Tuesday, September 24, 2013

குங்பூ - பகுதி இரண்டு

2. உன் உயிர் உன் கையில்

"உங்கள் உயிர் உங்கள் கைகளில்"

இந்த வரிகள் என் குங்பூ மாஸ்டர் பேச்சிமுத்து அதிகம் கூறுபவை. குங்பூவில் பெரும்பாலும் கைகளின் ஆதிக்கமே அதிகம் இருக்கும். இதற்கு அர்த்தம் குங்பூ கலை கால் அசைவுகளை உபயோகிப்பதை விட பெரும்பாலும் கை அசைவுகளையே உபயோகிக்கிறது. எதிராளியைத் தடுப்பது, தாக்குவதிலிருந்து பல வகையான ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சிகள் செய்வது வரை கைகள் தான் பெருமளவில் குங்பூவில் பயன்படுத்தப் படுகின்றன. (ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சிகள் பற்றிய விவரங்களை ஒரு பதிவாக பதிந்துவிடுகிறேன்).

சில நேரங்களில் நம் உடலின் மொத்த எடையையும் தாங்கவேண்டிய சூழல் கைகளுக்கு ஏற்படலாம். அப்போது கைகள் வலுவாக இல்லாவிட்டால், புத்தூருக்குப் போகவேண்டிய நிலைதான் ஏற்படும். இன்னும் சில நேரங்களில் கைகள் சரியான முறையில் உடலைத் தாங்காவிட்டால் கழுத்து மற்றும் தலைப் பகுதிகளில் அடிபடக் கூடிய வாய்ப்புகள் 100க்கு 120% உண்டு. இந்த இடங்களில் அடிபட்டால் என்னவாகும் என்று நான் சொல்லி உங்களுக்கெல்லாம் தெரியவேண்டியதில்லை. இதனாலேயே கைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.

குங்பூ கலையின் பிறப்பிடமாக அறியப்படும் ஷாலின் கோவிலில் தான் முதன் முதலில் குங்பூ பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. போதிதர்மர் தான் இந்த இடத்தை நிறுவியதாகக் கூறப்படுகிறது. ஆரம்ப காலகட்டங்களில் புத்தத் துறவிகள் பலர் தியானத்தில் இருக்கும்போதே மன ஒருநிலைப் பாட்டைக் கட்டுப்படுத்த முடியாமல் தூக்கத்தில் விழுந்தனர். இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது அவர்கள் உடல் வலிமை குன்றியவர்களாக இருப்பதை அறிந்த போதிதர்மர் அப்போதுதான் அவர்களுக்கு குங்பூ கலையைப் போதிக்க ஆரம்பித்தார். அதன்பின் புத்தத் துறவிகள் பலரும் அதை தங்கள் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு தங்கள் அறிவைக்கொண்டு மாற்றம் செய்து புதிய புதிய வடிவங்களைக் கொடுக்கலாயினர். ஆனால் எல்லாப் பிள்ளைகளையும் பெற்ற தாயாய் இன்றும் இருக்கிறது ஷாலின் குங்பூ முறை. அதன் பெரும்பாலான விஷயங்கள் கைகளைப் பயன்படுத்துவதிலே தான் இருக்கிறது.

2.இது தவிர "அனிமல் மூவ்ஸ்" என்று சொல்லக்கூடிய மிருகங்களைப் போல் தாக்கும் முறைகளில் கைகளின் ஆதிக்கமே அதிகம் இருக்கிறது. சென்ற பதிவில் நான் பகிர்ந்தது போல் 9 வகையான அடிப்படை புஷ் அப்களில் 3 வகையான புஷ் அப்கள் மிருக முறை தாக்குதல்களில் பெரிதும் உதவி செய்யக் கூடியவை. இதுவரை நான் 5 வகையான மிருக முறை தாக்குதல்களின் அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். (குரங்கு, வெட்டுக்கிளி, புலி, பாம்பு, கழுகு. சில நேரங்களில் மிருக முறைத் தாக்குதல்களைப் போல் அபாயகரமானது ஏதும் இல்லை).

இத்தோடு ஆயுதங்களை உபயோகப்படுத்தி செய்யக்கூடிய அனைத்து விதமான பயிற்சிகளுக்கும் கைகளின் பலம் அவசியமாகிறது. கம்பு அல்லது நுன்சக்கு (Nunchaku) உபயோகப்படுத்தும்போதோ, அல்லது கத்தி போன்ற ஆயுதங்களை கையாளும்போதோ நம் கைகளில் போதிய பலம் இல்லாவிட்டால் ஆப்பு நமக்கும் சேர்த்துத்தான்.

"தம்பி. இதெல்லாம் சரி. நடைமுறை வாழ்க்கையில நான் எங்க போய் கத்தி வச்சுலாம் சண்டை போடப்போறேன். எனக்கு இதனால என்ன யூசு?" என்கிறீர்களா. இதோ சில உதாரணங்கள்.

