என்னிடம்..!

அரைமணி நேர
அமுத மொழிக்குப் பின்
அயர்ந்து போனாய் நீ,
அசந்து போனேன் நான்..!
முடிவாய் சிறு முத்தத்தைப்
பரிசாய்த் தந்துவிட்டு
மூழ்கிப்போனாய் தூக்கத்தில் நீ..!
மொழியால் மொழியமுடியாத இக்கணத்தை
மனதில் வடிக்கத் துவங்கியிருந்தேன் நான்...!

புகைப்படம் மூலம்: இணையம்

-செல்லா

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...