Wednesday, December 4, 2013

நவீன் - பிரமிளா - சில நிமிடங்கள்

"நவீன்ன்ன்" -

பிரமிளாவின் அலறல் அந்த சிறிய பங்களாவின் அனைத்து சுவர்களிலும் பட்டு எதிரொலித்து, அவ்வளவு நேரம் அருகில் இருந்துவிட்டு அப்போது தான் தண்ணீர் வேண்டுமென்று பிரமிளா கேட்டதற்காக தண்ணீர் கொண்டுவர சமையலறைக்குள் சென்றிருந்த நவீனை அடைந்தது. இரண்டு வினாடிகளில், சமையலறையில் இருந்து, உணவருந்தும் அறை (டைனிங் ஹால்) , வாசிக்கும் அறை (ரீடிங் ஹால்) மற்றும் வரவேற்பாளர் அறையைத் (விசிட்டர் ஹால்) தாண்டி, எதிர்பட்ட அத்தனை சிறு பெரு தடைகளை (பொருட்களை) உடைத்தெறிந்துவிட்டு படுக்கை அறையை அடைந்தான் நவீன். உடலில் ஏற்பட்டிருந்த வலி கண்ணில் தெரிய, சாட்சியாய் சிறுதுளி நீரும் அரும்ப, 'அருகில் வந்துவிடு. உன் அருகாமை இப்போது எனக்குத் தேவை' என்பது போல் அமர்ந்திருந்தாள் நவீனின் அன்பு மனைவி பிரமிளா. வெளியில் சொல்லாவிட்டாலும் விழி கூறியது நவீன் படும் அவஸ்தையை.

"நவீன். பிரமிக்கு வலி வந்துருச்சுப்பா. சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்பா" - என்றவாறே அடுத்து செய்ய வேண்டியதை நினைவூட்டினாள் ராஜம். பல நூறு மைல்கள், மற்றும் சில நாடுகள் தாண்டி வந்து நியூ யார்க் மாகணத்தில் வந்து குடியேறியிருந்த நவீனுக்கும், பிரமிளாவுக்கும் அன்னையாய் இருந்து பாசம் காட்டுவது பக்கத்து வீட்டில் இருக்கும் இந்த ராஜம் தான். தன் ஒரே மகன் ஷ்யாம் வேலை நிமித்தமாக நியூ யார்க் வந்து பின் அங்கேயே தங்கிவிட, ராஜத்திற்கும் அவள் கணவருக்கும் வேறு வழி இல்லாமல் போனது. உலகமயமாக்கலில் அவர்களும் ஆட்பட்டு அமெரிக்கா வந்து குடியேறி 4 ஆண்டுகள் ஆயிற்று. இரண்டு வருடங்கள் முன்பு அருகில் வந்து குடியேறிய நவீன் பிரமிளா தம்பதிகளைப் பிடித்துப் போக கண்டங்கள் கடந்து ஒரு குடும்பம் உருவாயிற்று.

"நவீன். நான் கார ரெடி பண்ணிட்டேன். ஹாஸ்பிடலுக்கும் போன் பண்ணி சொல்லிட்டேன். அவங்களும் ரெடியா இருக்காங்க. நாம இப்போவே கெளம்பலாம்" என்று நிலைமையின் தீவிரத்திற்கேற்ப துரிந்து செயலாற்றியிருந்தான் ஷ்யாம். ஆனால் நவீனால் தான் அவ்வளவு துரிதமாக செயல்பட இயலவில்லை. தன் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் இன்னொரு குழந்தையை சிறிதும் உடல் நோகா வண்ணம் மெதுவாக தூக்கிக் கொண்டு வந்து காரில் பின் புறத்தில் ஏற்றுவதற்குள்ளாகவே உயிர் போய் உயிர் வந்திருந்தது நவீனுக்கு. பிரமிளா அருகில் தானும் அமர்ந்துகொள்ள, ஷ்யாமின் லாவகமான கார் ஓட்டும் திறமையால் 15 நிமிடங்களில் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் அனைவரும் மருத்துவமனையை அடைந்திருந்தனர்.

அமெரிக்காவின் தலை சிறந்த மருத்துவமனைகளில் அதுவும் ஒன்று என்று ஏதோ ஒரு அறிக்கை கூறுகிறது. அதனாலேயே நவீன் அந்த மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்திருந்தான். மேலும் தன் பங்களாவிற்கு மிக அருகிலேயே இருந்தது அவனுக்கு வசதியாக இருந்தது. மெதுவாகத் தன் மனைவியை தூக்கிக்கொண்டே சென்று ஸ்ட்ரெட்சரில் கிடத்தினான். சில நிமிட மருத்துவ பரிசோதனைக்குப் பின் சொல்லப்பட்டது, "குழந்தை இன்னும் சிறிது நேரத்தில் பிறந்துவிடும்" என்று. சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்திருந்தது நவீனுக்கு சற்றே ஆறுதல் அளித்தது. இருந்தும் மனம் கவலையுடனே இருந்தது.

