Friday, September 26, 2014

என் கண்கள்

எதற்காக என்னிடம் இருக்கின்றன இந்த இரு கண்கள்,
எங்கு நீ சென்றாலும் அவை உன்னைப் பின்தொடரும் போது?


-செல்லா

சவால்

எனக்கு உலகிலேயே மிகப்பெரிய சவால்,
தினமும் உன்னைக் கடக்கும் போது,
உன் கண்களைப் பார்த்தபின்னும்
உன்னிடம் காதலைச் சொல்லாமல்,
காலை வணக்கம் மட்டும் சொல்லிப் போவது தான்..!


-செல்லா

Wednesday, September 24, 2014

எப்படி செய்வது காதல்?

'யூ ஆர் சோ ஸ்வீட்' என்றால்,
'ஹலோ. சிக்னல் சரியா கெடைக்கல' என்கிறாய்.
போடா
உன்னை வைத்துக்கொண்டு
எப்படித்தான் காதல் செய்வதோ..!

-செல்லா

உன்னால் மட்டுமே

உன்னால் மட்டுமே அழகாக்க முடிகிறது
ஒரு 'ச்சீ'யையும், 'போடா'வையும்... :)

-செல்லா 

விளையாடும் காதல்

வேண்டுமென்றே 'பிரதர்' என்றழைக்கிறாய் நீ! - உன்
விருப்பத்திற்காகவே பொய்க்கோபம் கொள்கிறேன் நான்!
சீண்டலையும் கோபமாயும்
விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது காதல்

-செல்லா

Thursday, August 7, 2014

ஏன் பிறக்கவில்லை

ஏன் நாய்க்குட்டியாய்ப் பிறக்கவில்லை என்று தோன்றுகிறது,
அத்தனை கொஞ்சலாய் நீ, "என்னடா குட்டிமா" என்று கொஞ்சும் போது..!

-செல்லா

Wednesday, July 30, 2014

நிரப்ப முடியா காதல்

மொழிகளால் நிரப்பமுடியாத
காதல்களைஎல்லாம் ஏனோ,
இந்த 'ம்ம்ம்ம்ம்', 'அப்புறம்' நிரப்பிவிடுகிறது..!

-செல்லா

Thursday, July 10, 2014

இரு தேவதைகள்

Image description not specified.


நிரம்பி வழிந்துகொண்டிருந்தது அந்த மருத்துவமனை
பெயர் சொல்லத்தெரியாத மருந்துகளின் வாசத்தால்!

மழித்துத் துடைக்கப்பட்டிருந்த சலவைக்கல் தரையாய்
சலனமின்றிக்கிடக்கிறது என் மனம்.
இன்னும் என்ன இருக்கிறது?
என்ன மிச்சம் இருக்கிறது?
எல்லா எதிர்பார்ப்புகளும்
எல்லாக் கனவுகளும்
காற்றோடு காற்றாய் கரைந்த பின்
இன்னும் மிச்சமென்ன இருக்கிறது!

ஒரு மகள்,
ஒரே மகள்.
இல்லை இல்லை!
ஒரே தேவதை.
ஒரே தெய்வம்.
அப்படித்தான் அவள் எனக்கு!

மூவேழ் ஆண்டுகட்குமுன்,
ஒரு தேவதைத்திருநாளில்,
பூமியில் வந்து அவதரித்தாள் அவள்!
ஒரு ஆண்மகன் என என்னையும்,
ஒரு அன்னை என என் மனைவியையும்
ஊரறிய அறிவிப்பதற்காக..!

அன்று,
அந்த நன்னாளில்,
அவ்வழகிய நேரத்தில்,
பத்துமாதம் சுமந்த சுகத்தை
இறக்கிவைத்தக் களிப்பிலோ என்னவோ,
அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் என் மனைவி.
அழகாய்த் தூங்கிக்கொண்டிருந்தாள் என் மகள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரும்பிக்கொண்டிருந்த கேசம்,
சிறுமொட்டாய் மூடிக்கிடக்கும் கண்கள்,
சிறு இதழ், அதில் குறு நகை,
கனவிலும் கூட கடவுளிடம் பேசும் கை கால்கள்,
வெண்பஞ்சாய் வெளுத்திருந்த தேகம்!
அவ்வப்போது சிணுங்கல்கள், அழகாய்ச் சிறு அழுகைகள்!
அத்தனையும் செய்வது அவள், என் மகள்!

தொடவா? நானா? அவளையா?
இத்தனை மென்மையைத் தாங்குமோ என் தேகம்?
இந்தத் தீண்டுதலைத் தாங்குமோ என் நேசம்?
தொட்டுப்பார்க்கலாமா?
தொட்டுப்பார்க்கும் அளவிலா இருக்கிறாள் இவள்!
இளவரசிபோலன்றோ மிரட்டுகிறாள் தூக்கத்திலேயே!
எளியோன் நான், இளவரசியைத் தீண்டவோ?

அரைமணிநேர என் அவஸ்தையை
முடித்து வைத்தாள் என் மனைவி,
"பயப்படாம தூக்குங்க உங்க பொண்ணை.
ஒன்னும் ஆயிறாது உங்க பொண்ணுக்கு!" எனச் சிரித்தவாறே!
அவளுக்கென்ன தெரியும், நான் படும் அவஸ்தை!

அதுவாகத்தான் இருக்கும்.
என் வாழ்நாளில்,
அவ்வளவு கவனமாய்
அவ்வளவு சிரத்தையாய்,
அதி சிரத்தையாய் நான் செய்த ஒரே விஷயம்.
அப்பப்பா!

என் வலக்கை கீழிருக்க,
இடக்கை மேலிருக்க,
ஒய்யாரமாய் அதன்மேல் தூங்கிக்கொண்டிருந்தாள்!
என் மகள்.
என் மகள்!

என்ன செய்வேன்?
எதுவும் தோன்றவில்லை.
எதுவும் ஓடவில்லை.
அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்!
இப்போதே உடைந்து வந்து,
இவளை அள்ளி அணைத்துக்கொள்ளவோ,
உச்சி முகர்ந்திடவோ எனக்
கேட்டுக்கொண்டிருந்தது என் பாச அணை,
கண்ணில் சிறுதுளி ஆனந்தக் கண்ணீராய்!
ம்ஹூம். அழக்கூடாது!
ஆண்மகனாயிற்றே! அழக்கூடாது!