1. உங்களின் அதிக எடையுள்ள பைக்குகளை எளிதாக நீங்கள் கையாளலாம்.
2. படம் வரையும்போதோ, எழுதும் போதோ, கணினியில் அதிகநேரம் கைகளை உபயோகப்படுத்தி டைப் செய்யும்போதோ உதவுகிறது.
3. தகுந்த அளவில் பயிற்சி செய்தீர்களானால், உங்கள் வீட்டு மளிகைப் பொருட்கள் காய்கறிகளை எல்லாம் நீங்களே சுமந்து கொண்டு வீட்டிற்கு வந்துவிடலாம். உங்கள் அம்மாவோ/மனைவியோ மிகுந்த மகிழ்ச்சி கொள்வார்கள்.
4. என்னைப்போன்ற கையால் துணி துவைக்கும் நண்பராக இருந்தால், ங்கொக்கமக்க எந்த கறையா இருந்தாலும் பரவால்ல. அடிச்சு தொவச்சுரலாம். (டிரஸ் கிழிஞ்சு போனால், கம்பனி பொறுப்பல்ல)
5. கைகளில் பலம் கூடக்கூட, கை அசைவுகளை எளிதில் கட்டுப்படுத்த நம்மால் முடிகிறது. கை உங்கள் கட்டுக்குள் வருகிறது. உங்கள் கை உங்கள் பேச்சைக் கேட்டால் வேண்டாம் என்று சொல்லுவிர்களா? படம் வரைவதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இது பெரிதில் உதவும்.
6. சமையல் செய்யுற/சமையலுக்கு உதவி செய்கிற நண்பராவோ அல்லது தோழியாகவோ இருந்தால் கவனமாக காய்கறி நறுக்கவும் உதவும். கவனமா காய்கறி வெட்டுறதும் கூட ஒரு வகையில குங்பூ பயிற்சி மாதிரி தானுங்க.. :)

இவையெல்லாம் அடியேனுக்குத் தெரிந்தது. உங்கள் வேலை, மற்றும் சூழலைப் பொறுத்து வெவ்வேறு வழிகளில் உதவும். கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்பிக்கொள்ளலாம்.

எனக்கு குங்பூவை மிகவும் பிடிக்கக் காரணம், குங்பூ பயிற்சி முறைகள் பெரும்பாலும் நம்மைச் சுற்றியிருக்கும் சூழலில் இருந்து உருவாக்கப்பட்டவை. நான் மேற்கூறியிருந்த அனிமல் மூவ்ஸ் போன்றவை, பெரும்பாலும் அந்தந்த விலங்குகளின் குணாதிசயங்களில் இருந்து உருவாக்கப்பட்டவை. சுற்றுப் புறத்திலிருந்து எடுக்கப்பட்ட குங்பூவை மறுபடியும் சுற்றுப் புறத்திற்குள்ளாகவே வைத்துப் பார்த்தால், நாம் அன்றாடம் செய்யும் பல விஷயங்களில் குங்பூ இருப்பதை உணர முடியும். உதாரணமாக, தற்போது நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு இதைப் படித்துக் கொண்டிருந்தால், கால்கள் தரையில் இருக்கும்படி செய்து நேராக நிமிர்ந்து உட்காருங்கள். ஆயிற்றா. இதே நிலையில் உங்கள் நாற்காலியை அகற்றிவிட்டு வெறும் காற்றில் முதுகுத் தண்டு நேராக ஒரு நாற்காலியில் உட்கார்வது போல் உட்கார்ந்து பாருங்கள். அவ்வளவே. இது ஒருவகையான குங்பூ உடற்பயிற்சி. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் இருப்பது உங்கள் முதுகு, கால் மற்றும் முழங்கால் பகுதிகளுக்கு வலு சேர்க்கும். மதிய வேளைகளில் உண்ட மயக்கத்தில் தூக்கம் வரும்போதெல்லாம், அலுவலக நாற்காலியில் மயிரிழை அளவு இடம் விட்டுவிட்டு நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போல், நான் சிறிது நேரம் காற்றில் உட்கார்ந்திருப்பேன். இதுவரை அருகில் அமர்ந்திருக்கும் எந்த ஒரு நண்பரும் இதைக் கண்டுபிடித்ததில்லை.... :) (கவனம்: இதில் எனக்குப் பயிற்சி இருப்பதால் நான் சரியாகச் செய்கிறேன். பயிற்சி இல்லாமல் இதை தவறாக முயற்சித்துவிட்டால் முதுகு, கால் பகுதிகளுக்கு வலு சேர்க்காமல், அதே இடங்களைப் பாதிக்கவும் செய்யும் இந்த உடற்பயிற்சி)

வேலைக்கு வேலையும் ஆயிற்று. சிறிது நேரம் உடற்பயிற்சியும் செய்தாயிற்று என்பதுபோல் இன்னும் வேறு சில இடங்களிலும் உபயோகப் படுத்தியிருக்கிறேன். அவற்றையும் அடுத்தடுத்த பதிவுகளில் சிறிது சிறிதாக பகிர்கிறேன்.

கொஞ்சம் அதிகமாகவே மொக்கை போட்டுட்டேன்னு நெனைக்கிறேன். அதனால கோர் என்று என் மாஸ்டர் சொல்லக்கூடிய வயிற்றுப் பகுதிக்கான உடற்பயிற்சிகள் பற்றிய தொகுப்பை அடுத்த பதிவில் பதிகிறேன்.

No comments:

Post a Comment

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...