Tuesday, September 24, 2013

குங்பூ - பகுதி ஒன்று

1. குங்பூ - ஆரம்ப நாட்கள்

(சீனாவின் தற்காப்புக் கலையாக கருதப்படும் குங்பூ கலை, ஒரு தமிழரான போதிதர்மரால் கி.பி. 5-6 நூற்றாண்டுகளில் சீனாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. சில சீன அறிஞர்களின் நூல்களில் ஒரு தென்னிந்தியர் குங்பூ கலையின் அடிப்படையைக் கற்றுக்கொடுத்துச் சென்றதாகக் கூறுகிறார்கள். உண்மை எதுவாயினும் சீனர்கள் குங்பூ கலையை நன்றாக மெருகேற்றி இருக்கிறார்கள் என்பதும் தவிர்க்க முடியாத உண்மை)

குறிப்பு: சில உதாரணத்திற்காக சில உடற்பயிற்சிகள் பற்றிக் கூறியிருக்கிறேன். அவை எதையும் செய்து பார்க்க வேண்டாமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

குங்பூ கலையை எதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னைச் சுற்றியிருக்கிற சிலரும் இணையதள உலவிகள் சிலரும் கூறிய கருத்துக்களாவது, உடலில் எந்த பகுதியில் தாக்கினால் எதிரி வீழ்வான் என்று தெரிந்து தாக்குவதற்காகவும், தன்னை தீயவர்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்காகவும், உடல் மற்றும் மன வளத்திற்காகவும் இந்தக் கலையைக் கற்கலாம் என்பதாம். இத்துடன் சேர்த்து இன்னும் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் நான்.

நான் எத்தனையோ முறை வீட்டைச் சுத்தம் செய்திருக்கிறேன். பல மணி நேரங்கள் கணினியின் திரையிலிருந்து கண் அகற்றாமல் வேலை பார்த்திருக்கிறேன், விளையாடியிருக்கிறேன். சில நேரங்களில் சமையல் கற்றுக்கொள்ளவும் முயற்சித்திருக்கிறேன். ஆனால் சில மாதங்கள் முன்பு வரை இவை அத்தனைக்குள்ளும், ஏன் இன்னும் நான் சொல்லாமல் விட்டுவிட்ட எத்தனையோ விஷயங்களுக்குள்ளும் நான் நேசித்த குங்பூ ஒளிந்திருந்ததை என்றுமே அறிந்ததில்லை. என்றாவது நாம் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது அல்லது துணி துவைக்கும்போது நினைத்திருப்போமா அந்த சூழலிலும் உடலை வலுப்படுத்தக் கூடிய ஒரு விஷயத்தை நம்மால் செய்ய இயலுமென்று? இதைப்பற்றியெல்லாம் இப்போதே கூறப்போவதில்லை. இதெல்லாம் எப்படி நடந்தது என்று என் வாழ்க்கையின் வழித்தடத்தோடு கூறுகிறேன். சிறிது தூரம் என் வாழ்க்கைப் பாதையில் என்னுடன் வலம் வாருங்கள்.

நான் முதன்முதலில் அந்த குங்பூ வகுப்பிற்குச் சென்றபோது சில அடிப்படையான உடற்பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டது. இன்று வரை, எல்லா நாளும் 'Warm up' என்று சொல்லப்படுகிற அடிப்படையான சில உடற்பயிற்சிகளை செய்து முடித்தபின் தான் எங்கள் வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. முதல் நாளில் சில அடிப்படை உடற்பயிற்சி முறைகளோடு இன்னும் சில அடிப்படை தற்காப்பு முறைகள் கற்றுத் தரப்பட்டன. ஆனால், 1 வருடம் 9 மாதங்கள் கழித்து இப்பொழுதுதான் எந்த வரிசையில் எனக்கு உடற்பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன என்ற அறிவு லேசாக முளைத்திருக்கிறது.

ஆரம்பத்திலிருந்து கற்றுத்தரப்பட்ட சில விஷயங்களில் முக்கியமானது கைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள். உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், 'புஷ் அப்' அல்லது தண்டால் எனப்படும் உடற்பயிசியை சொல்லலாம். வழக்கமாக நம்மில் பலர் இந்த புஷ் அப் பயிற்சியை செய்வோம். அன்று வரை எனக்குத் தெரிந்தது இரண்டு வகையான புஷ் அப் பயிற்சிகள் தான். ஆனால் அங்கு தான், கிட்டத்தட்ட 9 வகையான அடிப்படை புஷ் அப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன (அடிப்படை மட்டும் 9. அட்வான்ஸ்ட் லெவல் எல்லாம் சேர்த்தா இப்போ வரைக்கும் சுமார் ஒரு 21 புஷ் அப் டெக்னிக்ஸ் இருக்குதுங்கோ!!! இன்னும் நான் கத்துக்க நெறையா இருக்கு). இதே போல் கைகளை தோளுக்கு நேராக பக்கவாட்டில் நீட்டி வைத்துக் கொண்டு நிற்பது, புஷ் அப் எடுக்காமலேயே புஷ் அப் எடுக்கும் நிலையில் மட்டும் இருப்பது, காலோடு சேர்த்து கையை வலுப்படுத்தும் இன்னும் சில உடற்பயிற்சிகள் இதில் அடக்கம்.

சிறிது காலத்திற்குப் பின் என்னால் சில மாற்றங்களை அறிந்துகொள்ள முடிந்தது. ஆரம்ப காலத்தில் உடலில் வலி அதிகம் எடுப்பதுபோல் தோன்றினாலும், நாட்கள் செல்லச் செல்ல எல்லாம் பழக ஆரம்பித்தது. 23 வருடமாக கைகளில் இல்லாத பலம் சிறிது சிறிதாக கூட ஆரம்பித்ததுபோல் தோன்றியது. கைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள் மறைமுகமாக வயிற்றுப்பகுதிகளிலும் செயலாற்றுகிறது என்பது கொசுறு செய்தி. சரி. கைகளை வலுப்படுத்த எதற்காக இத்தனை விஷயங்கள், இத்தனை விதமான உடற்பயிற்சிகள் என்று தெரிந்து கொள்ளவேண்டாமா? சற்று காத்திருங்கள். அடுத்த பதிவில் பகிர்ந்து விடுகிறேன்.

No comments:

Post a Comment

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...