நினைப்பதெல்லாம் நடக்குமா எப்போதும்?
கட்டிவைத்திருந்த அத்தனை மன வெள்ளத்தையும்
உடைத்து எறிந்தாள் என் கண்மணி தன் காலால்!
மண்ணில் பிறந்ததும் முதன் முதலாய்க்
கால்பதித்தாள் என் நெஞ்சில்!
ஒரு சிறு உதை..!
தன் பிஞ்சுக்கால்களால்,
இந்த அப்பனின் நெஞ்சில் ஒரு சிறு உதை..!

அவ்வளவுதான்..!
அழுது தீர்த்தேன் அத்தனை வேகமாய்!
போதும்! எதற்கு நடிப்பானேன்?
ஏன் நடிப்பானேன்?
என் மகள் முன் தானே அழுகிறேன்!
என் மகளைக்கண்ட பூரிப்பில் தானே அழுகிறேன்!
அழுதுவிட்டுப்போகிறேன்!
அவளுக்காய்.
அவளுக்கே அவளுக்காய்..!
என்ன வேண்டும் இந்த மண்மேல் எனக்கு இனி
இவளைப் பார்த்திருப்பதைத்தவிர..!
இவளைக் காத்திருப்பதைத்தவிர..!

இன்றும்,
இந்நொடி வரையிலும்
வேறெதுவும் வேண்டப்பட்டதில்லை எனக்கு,
இவளைத்தவிர..!
இருந்தும்,
இருந்தும்..!

கை பிடித்து நடக்கும்போது
என்னைத்தேடிய அவள் ஏனோ,
இன்னொருவன் கை பிடிக்கும் போது
தேடவில்லை..!
வேண்டாம் என்பேன் எனப் பயந்தாளோ?
வேற்றுமதத்தவன், வெறுப்பேன் என நினைத்தாளோ?

வீட்டை அலங்கரித்து வீதியெல்லாம் தோரணமிட்டு
பந்தக்கால் நட்டுப் பட்டுத்துணியுடுத்தி
ஊரார் அட்சதையிட உறவினர்கள் வாழ்த்துரைக்க
வான் சென்ற முன்னோரும் மண்வந்து ஆசி கூற
நானும் நின்றிருக்க நன்னாளில், நடந்தேறும் இவள் திருமணம் என
மனத்தால் களித்திருந்தேன், மணநாள் குறித்திருந்தேன்!
விடிந்தால் வரும் அவள் மணநாள் என
விழிமூடி நான் காத்திருக்க,
விடிந்தது அந்த நாள், என் மகள்
விட்டுப்போன காகிதத்துடன்..!

சொல்லித் தெரியவேண்டியதில்லை மற்றது.
சொல்லில் தெரியக்கூடியதுமில்லை சிலது.
கடந்து போன காயங்களின்
வடுக்கள் மட்டும் மீந்திருக்க
நிகழ்காலம் நிழலாடிக்கொண்டிருக்கிறது!

'பெண் குழந்தை பிறந்திருக்கு.
உள்ள போய் பாருங்க' என்ற
செவிலியின் உதட்டசைவில்
மீண்டும் உயிர்பெற்றது என் உடல்.

'பெண் குழந்தை பிறந்திருக்கு.
உள்ள போய் பாருங்க' என்ற
செவிலியின் உதட்டசைவில்
மீண்டும் உயிர்பெற்றது என் உடல்.

உள்ளே,
அந்த அறையின் தொட்டிலை
ஆக்கிரமித்திருந்தாள் இன்னொருத்தி!
அத்தனை களேபகரங்களுக்கும்
தொடர்பே இல்லாத ஒருத்தி..!

அவளைப்போல்,
அச்சு அசலாய் அவள் அன்னையைப்போல்,
சிறிதும் பிசகாமல் செதுக்கி அனுப்பியிருந்தான் பிரம்மன்..!

எத்தனை வருத்தம்
எத்தனை ஏக்கம்
இருந்தும்,
இவளேதும் செய்யவில்லையே!
இவள்மேல் பழியில்லையே!

மையிடும் விழிமூடி உறங்கும் மலரை,
மடியில் கிடத்திக்கொண்டேன் வாஞ்சையாய்..!
பிஞ்சுத் தீண்டலிலும் கூட
இவள் பெற்றவள் போலத்தான்!

ஏமாற்றங்களும் ஏக்கங்களும் கரைய
பாசமும் பரிவும் கூடிப்போனது அவள்மேல்..!
ஆசையாய் நான் முத்தமிட,
மறுமொழியாய்ச் செல்லமாய் உதைத்தாள் என் மார்பில்..!
அப்படியே அவள் அன்னைபோலவே..!

சிலிர்த்துப்போனேன் நான்..!
மீண்டும் இந்நன்னாளில்
இன்னொரு தேவதை என் வீடு தேடி வந்ததற்காக..!


-செல்லா

புகைப்படம் மூலம்: இணையம்

Sunday, April 6, 2014

நீமுதல் முறையாய் 
அமைதியாகிப்போனது நம் வீடு
இந்த இருபத்தைந்து வருடங்களில்..!

வாசலை அடைத்தபடி
நிலைக்கதவில் யாரும் தொங்கிக்கொண்டிருக்கவில்லை

'என் அறை உள்ளே வராதே'
என என்னை விரட்ட ஆளில்லை

சமைக்கும் நேரமெல்லாம்
அம்மாவின் அருகே நின்று கதைபேச ஆளில்லை

இரவில் தான் சாப்பிடும்முன் அம்மாவிடம்,
'அவன் சாப்பிட்டானா?' என அப்பா கேட்பதில்லை.

எல்லாம் உன்னால் தான்.
உன் ஒருவனாலே தான்.
வெளிநாடு கிளம்பிய உன்னை
விமான நிலையம் வந்து வழியனுப்பியவரை
யோசிக்கவே இல்லை 
இத்தனையும் நடக்குமென்று..!

யாரோ சொன்னார்கள்
'முதல் பிள்ளை பெண்ணாயிருந்தால்
இரண்டாவது பிள்ளைக்கு இரண்டு தாய்' என..!

யாருமே சொல்லவில்லை
'முதல் பிள்ளை ஆணாயிருந்தால்
இரண்டாவது பிள்ளைக்கு இரண்டு தந்தை' என..!

