பெண் சிசு

ஆனந்தமாய் குடியிருந்தேன்
ஐந்திரு திங்கள்
உன் கருவறையில்.......!

உன் உணவே என் உணவாய்,
உன் உயிரே என் உயிராய்,
உன் மூச்சே என் மூச்சாய்,
உனக்குள்ளே உன்னாலே
உயிராய் இருந்தேன்......!

பெற்றெடுக்க வலி பொறுத்தாய்.
பெற்றவளே உன்னை எண்ணி,
பிறக்கும் போதே நானழுதேன்.

உயிருக்குள் காத்த என்னை
உயிரே நீ ஏன் வெறுத்தாய்?

அழுகுரல் பிடிக்கவில்லையோ?
அனாதையாய் விட்டுசென்றாய்!

வளர்த்திருக்கலாமே என்னை,
பார் புகழும் பெண்ணாக அல்ல.....!
ஓர் பாமரப் பெண்ணாகவாவது.......!

கை பிடித்துக் கொடுக்கவேண்டும்
என்று எண்ணியோ
கை கழுவிச் சென்று விட்டாய்?

காக்க மாட்டாள் இவள்
என்று எண்ணியோ
கழிவு போல் விட்டெறிந்தாய்?

பேர் சொல்ல பிள்ளை இல்லையென
ஏங்குவோர் மத்தியில்
பெற்ற பிள்ளை என்னை
ஏங்கவிட்டு சென்றாய் ஏனோ?

பச்சிளங் குழந்தையை
படைத்தவனுக்கும் பிடிக்குமாம்
பிடிக்கவில்லையோ என்னை உனக்கு?
புரியவில்லை உண்மை எனக்கு!

பிறக்கும் உரிமை கிடைத்திருந்தால்
மாற்றியிருப்பேன்
விதியை அன்று!
தவழ்ந்திருப்பேன்
உன் மடியில் இன்று!

இக்கொடுமை இனி முடியும்!
புதுநிலைமை பிறப்பெடுக்கும்!

அம்மா
உன் மகளுக்கு குப்பைதொட்டி,
இன்று இவள் தவழ.....!
ஆனால்
அவள் மகளுக்கு அவள் அன்னைமடி,
நாளை அவள் மகிழ......!

கள்ளிப்பால் உணவும்,
குப்பைதொட்டி உறக்கமும்,
இன்று மட்டுமே இருக்கும்
பெண்சிசுவுக்கு,
நாளையல்ல......!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!