உன்னைப்போல் ஒருவன்

தியாகராய நகரின் பரபப்பான வீதிகளைப் பற்றித் தெரிந்தவர்கள், ஞாயிற்று கிழமை பொழுதை அங்கு கழிக்க விரும்ப மாட்டார்கள். அளவு கடந்த கூட்டமும், வாகன இரைச்சலும் மண்டிக்கிடக்கின்ற அந்த தெருக்களில், தண்ணீராய் பணத்தை செலவழிப்பவர்கள் மட்டுமே ராஜ போகம் பெறுகிறார்கள். பலரின் நிலைமை, மிட்டாய் கடையை வேடிக்கை பார்க்கும் குழந்தை போல தான். அது சரி. இப்போது எதற்கு இந்த தேவையில்லாத விமர்சனம்? நான் சொல்ல வந்த விஷயமே வேறு.

சமீபத்தில் திருமணமான, என் சகோதரியை (பெரியம்மா மகள்) காண தியாகராய நகர் செல்ல வேண்டி இருந்தது. பார்த்து விட்டு வரும் வழியில், ஒரு நபரை சந்திக்க நேரிட்டது. என்னுள் ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்தியவர் இவர்.

பெயர் வெளியிட விரும்பாத இந்த நண்பர், (நாம் குமார் என்று வைத்துகொள்வோமே) என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் சற்றே ஆச்சர்யத்தையும், பெருமளவு மாற்றத்தையும் என்னிடம் ஏற்படுத்தியது. மகிழ்ச்சியாக பேசிய இவரின் வாழ்க்கை, மகிழ்ச்சியாக இல்லை. குமார் சிறுவயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால், இவரது கால்கள் தன் செயல்பாட்டை இழந்தன. வேலை பறி போனாலே வாழ்வு முடிந்ததாக நினைக்கும் பலர் மத்தியில், தன் கால் போன பின்னும் மனம் தளராமல் இவர் செய்த காரியங்கள் ஆச்சர்யமனவை. 

உடலில் தான் ஊனம் என்றாலும், தன் திறமையால் மூளையால் சிறுவயது முதல் சிறுக சிறுக பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். நல்ல முறையில் சம்பாதித்த பணத்தை பெருக்குவதற்காக அடுத்து இவர் செய்த காரியம் தான் இவரை மறுபடியும் சங்கடத்தில் ஆழ்த்தியது. சிறுவயது முதல் தான் சேமித்த, சம்பாதித்த பணத்தினை, ஷேர் மார்க்கெட் எனப்படும் பங்கு சந்தையில் முதலிட்டுள்ளார். சில தவறான முதளிடுகளால், தன் பணம் அத்தனையும் இழந்துள்ளார். 

சேமித்த பணம் பறிபோனது. வீட்டிலோ வயதான நிலையில் பெற்றவர்கள் இருக்கிறார்கள். காப்பாற்ற கூடப் பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை. தன்னை நம்பி வேலை கொடுப்பாரும் இல்லை. கிட்டத்தட்ட வாழ்க்கை முடுக்கப்பட்டது போல் ஆகி விட்டது.

ஆனால், ஹீரோக்களின் வழி போராடி வெல்வது தானே. போராட களத்தில் இறங்கினார் இந்த ஹீரோ. 

உடல் ஊனமுற்றவர்கள் ஒட்டக்கூடிய இரு சக்கர வாங்கணும் மூலம் வியாபாரம் செய்யலாம் என்று முடிவெடுத்தார். அதற்கான ஓட்டுனர் உரிமம் பெற முயற்சித்துள்ளார். சில தவிர்க்க முடியாத காரணங்களால், அது தள்ளிக்கொண்டு போக, பொழுதை வீணடிக்க விரும்பாமல் கிடைத்த தொழிலை செய்ய ஆரம்பித்துள்ளார். இப்போது கைக்குட்டை விற்கிறார்.

அவரிடம் விடை பெறும் பொது அவர் சொன்ன வார்த்தைகள்,
 
"இன்னும் கொஞ்ச நாள் தான் சார். அப்பறம் லைசென்ஸ் கெடச்சுடும். அப்புறம் எனக்கு கவலை இல்லை சார். நல்லா வேல பாத்து குடும்பத்த காப்பாத்திடுவேன் சார்" 

 கை நிறைய சம்பாதிக்கும் மகன்களே தங்கள் பெற்றோரை காப்பகத்தில் சேர்க்கும் இந்த காலத்தில், உடல் ஊனமுற்ற நிலையிலும் தன் பெற்றோரை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் இவர் நிஜ ஹீரோ தானே.......!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!