மருத்துவமனையில் நான் பிறந்திருந்தபோது,
மடியில் என்னைத் தூக்கிவைத்துக்கொண்டு,
'என் தங்கச்சி. நான் யாருக்கும் தரமாட்டேன்' என
ஐந்து வயதில் நீ செய்த அந்த 
அழகான அட்டூழியம் தான்,
அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட
உன்னைப்பற்றிய முதல் நினைவு..!

உப்பு மூட்டையும் குதிரை சவாரியுமாய்
உன்னோடு கழித்த பொழுதுகள் சிறிது என்றால்,
புத்தகத்திற்கு அட்டை போடுவதும்
பாடம் படிப்பதுமாய் கழித்த பொழுதுகள் மற்றது..!

சுகமாய் வலித்துக்கொண்டிருக்கிறது,
ஒவ்வொருமுறை என்னைக்கொட்டிவிட்டு,
என்னிடம் மாட்டிக்கொள்ளாதபடி நீ 
தப்பி ஓடிவிடும் தருணங்கள்..!

அடிநெஞ்சில் கனத்து நிற்கிறது,
நான் செய்த தவறுக்கு
அம்மாவை, என்னை அடிக்கவிடாமல் தடுத்து
நடுவில் நின்றுகொண்டு
நீ வாங்கிப்போன அடிகள்...!

இப்போதும் அலமாரியில்
ஒரு ஓரத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறது
அன்றொருநாள், 
இரவு பத்து மணிக்கு மேல் கடைக்குப்போய், 
எனக்காக வாங்கி வந்த நோட்டுப்புத்தகம்..!

இன்றும் சரியாய் இருக்கிறது,
எனக்கும் நம் தங்கைக்கும்
நடக்கும் வாக்குவாதத்தில்
நடுவராய் நின்று நீ சொன்ன தீர்ப்புகள்..!

வெளியுலகை நான் ரசித்த
அத்தனை பாதுகாப்பான நாட்களுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது
எனக்காக நீ விட்டுக்கொடுத்த உன் வாழ்வின் நிமிடங்கள்..!

எத்தனை நாட்கள்,
எத்தனை நினைவுகள்,
எல்லாம் உன் ஒருவனால் தான்..!

சிரித்துக்கொண்டே நீ செய்த குறும்புகளைப்போல்,
அன்றும் சொல்லிப்போனாய் 
உன் வெளிநாட்டு வேலை வாய்ப்பைப்பற்றி
அதே சிரிப்புடன்..!

கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என்றெண்ணி,
சந்தோஷத்துடன் அனுப்பிவைத்தோம்,
தெரிந்தே உன்னையும்,
தெரியாமலே உன்னுடன் எங்கள் சந்தோஷத்தையும்..!

உன்னை விட்டுவிட்டு 
உன் நினைவுகளையெல்லாம் சேமித்து வைத்திருக்கும் நம் வீடு,
ஒவ்வொரு நாளும் சொல்லிவிட்டுப் போகிறது,
நீ செய்த அத்தனை குறும்புகளையும்..! 

அனுதினமும் ஆயிரம் முறை
உன்னைப்பற்றி நினைப்பது 
அம்மா பாசம் என்றால்,
ஆலயம் சென்று
உனக்காக வேண்டிக்கொண்டு வருவது
அப்பா பாசம்..!

'இந்த மடியில தான் 
எப்பவும் படுத்திருப்பான் 
சாயங்காலம். 
அங்க ஒழுங்கா தூங்குறானோ இல்லையோ' 
என்ற அம்மாவின் வார்த்தைக்கும்,
அலைபேசியில் நான் பேசும்போது,
'வெளியில போகும்போது
கனத்த சட்டை போட்டுட்டு போகச்சொல்லு.
பனி ஒத்துக்காம போயிறபோகுது'
என அக்கறையாய்ச் சொல்லும்
அப்பாவின் சொல்லுக்கும்
'அவன் என்ன சின்ன பையனா?'
அவனுக்கு எல்லாம் தெரியும்' என
சமாதானம் சொல்வேனே தவிர,
இல்லாத கடவுளைஎல்லாம்
வேண்டிக்கொண்டே தான் இருக்கிறேன் நானும், 
அங்கே நீ நன்றாக இருக்கவேண்டுமென..!

இரண்டு வருடத்தில் வந்துவிடுவாய் என்றாலும்,
எனக்குத்தான் புரியவில்லை, நீயின்றி
எப்படி இருக்கப்போகிறேன் இந்த இரண்டு வருடங்கள் என..!

வறுமை வரவேண்டாம் என எண்ணித்தான்
வழியனுப்பி வைத்தோமே தவிர,
வாழ்நாள் முழுவதும் வசதியாய் வாழ்வதற்கல்ல..!
விருப்பமில்லாமல் ஏற்றிருக்கும் இந்தப்பிரிவை
விருப்பப்பட்டு கொடுத்துவிடாதே வாழ்நாளெல்லாம்..!

எங்களுக்காகத் தானே அங்கே போயிருக்கிறாய்,
எங்களுக்காகவே கொஞ்சம் சீக்கிரம் வந்துவிடேன்..!
ஏனென்றால்,
நிஜங்களோடு வாழ்ந்து பழகிவிட்ட எங்களுக்கு
நினைவுகளோடு வாழத் துணிவு இல்லை..!

-செல்லா

புகைப்படம் மூலம்: இணையம் 

Monday, March 31, 2014

ஒரு வெட்டி(பையன்) கதை


இந்தக் கதையின் நாயகன், நாயகன் அப்படின்னுலாம் சொல்ல முடியாது. கதையோட கரு (ஓவரா பேசுறேன்ல) என்னை சுத்தி இருக்குறதுனால, ஒரு வகையில என்னை பத்தின கதைன்னு வச்சுக்கலாம். ங்கொய்யால நீயெல்லாம் ஹீரோவா அப்டின்னு நீங்க கேக்குறது தெரியுது. ஆனாலும், உங்களுக்கு வேற வழி கெடையாது. இந்தக் கொடுமையெல்லாம் நீங்க அனுபவிச்சுத் தான் ஆகணும். என்னை சுத்தி நடக்கவே நடக்காத விஷயங்கள வச்சு ஒரு கதை எழுதலாம்னு நெனச்சப்பதான் இந்த ஐடியா வந்துச்சு. இந்தக் கதை நல்லா இருக்குனு நெனச்சிங்கன்னா, இன்னொரு கதை எழுதி உங்கள சந்தோஷ(???)ப்படுத்துவேன். மொக்கையா இருக்குனு சொன்னிங்கன்னா, நல்லா இருக்குனு நீங்க ஒத்துக்குற வரை கதையா எழுதி சாவடிப்பேன். என்ன பண்லாம்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க.... ;) ஓகே. லெட்ஸ் ஸ்டார்ட் தி கதை.


