Wednesday, December 22, 2010

ஏன்? உன்னை காதலித்தது தவறா.....?

சிறு வயது முதல் சேமித்த காதலை,
சில நொடிகளில்
சின்னாபின்னமாக்கிவிட்டாய்....!

மனம் நிறைந்த அன்பை மொழிய வார்த்தையின்றி,
குழந்தைத் தனமாய்
கோமாளி வேலைகள் செய்தேன்.....!

என்னை நானே காயப்படுத்தினேன்,
உன்னிடம் காதல்
உள்ளதா என அறிய....!

காயம் பட்டவன் நான்.
கண்ணீர் விட்டது நீ.

வேண்டுமென்றே விளையாடியதை கூறி,
விட்டுச் சென்றாய்
என் காதலை.....!

விளையாட்டாய் காதலை விதைத்து விட்டு,
வீதியிலே
விட்டெறிந்து விட்டாய் என்னை.....!

என்னுள் காதல் பூக்கவில்லை,
நேசிக்கிறேன் என்று
நீ என்னிடம் சொல்லும் வரை......!

சொல்லும் பொது இருந்த காதல்,
எப்போது
சொல்லிக்கொள்ளாமல் சென்றது?

கண்ணீரில் செந்நீர் வழிய,
காலங்களின் கையில் சிக்கி,
காணாமல் போகும் என் காதலை,
கண்டுகொள்ளாமல் போகிறாய்.....!

இதயம் இறந்து போக,
என்னுள்ளே நான் சமாதியாக,
இது தானா என் வாழ்க்கையின் விதி.....?

ஏன்? உன்னை காதலித்தது தவறா.....?

-செல்லா

Monday, December 20, 2010

சச்சின் டெண்டுல்கர்

அரிச்சுவடி அறியும்
வயதில்
ஆடக் கற்றவன்,
பலர்
ஆடி முடிந்தபின்னும்
ஆடிக் கொண்டிருக்கிறான்!

மைதானங்களின்
புழுதியில்,
மையல் கொண்டிருந்தன
அவன் கால்கள்!

சீறி வரும்
பந்துகளை
சிதறடிப்பதில் இருந்தது
அவன் காதல்!

அக்னி வெயிலில்
ஆண்டுதோறும்
காய்ந்துகொண்டு இருந்தது
அவன் தேகம்!

பழம் தின்று  கொட்டை போட்ட
ராஜாங்கங்களுக்கு மத்தியில்,
ஆரம்பமானது
அவன் அரங்கேற்றம்!

பாலகன் என்று
பரிகசித்த பலராலும்
பார்த்துக்கொண்டு
நிற்கத்தான் முடிந்தது!

சிங்கங்களே மண்ணைக் கவ்வும்
போர்க்களத்தில்,
சிறுவனாய் நின்று
சாதிக்க ஆரம்பித்தான்!

உயரத்தை கேலி
செய்தோர் மத்தியில்,
உயரத்தை
உயர்த்திக் கொண்டே சென்றான்!

புகழும் பரிசும்
தேடி வந்தன!

சாதனைகளும் சரித்திரங்களும்
கூடிக்கொண்டே சென்றன!

ஆனால்
இதற்காகவா,
இந்த சாதனைகளுக்காகவா,
எல்லோரும் நேசிக்கின்றனர் அவரை?

இல்லை.

துவண்டு கிடக்கும்
கோடான கோடி நெஞ்சங்களில்,
நம்பிக்கை என்னும்
நல்விதையை நட்டதால்....!

தோற்றுவிடுவோம் என்று
தடுமாறும் வேளையில்,
தோல்வி வரும் வரை
எதிர்த்து போராடியதால்.....!

தனியொரு மனிதனால்
என்ன செய்ய முடியும்
என்ற கேள்விக்கு
தனியாய் நின்று பதில் சொன்னதால்....!

எதிரே நின்று போட்டியிடுபவனை
எதிரியாய்ப் பார்க்கும் உலகில்,
பிற நாட்டினரின்
பாராட்டைப் பெற்றது,
 அவரின் சாதனைகளால் அல்ல....!
சளைக்காத முயற்சியாலும்,
அயராத உழைப்பாலும்.....!

இன்றும் நாங்கள்
இவருக்கு தலைவணங்குவது
எங்களுக்காக
போராடுவதால் அல்ல.....!
எங்களுக்குள் நம்பிக்கையை
விதைத்தத்தால்......!