அமெரிக்காவைப் பொருத்தமட்டில் ஒரு வித்தியாசமான சட்டம் இருக்கிறது. அதாவது, ஒரு பெண்ணிற்கு பிரசவம் நடக்கும் பொழுது அவள் கணவனும் அவளுடன் அந்த பிரசவ அறையில் இருக்க வேண்டும் என்று. இதை எதற்காக யார் ஏற்படுத்தினார்கள் என்று அன்று வரை நவீனுக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாம் சிறிது நேரம் தான். பிரசவ அறைக்குள் தன் மனைவி செல்லும் போதே அவனையும் தயார் படுத்தி பிரசவ அறைக்குள் அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

"Mr.Naveen, don't panick. It's gonna be ok. Just stay there with your wife and comfort her. That's all" என ஆங்கிலத்தில் அறிவித்துவிட்டு பிரசவ அறையை நோக்கி நடக்கலானார் அந்த செவிலியர். ஒரு வகையில் பிரமிளாவுக்குத் தைரியம் கொடுப்பதற்கு அது உதவியாக இருக்கும் என்றே நவீனுக்குத் தோன்றியது.

பிரசவ அறையின் உள்ளே, டாக்டர்கள் புடை சூழ நின்றிருக்க பிரமிளா கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். வலி அவளுக்குள் பரவுவதை நவீனால் நன்றாக உணர முடிந்தது. அருகில் சென்று அவளின் இரு கையைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டான் நவீன். அந்நேரத்தில் அதைத் தவிர வேறு வழி ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை நவீனுக்கு.

"நவீன் ரொம்ப வலிக்குது நவீன்" - பிரமிளா

"ஒன்னும் ஆகாதுடா பிரமி. எல்லாம் கொஞ்ச நேரம் தான். கொஞ்சம் பொறுத்துக்கோமா" - என்றவாறே வாஞ்சையுடன் நெற்றியைத் தடவிவிட்டான் நவீன்.

"முடியலப்பா. ரொம்ப வலிக்குது"

இத்தனை வலியால் துடிப்பது யாரென்று காணக், கண்ணீரே சற்று வெளியே வந்து பார்த்து விட்டுத்தான் போனது பிரமிளாவை.

"கொஞ்ச நேரம் தாண்டா. எல்லாம் சரியாயிடும். கொஞ்சம் பொறுத்துக்கடா செல்லம்."

மருத்துவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டிருந்தாலும் அங்கிருந்த இரண்டு ஜீவன்களுக்கு அது எதுவுமே காதில் ஏறவில்லை. இரண்டு செவிலியர்கள் ஆளுக்கொரு புறமாய் நின்று பிரமிளாவின் கால்களை அகட்டிப் பிடித்துக்கொள்ள நடுத்தர வயதிருந்த அந்த பெண் மருத்துவர் பிரமிளாவை குழந்தையை நன்றாக உந்தித் தள்ளுமாறு கூறினார்.

"ஆஆஆஆஆ....." என்று பிரமிளா அலறிய போது தான் நவீனுக்கு உரைத்தது, தான் ஒரு ஆண்மகனாக, அவள் கணவனாக இருந்தும் கூட என்ன பயன்? இப்போது ஏதும் செய்ய முடியவில்லையே. தன்னால் தாங்கிக் கொள்ளவே முடியாத ஒரு வலியை, தனக்காக, தன் சந்ததிக்காக, தனக்கு எந்த வகையிலும் தொடர்பே இல்லாத ஒரு பெண் இங்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். தன்னால் என்ன செய்ய முடிந்தது? நவீனால் மௌனமாய் நின்று நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.

நேரம் ஆக, ஆக அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் பிரமிளாவின் குரல் அழுத்தமாகச் சென்று மோதிக் கொண்டிருந்தது. கைகள், கழுத்துகளில் உள்ள நரம்புகள் வெடித்து வெளியே வந்து விழுந்து விடும் போல் இருந்தது. ஏற்கனவே வலியால் துடித்துக் கொண்டிருக்கும் அவள் உடலை, சிறிதும் அசையவிடாதவாறு நான்கு புறமும் ஒருவர் நின்று இறுக்கிப் பிடித்து வைத்திருந்தார்கள். நல்லவேளையாக யாரும் அவள் கண்ணீருக்குத் தடை போடவில்லை. ஈன சுரத்தில் வலியோடு சேர்ந்து அவள் கன்னங்களில் கோலம் போட்டுக் கொண்டிருந்த கண்ணீரோடு, ஆறுதல் படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளே வந்திருந்து, இப்போது எதுவுமே முடியாமல் வலியால் துடிக்கும் தன் மனைவியைப் பார்த்தவண்ணம் நின்றவாறே அழுது கொண்டிருந்த நவீனின் கண்ணீர் சேர்ந்து கலந்து கொண்டிருந்தது.