பகுதி-1: ஆபிஸ் அலப்பரைஇன்னையில இருந்து சரியா ஒரு வருஷம் மூணு மாசத்துக்கு முன்னாடி, ஏதோ ஒரு நாள்....!

வழக்கம் போல, என்னோட ரெட் கலர் அபாச்சி பைக்க பார்க்கிங் ல போட்டுட்டு இன்னிக்கி என்ன வில்லங்கத்த சந்திக்கப் போறோமோன்னு ஒரு பீதியோடையே ஆபிசுக்குள்ள நுழைஞ்சேன். ஆக்சஸ் கார்ட எடுத்து கதவுகிட்ட காட்டிட்டு, திருடன் வீட்டுக்குள்ள நுழையிற மாதிரி சத்தமே இல்லாம உள்ள நுழைஞ்சேன். நேரா என் பிளேசுக்கு போற மாதிரியே ஓரக்கண்ணால, என் லீட் மணி வந்துட்டாரான்னு பார்த்தேன். அவரு சீட் காலியா இருந்துச்சு. அப்பாடா, இன்னிக்கி நமக்கு யோகம் டா. லீட் வர்றதுக்கு முன்னாடி வந்துட்டோம். சைலண்ட்டா போய் நம்ம பிளேசுல உக்காந்துரவேண்டியது தான் அப்டின்னு, கமுக்கமா போய் உக்காந்த்துக்கிட்டேன்.

அன்னிக்கி வந்த மெயில் எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கும் போதே, என்னையே அறியாம தலை ஒரு யூ டர்ன் அடிச்சது. காரணம், டெஸ்டிங் டீம் ல புதுசா ஜெயின் பண்ணியிருக்குற பொண்ணு. பாவி மவ. இம்புட்டு அழகாவா இருப்பா! சென்னை வெயிலுக்குள்ள எப்படிடா இப்டி உருகாத ஐஞ்சரை அடி ஐஸ்க்ரீம் சிலைய செஞ்சீங்க அப்படின்னு தான் கேக்கத் தோனுச்சு அவள பார்த்ததும். மூணு நாளைக்கு முன்னாடி தான் ஜாயின் பண்ணிருக்கா டீம்ல. நார்த் இந்தியா. சொந்த ஊரு பேரு, ஏதோ ஜாமோ, பட்டரோ சொன்னானுங்களே. ஆ. ஜாம்ஷெட்பூர். அங்க இருந்து இங்க வந்து எங்க தூக்கத்தெல்லாம் தூக்கிட்டு போயிட்டா. பேரு தான் கண்டு பிடிக்க முடியல. இந்த வினித் பய கண்டு பிடிச்சிட்டான். ஆனா சொல்ல மாட்டேங்குறான். சரி இருக்கட்டும் அவன கவனிச்சிக்கிறேன். அதுக்கு முன்னாடி இவள கவனிச்சிக்கிறேன். ம்ம்ம். எம்புட்டு கலரா இருக்கா. நான்லாம் இவ கலருக்கு மாறனும்னா, பேர் அண்ட் ஹான்ட்சமாலையே தினமும் குளிக்கனுமே. ம்ம்ம். அடடா...

வாயில இருந்து ஜொள்ளு வர இருந்த அந்த நிமிஷம், எனக்குப் பின்னாடி இருந்து யாரோ என்னைக் கூப்பிட்டாங்க.

"சுந்தர். ரொம்ப பிசியா?"

இந்தக்கொரலு... அய்யய்யோ... என் லீட் மணி வாய்ஸ்ல இது..... இப்பத்தனையா நீ வரலனு நெனச்சு சந்தோஷமா இருந்தேன். அதுக்குள்ளே எப்படியா வந்த, அப்படின்னு யோசிச்சுக்கிட்டே ஸ்லோ மோஷன்ல திரும்புனேன்.

"மணி. இப்பதான் உங்கள தேடிக்கிட்டு இருந்தேன். உங்க பிளேசுல பார்த்தேன். நீங்க இல்ல. அதான் வரலையோன்னு நெனச்சு சுத்தி முத்தி பார்த்துக்கிட்டு இருந்தேன்" - மானா வாரியா பொய் சொன்னேன். மவனே. செத்ததுக்கு அப்பறம் கண்டிப்பா உனக்கு கும்பிபாகம் தாண்டி அப்டின்னு மைண்ட் வாய்ஸ் சொல்லுச்சு.

"ஒ. இசிட். இன்ட்ரஸ்டிங். எதுக்காக என்ன தேடுனிங்க?"

"அது வந்து. ஆ. வீக்லி ஸ்டேடஸ் ரிபோர்ட்டுக்காக. ஆமா. வீக்லி ஸ்டேடஸ் ரிபோர்ட்டுக்காக" - அகைன் எ சமாளிபிகேசன்.

"வாவ். நான் கூட உங்கள அதுக்காகத்தான் மீட் பண்ணனும்னு நெனச்சேன். கொஞ்சம் என் கேபின்க்கு வர்ரிங்களா?" அப்படின்னு சிரிச்சுக்கிட்டே மணி சொன்னப்ப, எனக்கு வயித்தில பீதிய கெளம்புச்சு. இன்னைக்கு பொழப்பு இவரு கூடத்தானா? என்ன நடக்கப்போகுதுன்னு தெரியலையே. பயந்துகிட்டே மணியோட கேபின்குள்ள போனேன்.

நம்ம மேனேஜர் இல்ல லீட்ட கேபின்குள்ள போறதும், சிவாஜி பட ஆபிஸ் ரூம்குள்ள போறதும் ஒன்னு. வாங்கி கட்டாம திரும்ப வரவே முடியாது. தப்பா அனுப்பிச்ச வீக்லி ஸ்டேடஸ் ரிபோர்ட்டுக்காக அரை மணி நேரம், கதறக் கதற டோஸ் வாங்குனேன். என்ன தான் வளச்சு வளச்சு ஆப்பு வாங்குனாலும், அத கொஞ்சம் கூட வெளிய காட்டிக்காம சிரிச்ச மாதிரியே கேபின் விட்டு வெளிய வந்தேன். அப்படியே மேனேஜ் பண்ணிக்கிட்டே போய் என் எடத்துல உக்காந்தேன்.