-செல்லா


(Thanks to Sachin. Fighting for us, of 20 years and still....)
(Dedicated to his 50th test century)

Sunday, December 19, 2010

கவிதைகள்

எல்லோராலும்
நேசிக்கப்படும்
கவிதைகள்,
சில நெஞ்சங்களின்
நேசம் கிடைக்கததால்
உருவானவை....!
-செல்லா 

Friday, December 3, 2010

என் மனமும்.....! நானும்....!

கார்த்திகை மாத மழையின்,
காலைப் பொழுதில்,
வெறுமையை
விரட்டிக்கொண்டு இருந்த என்னிடம்,
என் தனிமை கேட்டது......!


"பார்!
உனக்காக யாரும் இல்லை!

உன்னை நேசிக்கின்ற
நெஞ்சம் இல்லை!


உனக்காக அழுகின்ற
கண்கள் இல்லை!


உன் பேர் உச்சரிக்கும்
உதடுகள் இல்லை!


உன்னை நேசிக்க
ஆள் இல்லாத உலகில்,
யாரை நேசிக்க
நீ வாழ்கிறாய்.....?" என்று.

உண்மையைச் சொன்ன
என் தனிமையிடம்,
உவகையுடன் சொன்னேன்.


"ஆம்!
எனக்காக யாரும் இல்லை!
என் தந்தை போல்!


என்னை நேசிக்கின்ற
நெஞ்சம் இல்லை!
என் அன்னை நெஞ்சம் போல்!


எனக்காக அழுகின்ற
கண்கள் இல்லை!
என் நண்பனின் கண்கள் போல்!


என் பேர் உச்சரிக்கின்ற
உதடுகள் இல்லை!
என் தங்கை போல்!


இவர்களைப் போல்
என்னை நேசிக்க
ஆள் இல்லாத இவ்வுலகில்,
இவர்களை நேசிக்கத்தான்
நான் வாழ்கிறேன்......!"
என்றேன் சிரித்துக்கொண்டே.....!-செல்லா

Monday, October 4, 2010

ராணுவ வீரர்கள்

இங்கு
நாம்
நிம்மதியாய்
உறங்குகிறோம்......!
அங்கு
அவர்கள்
நமக்காக
விழித்திருப்பதால்.......!

-செல்லா

Sunday, October 3, 2010

காத்திருக்கிறேன்

உனக்காகத் தான்
காத்துக்கொண்டு இருக்கிறேன்......!
கண்கள் நிறைய கனவோடும்.....!
மனது நிறைய காதலோடும்......!

-செல்லா

Wednesday, August 18, 2010

கடல்


இம்மண்ணில்
வரையப்படும்
காதல்களை எல்லாம்
களவாடிச் செல்கிறாயே
கடலே
உனக்கும்
காதல் மீது
காதலா.......!
-செல்லா

Friday, July 16, 2010

எங்கே இருக்கிறாய் நண்பா


எங்கே இருக்கிறாய் நண்பா!

உறவு சுடுகிறது!
காதல் கொல்கிறது!
துரோகம் துரத்துகிறது!
ஆசை அலைக்கழிக்கிறது!

விழிகளில் கண்ணீர்
ததும்பி நிற்கிறது!
மனதில் பாரம்
நிரம்பி இருக்கிறது!

ஆறுதல் சொல்லவோ,
அன்பு காட்டவோ
ஆளின்றித் தவிக்கிறேன்.
அருகில் நீ இல்லாததால்........!

என் இன்பத்தை உன் இன்பமாய் ,
என் ஏக்கம்
புரிந்த நீ எங்கே......?
என் வலியை
அறிந்த நீ எங்கே.....?
என்னை என்னாய்
உணர்ந்த நீ எங்கே.....?

காலத்தின் கைகளில்
சிறைப்பட்டு,
கண்ணீருக்குள் கரைந்து
காணமல் போகும்முன்,
என்னைக் காப்பாற்ற
வருவாயா......?

எங்கே இருக்கிறாய் நண்பா.......!-செல்லா

Thursday, July 15, 2010

வறுமை


செருப்பைத்
துடைக்கிறேன்.
என்
வறுமையைத்
துடைக்க முடியாததால்......!

-செல்லா

முயற்சிநடக்க முடியாத
என்னை,
நடக்க வைக்கிறது.
முயற்சி.........!


-செல்லா

Tuesday, July 13, 2010

கடல்

சத்தம் போடாதே

நீ (ஒரு தாயின் கனவு)

என்ன செய்வாய் நீ?

அழகாய் சிரிப்பாயா?
அழுது அடம் பிடிப்பாயா?

கோபம் கொள்வாயா?
குறும்புகள் செய்வாயா?

அன்னைஎன் மடியில் தவழ்வாயா?
தந்தையின் தோளில் துயில்வாயா?