"ஒன்னும் இல்ல பிரமிமா. ஒன்னும் இல்ல. இன்னும் கொஞ்ச நேரம் தான். கொஞ்சம் பொறுத்துக்கமா. கொஞ்சம் பொறுத்துக்க"

"ஹையோ. முடியல நவீன். உயிரே போற மாதிரி இருக்கு"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல பிராமிமா. கொஞ்ச நேரம் தான். அப்பறம் குட்டி பிரமி வந்துருவா. அவ்வளவுதான். அவ்வளவு தாண்டா செல்லம்"

"எனக்கு ரொம்ப பயம்ம்ம்மா இருக்கு நவீன். ஆஆ. தயவு செஞ்சு என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போங்க நவீன். என்னால முடியல்ல....ம்ம்ம்ம்மா" என்று வலியின் காரணமாக நவீனின் டி-ஷார்ட்டைப் பிடித்து பிரமிளா இழுக்கும் போது, உயிரோடு இருக்கும் போதே தன் நெஞ்சைக் கிழித்து யாரோ இதயத்தை எடுத்துப் போவது போல் இருந்தது நவீனுக்கு.

"போயிடலாம்டா. போயிடலாம். கொஞ்ச நேரத்துல போயிடலா.." - முடிக்காமல் விட்ட வார்த்தைகளை முடிப்பதற்காக ஒரு சிறு அழுகை சேர்ந்துகொண்டது.

"இல்ல நவீன்... இப்ப...வே கூட்டிட்டு போயிருங்க. எனக்கு... என்ன நடந்தாலும்... அது நம்ம வீட்டிலையே உங்க பக்கத்துலையே நடந்துரட்டும் நவீன்", ஒருவாறாக மூச்சைப் பிடித்து பேசினாள் பிரமிளா.

"அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாதுடா. நான் இருக்கேண்டா. தைரியமா இருமா. என் செல்லம்ல"

"முடியல நவீன்.." மீதமிருந்த வலிகளைக் கண்ணீர் வந்து நிரப்பிவிட்டுப் போனது. உலகிலிருந்த பெயர் தெரிந்த தெரியாத அத்தனை கடவுள்களையும் துணைக்கு அழைத்திருந்தான் நவீன், யாராவது வந்து தன் மனைவியின் வலியை நிறுத்திவிட மாட்டார்களா என்று.

"I could see baby's head. Come on. Keep pushing. Come on" என்று மருத்துவர் அறிவித்ததுமே போன உயிரே திரும்பி வந்தது போல் இருந்தது நவீனுக்கு.

"இன்னும் கொஞ்சம் தான் பிரமிமா. இன்னும் கொஞ்ச நேரம் தாண்டா. கொஞ்சம் பொறுத்துக்கமா"-நவீன்.

ஏதோ தனக்குள்ளும் ஒரு நம்பிக்கை வந்திருப்பதைப் போல உணர்ந்த பிரமிளா குழந்தையை அழுத்தி வெளித்தள்ள முயற்சித்தாள். கடைசி சில நிமிட போராட்டத்திற்குப் பின் உடலே வெடித்துவிடும் போல் இருந்த அந்த வலியைத் தாங்கிக்கொண்டு உச்சபட்ச டெசிபலில் பிரமிளா அலறிய போது, குழந்தை நல்லபடியாகப் பிறந்திருந்தது.

"Congratulations. It's a baby girl" என்றவாறே புன்னகைத்தார் மருத்துவர்.

லேசாக ஒரு அடி அடித்து குழந்தையை அழ வைத்த பின், மேல் படிந்திருந்த ரத்தத்தை எல்லாம் சுத்தம் செய்யச் சொல்லி செவிலியரிடம் கொடுத்தார் அந்தப் பெண் மருத்துவர். எல்லாம் நல்லபடியாக முடிந்த சந்தோஷத்தில் பிரமிளாவை நவீன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவ்வளவு நேரம் அனுபவித்திருந்த வலியின் காரணமாக மெதுவாகக் கண் மூடினாள் பிரமிளா.

"So have you decided the name for your baby?" என்று மருத்துவர் கேட்க, ஒரு புன்னகையுடன் பதில் கூறினான் நவீன். "Yes. And it must be Pramila"

"Okay. Now you can wait outside. We will be moving your wife to a ward, where you can meet her later" என்று மருத்துவர் அறிவித்ததும் அந்த இடத்தை விட்டு நகரலானான் நவீன். கிளம்பும் முன் ஒரு முறை பிரமிளாவின் அருகில் சென்று அவள் நெற்றியில் மெல்லிய ஒரு முத்தம் வைத்துவிட்டு அவள் காதோரமாய் மெதுவாகக் கூறினான் "தேங்க் யூ சோ மச் டியர். இனி உன்ன காலம் முழுக்க நல்லபடியா வச்சு பாத்துக்குவேன்டா செல்லம்" என்று கண்ணில் இருதுளி நீருடன்... :')

-செல்லா

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...