"காலங்காத்தாலையே வாங்கி கட்டிகிட்ட போல" அப்டின்னு ஒரு சவுண்ட் கேட்டுச்சு. இப்ப யாரு அப்டின்னு நெனச்சுகிட்டு எழுந்து பார்த்தா, பக்கத்து க்யூபிக்கள்ல உக்காந்துகிட்டு நக்கலா பாத்து சிரிச்சுக்கிட்டு இருந்தானுங்க வினித்தும், ஸ்ரீயும். இவனுங்க தான். என் உயிரை வாங்குற நண்பர்கள்.

"அதெப்புடிடா நான் வாங்கிக்கட்டும் போது மட்டும் கரெக்டா நோட் பண்ணுறிங்க?"

"எங்க வேலையே அதானே" - வினித்

"ஏண்டா மாமா. இப்படி அசிங்க அசிங்கமா திட்டு வாங்குறியே, உனக்கு வெட்கமா இல்ல?" - ஸ்ரீ

"அதையும் ஒட்டுகேட்டுட்டு வந்து என்கிட்டையே கேக்குறியே உனக்கு இது கேவலமா தெரியல" - நான்

"அடியே. அவன் கேவலப்பட்றது இருக்கட்டும். உன்ன தெருவறிய ஊரறிய நாடறிய கேவலப்படுத்திட்டாயங்காடி" அப்டின்னு சொல்லிகிட்டே 31 பல்லையும் (சமயத்துல ஓவரா பேசுறான்னு ஒரு பல்ல நாங்களே புடுங்கிட்டோம்) காட்டிகிட்டு சிரிச்சான் வினித்.

"என்னடா என்ன சொல்ற?" - அசிங்கப்பட்டோமா? மறுபடியுமா? ஒ காட் என அலறியது இதயம்.

"மொதல்ல உன் மெயில் பாக்ஸ ஓபன் பண்ணு ராசா" - வினித்

அவசரமா மெயில் தொறந்து பார்த்தா, உள்ள பட்ட அசிங்கத்த வெளிப்படையா ஊருக்கே மெயில் போட்டு நாரடிச்சிருந்தாறு மணி. கீழ, இது மாதிரி யாரும் செய்யக்கூடாதுன்னு ஒரு நோட் வேற. என்ன வச்சே காமெடி பண்ணுங்கடா.

இன்னிக்கும் அசிங்கப்பட்டோமா, அப்டின்னு நெனச்சுகிட்டு இருக்கும்போதே, சைலெண்ட்டா வினித்தும் ஸ்ரீயும் அவனுங்க எடத்த விட்டு என் எடத்துக்கு எழுந்து வந்து நின்னுகிட்டு நான் பட்ட அசிங்கத்த என் மெயில் பாக்ஸ்லையே பார்த்து ரசிச்சுகிட்டு இருந்தானுங்க.

போச்சுடா இன்னைக்கு என்ன பண்ண போறானுங்கனு தெரியலையே. கமுக்கமா மெயில் பாக்ஸ மூடிட்டு போயிடவேண்டியது தான் அப்படின்னு நெனச்சுகிட்டு இருக்கும் போதே, அந்த மெயில் வந்துச்சு. போயும் போயும் இவனுங்க இருக்கும் போது தானா அந்த மெயில் வரணும்...?!!??!

"டேய் மாமா. இன்னொரு மெயில் வந்துருக்குடா. மேனேஜரும் கிழிச்சுருப்பாரோ?" - என சிரிச்சிகிட்டே சொன்னான் ஸ்ரீ.

போச்சுடா. பாத்துட்டானுங்களா அப்டின்னு நெனைக்கும்போதே, சேர்ந்தாப்ல சொல்ல ஆரம்பிச்சானுங்க, "மாமு, மெயில் வந்துருக்கு பாரு. அத ஓபன் பண்ணுடா செல்லம்"ன்னு.

"அது வந்துடா.." என நான் ஆரம்பிக்கும் முன்னாடியே, என் மெயில அவனுங்க ஓபன் பன்னிட்டானுங்க. ஆனா, அந்த மெயில தொறந்து பார்த்ததும் நாங்க மூணு பேருமே அப்படியே ஷாக் ஆயிட்டோம்...!!!

Monday, March 17, 2014

மொழிய முடியா இக்கணம்இன்று தான் கேட்கிறேன் 
அந்த வார்த்தையை
அந்த முதல் வார்த்தையை
நீ என்னிடம் சொல்ல எண்ணிய
அந்த முதல் வார்த்தையை

பட்டுக்குரலெடுத்து
பளிங்குபோல் மிருதுவாக
அலைபேசியின் வாயருகில்
அழகான உன் பூவிதழ்பதித்து
அடுக்கடுக்காய் எழுத்துகளை
அச்சுப்பிசகாமல் கோர்த்துவைத்து
மெல்லிய சிறு இடைவெளியில்
மெதுவாக,
மென்மையாக,
"மாமா" என நீ அழைத்தது.

இது தானா!
இது தானா அந்த நிமிடம்!
எத்தனை நாள்,
எத்தனை நாள் ஏங்கியிருப்பேன்
இந்த வார்த்தையைக் கேட்க..!
எத்தனை தடவை திண்டாடியிருப்பேன்
உன்னைப் பேசவைக்க..!
எத்தனை நிமிடங்கள் காத்திருந்திருப்பேன்
உன் குரலைக் கேட்டிருக்க..!
எத்தனை முறை போராடித் தோற்றிருப்பேன்
உன்னை,
என் பெயரைச் சொல்லவைக்க..!
ஆனால்,
இன்று,
யாருமே சொல்லித்தராமல்,
எந்த போராட்டமும் இல்லாமல்
நீ அழைக்கிறாய்
நீயாக அழைக்கிறாய் என்னை..!
முதல் முறையாக..!
ஆனால் முழுவதுமாக..!

"ஆங்"
"மாமா"
"மாமா"
"மம்மா"
"மாமா"
"மாமா.. அக்கு"
"அம்மா... மாமா"
"மாமாகு"

அந்தக் கீச்சுக்குரலுக்குள் ஒளிந்திருந்து வெளிவரும்
அத்தனை வார்த்தைக்குள்ளும்தான்
எவ்வளவு சந்தோசம்.
என்னுடன் பேசுவதை எண்ணி..!

அள்ளியணைக்கும் தூரத்தில் நீயும் இல்லை
ஆர்ப்பரித்து மகிழும் இடத்தில் நானும் இல்லை
என்ன செய்வேன் இந்த உணர்வுகளை இப்போது,
என் தாய்த்தமிழில் கட்டிவைப்பதைத் தவிர..!

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்
பனிக்கு நடுவில் உறைந்திருக்கும்போதும்,
மெல்லிய உன் விரல் தீண்டல் போல
நெஞ்சத்தைத் தொட்டு இதமாக்கிவிட்டுப் போனது,
நீ என்னிடம் பேசிய அந்த முதல் வார்த்தை

உன் அருகில் இருந்த
அத்தனை நாளும்
இப்படித்தான் அழைத்திருப்பாயோ?
மௌன மொழிகள் கூட
புரிகிற மனதுக்கு, ஏனோ
மழலை மொழிகள் மட்டும் புரிவதில்லை

முதன்முதலாய்ப் பேசிவிட்ட
மகிழ்ச்சியினாலோ என்னவோ,
மறுபடி மறுபடி
உச்சரித்துக்கொண்டிருந்தாய்
என் பெயரை.
மனம் நிறைந்த மகிழ்ச்சியில்
மறுமொழியிட நா எழாது
மெல்லிய மௌனம் மட்டுமே
மிச்சமிருந்தது என்னிடம்..!

அரைமணி நேர
அமுத மொழிக்குப் பின்
அயர்ந்து போனாய் நீ,
அசந்து போனேன் நான்..!
முடிவாய் சிறு முத்தத்தைப்
பரிசாய்த் தந்துவிட்டு
மூழ்கிப்போனாய் தூக்கத்தில் நீ..!
மொழியால் மொழியமுடியாத இக்கணத்தை
மனதில் வடிக்கத் துவங்கியிருந்தேன் நான்...!

புகைப்படம் மூலம்: இணையம்

-செல்லா

Monday, February 24, 2014

தற்காப்பு

இந்தப் பதிவு எவ்வளவு தூரம் மற்றவர்களுக்கு உதவமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் பகிர்ந்து கொள்வது நல்லது என்று தோன்றியது.
நீங்கள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போதோ, அல்லது வெளியே சென்றுவிட்டு உங்கள் வீட்டுக்கு அல்லது நண்பர்கள் வீட்டுக்கு செல்லும் போதோ, யாரேனும் உங்களைத் தாக்க முயன்றால் (எந்த நோக்கத்திற்காக இருந்தாலும் சரி) தப்பித்துச் செல்வது மிகவும் அவசியம். ஆனால், எவ்வாறு தப்பிப்பது என்பதில் தான் பெரும்பாலும் குழப்பம் வருகிறது. நம்மை விட வலிமையாக இருப்பவர்களிடம் மாட்டிக்கொள்ளும்போது, தப்பித்துச் செல்வது அவ்வளவு எளிதாக இருக்காது. ஆனால், கொஞ்சம் முயற்சித்தால் மன உறுதி கொண்டிருந்தால், தப்பித்தே தீரவேண்டும் என்று  எண்ணினால், கண்டிப்பாகத் தப்பிக்கலாம். உங்கள் எதிராளியை சரியான இடத்தில் தாக்கினால் கண்டிப்பாக நீங்கள் தப்பிச் செல்ல வழி பிறக்கும். கீழ்க்காணும் வழிகளை ஆபத்து நேரத்தில் உங்களைத் தற்காத்துக்கொள்ள உபயோகிக்கலாம். (உங்கள் யாருக்கும் அப்படி ஒரு நாள்/நேரம் வந்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்).
முக்கியக்குறிப்பு: தயவு செய்து இதை நண்பர்களிடம் / தெரிந்தவர்களிடம் முயற்சிக்க வேண்டாம்.
1. சண்டையிட எண்ணாதீர்கள்:
முடிந்த வரை, சண்டையிடவோ தாக்கவோ எண்ணாதீர்கள். உங்களை யாரேனும் பின் தொடர்வதாகவோ, அல்லது அந்த இடத்தில் உங்களைத் தவிர வேறு யாரேனும் இருப்பது போல் தோன்றினாலோ, முடிந்தவரை அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். நண்பர்களிடமோ அல்லது பெற்றவர்களிடமோ முடிந்த வரை எங்கு செல்கிறீர்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று அடிக்கடி தெரிவித்துக்கொண்டே இருங்கள். 'ஸ்பீட் டயல்' மூலம் நெருங்கியவர்கள் எங்களை பதிந்து வைத்திருங்கள். தேவைப்பட்டால், எளிதாகத் தொடர்புகொள்ளலாம். (ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் முடிந்த வரை 'லாக்' இல்லாமல் வைத்திருங்கள். தனியாக இருக்கும் போது ஏற்படும் பயத்தில், உங்களால் சரியாக 'அன்லாக்' செய்ய முடியாமல் போகலாம்). கூடுமான வரையில், ஆட்கள் அதிகம் இருக்கும் இடங்களுக்கோ அல்லது அருகில் இருக்கும் நண்பர்கள் வீடுகளுக்கோ சென்று விடுங்கள்.
2. பயத்தைக் கட்டுப்படுத்துங்கள்:
இது கடினமான விஷயம் தான் என்றாலும், நீங்கள் தப்பிக்க வேண்டுமே. முடிந்த வரை உங்கள் பயத்தைக் கட்டுப்படுத்துங்கள். உங்களுக்கே தெரியாத உங்கள் பலத்தை உங்கள் பயம் உங்களுக்குக் காட்டிக் கொடுக்கும். ஆனால், அதிகமாக பயந்துவிட்டால் உங்கள் மூளை வேலை செய்யாது போய்விடும். எவ்வளவு இக்கட்டான சூழலாக இருந்தாலும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று மூளை யோசித்துக்கொண்டே இருக்க வேண்டும். நினைவிருக்கட்டும். எப்படியேனும் நீங்கள் தப்பிக்கவேண்டும்.
3. தேவை வரும்போது தாக்குங்கள்:
தாக்கியே தீரவேண்டும், இனி ஓட வழி இல்லை என்று என்னும் போது, எப்பேர்ப்பட்ட பிரச்சனை வருவதாக இருந்தாலும் சரி, தாக்குவதற்கு யோசிக்க வேண்டாம். ஆனால், தாக்குவதற்கு முன் யோசித்துத் தாக்குங்கள்.
a)  எக்காரணம் கொண்டும் கீழே விழுந்து விடாதீர்கள். உங்கள் எதிராளிக்கு இது சாதகமாகப் போய்விடும். மானபங்கம் செய்ய முயற்சிக்கும் எவரும் உங்களைக் கீழே தள்ளிவிடவேண்டும் என்றே எண்ணுவர். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். முடிந்த வரை கீழே விழுந்து விடாதீர்கள்.
b)  கண்கள் - முடிந்த வரை உங்கள் எதிராளியின் கண்களைத் தாக்குங்கள். கண்கள் மிகவும் மிருதுவான பகுதி. எவ்வளவு பெரிய பலவானாக இருந்தாலும் சரி, கண்களில் தாக்குதல் ஏற்படும் போது, எதிராளி நிலை குலைவதோடு பார்வைத்திறனும் பாதிக்கப்படுவதால், உங்களுக்குத் தப்பித்துச் செல்ல ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

Image description not specified. 

Image description not specified. 
c)  காது - கண்ணிற்கு அடுத்து, எதிராளியை நிலை குலையச் செய்யும் இன்னொரு உறுப்பு காது. காதில் அடிப்பதால் என்னவாகும் என்று நினைத்தால் ஒரே ஒரு முறை உங்கள் கையால் உங்கள் காதில் அடித்துப் பாருங்கள் புரியும். காதில் ஏற்படும் அதிர்வுகள் மூளை வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவு இருப்பதால் காதுகளைத் தாக்குவதும் உங்களுக்குத் தப்பிக்க ஒரு வாய்ப்பைத் தரும்.

Image description not specified. 
d)  மூக்கு - நமக்கும் சரி, நம் எதிராளிக்கும் சரி. மூச்சு சீராகச் சென்று வருவதற்கு மூக்கு தேவை. நீங்கள் எதிராளியின் மூக்கை உடைக்கும் அளவுக்கு வலிமையானவராக இருக்கவேண்டிய அவசியமில்லை. உண்மையில் மூக்கை உடைப்பதனால் அதிகம் பாதிப்பு இருக்காது. ஆனால், மூச்சோட்டத்தை தடை செய்யும் வகையில் தாக்கும் போது, கண்டிப்பாக அதற்குப் பலன் இருக்கும். மூச்சு ஓட்டம் தடைபடும் போது, எதிரி நிலைகுலைவது உறுதி.

Image description not specified. 
e)  கழுத்து - வாயுடன் இணைந்திருக்கும் கழுத்தின் மேல் பகுதி நுண்ணுணர்வு மிகுந்த பகுதி. கட்டை விரலால் நாம் கொடுக்கும் சிறிய அழுத்தம் கூட, நல்ல வலியை உண்டாக்கும். படத்தில் காட்டியுள்ளவாறு நாம் தாக்கும் பட்சத்தில் எதிராளியின் செயல்பாடுகள் முடங்கும்.

Image description not specified. 
அதே போல் தொண்டைக்குழியில் நாம் தரும் அழுத்தமும் நம் எதிராளியை பலவீனப்படுத்தும்.

Image description not specified. 
f)  இணைப்புகள் - பெரும்பாலும் கை மற்றும் மணிக்கட்டு இணைப்புகள், முழங்கால் இணைப்புகள் போன்றவை அதிகம் வலு இல்லாமல் இருக்கும். சரியாகத் தாக்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால், அந்த இடங்களில் தாக்கலாம்.
g)  பிறப்புறுப்பு - மனித உடலில் உள்ள ஒரு முக்கியமான நுண்ணுணர்வு மிக்க பகுதி பிறப்புறுப்புகள். பொதுவாக பிறப்புறுப்புகளில் தாக்குவது நல்லதல்ல. ஆனால், வேறு வழி இல்லை என்ற சூழலில் உங்களைத் தற்காத்துக்கொள்ள, எதிரியின் பிறப்புறுப்பில் தாக்கலாம். பெரும்பாலும் எதிரியை நகரவிடாதபடி செய்துவிடும் இவ்வகைத் தாக்குதல்கள். அதிக அபாயகரமானதும் கூட. எதிரி உங்களைப் பின்னாலிருந்து தாக்க வந்தாலும் சரி, முன்னாலிருந்து தாக்க வந்தாலும் சரி, எதிரியின் பிறப்புறுப்பில் தாக்கி நிலைகுலையச் செய்வது எளிது. ஆனால், அவசியம் வந்தால் ஒழிய, இந்த வகைத் தாக்குதல்களில் ஈடுபடவேண்டாம்.

Image description not specified.

Image description not specified. 
h) நகங்கள் - முடிந்தவரை ஒரு கையிலாவது நகங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிரியின் உடலில் நகக்கீறல்கள் படும்போது உண்டாகும் எரிச்சல், சில சமயங்களில் நீங்கள் தப்பிக்க வழி தரலாம்.
i) உங்களுடன் இருப்பவை - உங்களுடன் இருக்கும் எந்த ஒரு பொருளையும் நீங்கள் ஆயுதமாக உபயோகிக்கலாம். உங்கள் கைப்பை, செருப்பு, உங்கள் கைக்கடிகாரம் எதுவாக இருந்தாலும் சரி. அதை உபயோகப்படுத்துங்கள். ஹை ஹீல்ஸ் அணிபவராக இருந்தால், உங்கள் ஹை ஹீல்ஸ் செருப்பு உங்கள் எதிரியைத் தாக்க ஒரு நல்ல ஆயுதம் தான். ஆனால் நினைவிருக்கட்டும். ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு உங்களால் தப்பித்து ஓட முடியாது.
4) தொழில்நுட்பம்: புதிய மொபைல் போனிற்கும், லேப்டாப்பிற்கும், கேட்ஜெட்களுக்கும் செலவிடும் நேரத்தில் கொஞ்சம் தற்காப்புக்காக ஒதுக்கிடுங்கள். பெண்களின் நலன் கருதி, பல 'ஆண்ட்ராயிட் ஆப்'கள், இருக்கின்றன. அவற்றை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். கையடக்க தற்காப்புக் கருவிகள் சிலவற்றை உங்கள் பாதுகாப்புக்கென வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். எப்படி உபயோகிப்பது என்று தெரிந்தும் வைத்துக்கொள்ளுங்கள். இது தவிர, யூ ட்யூப் போன்ற தளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் தற்காப்பு பற்றி பதிந்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.
5) தற்காப்புக்கலை: ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையை நல்ல ஆசிரியரிடம் சென்று கற்றுக்கொள்ளுங்கள். தற்காப்புக்கலைகள் நமக்கு மன தைரியம் தருவதோடு, எதிரிகளைத் தாக்கவேண்டிய சமயத்தில் பெரிதும் உதவும். நடக்கவும், சைக்கிள் ஒட்டவும் பயிற்சி செய்துதான் கற்றுக்கொண்டோம். தற்காப்பும் அப்படியே. பயிற்சி மட்டுமே உடலையும் மனதையும் வலுப்படுத்தும்.
நன்றாக யோசித்துப் பாருங்கள். உயிரில்லாத ஒரு காகிதம், அதை பத்திரமாக வைத்துக் கொள்வதற்கு ஒரு வங்கியின் இரும்பு அறை, அந்த அறை பத்திரமாக இருக்க அறிவியல் பூர்வமான பாதுகாப்புக் கருவிகள், அந்த வங்கியே பத்திரமாக இருக்கவேண்டி வெளியிலே நான்கு காவலாளிகள். உயிரில்லாத ஒரு பொருளுக்கே இவ்வளவு பாதுகாப்பு தேவைப்படும் போது, உயிருள்ள நமக்கு ஒரு பாதுகாப்பு தேவை இல்லையா? முடிவு உங்கள் கையில்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது சான்றோர் வாக்கு. சுரைக்காய் எப்படி இருக்கும் என்று வேண்டுமானால் புத்தகத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். சமைக்க வேண்டுமென்றால் கடைக்குச் சென்று வாங்கித்தான் ஆகவேண்டும். இந்தப் பதிவும் அப்படியே. இது ஒரு வழிகாட்டுதலே அன்றி, எல்லாமும் அல்ல. தேவைப்படும் நேரத்தில் இந்த வழிமுறைகளை உபயோகிக்கலாம். ஆனால், தவறாகத் தெரிந்தவர்கள் மேல் பயன்படுத்திவிட வேண்டாம். என்னுடைய விருப்பமெல்லாம், உங்கள் யாருக்கும் இதைப் பயன்படுத்தவேண்டிய கட்டாயமான சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்பதுதான். எல்லாம் நல்லபடியாக அமையட்டும்.
படங்கள் மூலம்: இணையம்

-செல்லா

Tuesday, January 28, 2014

காதல் நிச்சயிக்கப்பட்டுவிட்டதுஇன்றும் நினைவிருக்கிறது,
பெண்பார்க்கும் படலத்தில்
என்னிடம் தனியே பேச,
என் தந்தையிடம் அனுமதி வாங்கியது...!

பெரியோர்கள் சம்மதத்துடன்,
பேசவந்தாய் என்னிடம் முதன்முதலில்...!

தனியறை.
தொலைவில் உறவுகள்.
அமைதியான சூழல்.
அருகில் நீ.
எவ்வளவோ சொல்லியும் கேளாமல்
எகிறத்தொடங்கியது இதயத்துடிப்பு
உன் அருகாமை கண்டு...!

"உங்க பேர் என்ன?"
"என்ன படிச்சிருக்கிங்க?"
"என்னென்னன புடிக்கும் உங்களுக்கு?"
"என்னைப் பிடிச்சிருக்கா?"
எத்தனை கேள்விகள் எழுதிவைத்தேன் மனதில்..!
எல்லாம் மறந்தது இன்று உன் அருகில்..!

பாழாய்ப்போன உதடுகள், உன்னைப்
பார்த்ததும்தானா மூடிக்கொள்ளவேண்டும்...?

தடுமாறி நின்றபோதுதான் தெரிந்தது, என்
தவிப்புகள் உன்னால் ரசிக்கப்படுகிறது என்று...!

பத்துநாளாய் புகைப்படத்தில்
நான் ரசித்த கண்கள்,
பக்கத்தில் நின்று
என்னை ரசிக்கும்போது,
தடுமாறித்தான் போனது, என்
தைரியமான மனமும்...!

ஆசையோ கட்டிக்கொள்ளச் சொல்ல,
நாணமோ எட்டித் தள்ள,
வேண்டாம் என்று சொல்லியும், முகத்தில்
வெட்கமாய் பூத்துவிட்டிருந்தது காதல்...!

தவிக்க விட்டது போதும் என்றெண்ணியோ,
தன்னால் கேட்டாய்,
"எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.
உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?" என்று.

"பைத்தியமாய் இருக்கிறேன்"
என சொல்லத்தோன்றினாலும்,
பரிதாபமாய் நின்றுகொண்டிருந்தேன்.
படித்த மொழிகளையெல்லாம், உன்
பார்வையில் மறந்திருந்ததால்...!

"எதையாவது சொல்லித்தொலையேன்" என
இதயம் கூக்குரலிட்டாலும்,
என்ன சொல்ல என்று தெரியாமல்
இதழ்கள் ஊமையாயின.

மௌனத்தின் அர்த்தம் புரியாததாலோ என்னவோ,
மறுமுறை நீயே கேட்டாய்,
"அப்போ பிடிக்கலைன்னு
எல்லார்கிட்டயும் சொல்லிடவா?" என்று.

ஐயோ என இதயம் அலற,
நீயோ வாசல் நோக்கி நகர,
அடுத்த நொடி,
வெட்கத்தை உடைத்துவிட்டு
வெளியே வந்து விழுந்தது வார்த்தைகள்,
"பிடிச்சிருக்கு" என்று..!

புன்னகையுடன் நீ
என்னைப் பார்த்தாய்.
பொங்கிவரும் வெட்கம் மறைக்க
நான் மண்ணைப் பார்த்தேன்.

வானிலிருந்து ஒரு தேவதை,
வந்திறங்கி சொல்லியது,
"உங்கள் காதல் நிச்சயிக்கப்பட்டுவிட்டது" என்று..!

-செல்லா

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...