முத்தம் கொடுப்பாயா?
முறைத்துக் கொண்டு நிற்பாயா?

ஆணாய் பிறந்து நாடாள்வாயா?
பெண்ணாய் பிறந்து வீடாள்வாயா?

சமர்த்தாய் உண்பாயா?
சாப்பிட மாட்டேன் என்பாயா?

ஐந்து மாதம் முடியும் முன்னே,
ஆயிரம் கனவுகள் என் நெஞ்சில்...!

கருவறை நீ தாண்டும் முன்பே
கற்பனை கோடி என் கண்ணில்......!

கொஞ்சம் பொறுத்துக்கொள்.

ஈரைந்து மாதம் தான்,
இந்தச் சிறை உனக்கு....!
வருங்காலம் உனக்காக,
காத்துக்கொண்டு இருக்கு.....!

நிலமான என்னுள்ளே,
விதையாக இருக்கும் நீ,
மரமாகும் காலம் வரை ,
மறவாமல் காத்திருப்பேன்.....!

கருவறை நீ தாண்டும் போதே,
உன் கவலைகளை நான் கொள்வேன்........!

பிறக்கும் உன் வலியைக் கூட,
பிரசவ வலியாய் நானே ஏற்பேன்........!

என் செல்வமே......!

சிறைப்பட்டுக் கிடக்கும் நீ,
சிறகு விரித்துப் பறக்கும் போது,
காவலாய் நானும் வருவேன்,
காற்றாக உன்னோடு.......!

-செல்லா

ஒரு அன்னையின் குரல்

என் உயிரை
பணையம் வைத்து
உன்னைப் பெற்றதற்கு,
எனக்கு இன்று கிடைத்த பரிசு.......!
அநாதை இல்லத்தில் ஓர் மூலை........!

-செல்லா

சிற்பம்

சிற்பங்களின் அழகைக் கண்டு
நீ ரசிக்கிறாய்.
உனக்குப் புரியவில்லையா,
அவையெல்லாம்
உன்னழகைக் கண்டுதான்
சிலையானவை என்று.........!

-செல்லா

நேசம்

உன் பிரிவில் தான் தெரிந்தது
நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று!

உன் கோபத்தில் தான் தெரிந்தது
நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்று!


-செல்லா

உன் பிரிவு

குழந்தையில்
என் அன்னையிடம்
பாலுக்காக
அழுததை விட அதிகம்,
இப்போது
உன் பிரிவை எண்ணி
நான் அழுவது......!

-செல்லா

கடவுள்

கடவுளும் சிறையிருக்கிறார்,
கருவறைக்குள்.......!
கள்வர்கள் கவர்ந்து
சென்று விடுவார்களோ
என்று பயந்து.........!

-செல்லா

பெண் சிசு

ஆனந்தமாய் குடியிருந்தேன்
ஐந்திரு திங்கள்
உன் கருவறையில்.......!

உன் உணவே என் உணவாய்,
உன் உயிரே என் உயிராய்,
உன் மூச்சே என் மூச்சாய்,
உனக்குள்ளே உன்னாலே
உயிராய் இருந்தேன்......!

பெற்றெடுக்க வலி பொறுத்தாய்.
பெற்றவளே உன்னை எண்ணி,
பிறக்கும் போதே நானழுதேன்.

உயிருக்குள் காத்த என்னை
உயிரே நீ ஏன் வெறுத்தாய்?

அழுகுரல் பிடிக்கவில்லையோ?
அனாதையாய் விட்டுசென்றாய்!

வளர்த்திருக்கலாமே என்னை,
பார் புகழும் பெண்ணாக அல்ல.....!
ஓர் பாமரப் பெண்ணாகவாவது.......!

கை பிடித்துக் கொடுக்கவேண்டும்
என்று எண்ணியோ
கை கழுவிச் சென்று விட்டாய்?

காக்க மாட்டாள் இவள்
என்று எண்ணியோ
கழிவு போல் விட்டெறிந்தாய்?

பேர் சொல்ல பிள்ளை இல்லையென
ஏங்குவோர் மத்தியில்
பெற்ற பிள்ளை என்னை
ஏங்கவிட்டு சென்றாய் ஏனோ?

பச்சிளங் குழந்தையை
படைத்தவனுக்கும் பிடிக்குமாம்
பிடிக்கவில்லையோ என்னை உனக்கு?
புரியவில்லை உண்மை எனக்கு!

பிறக்கும் உரிமை கிடைத்திருந்தால்
மாற்றியிருப்பேன்
விதியை அன்று!
தவழ்ந்திருப்பேன்
உன் மடியில் இன்று!

இக்கொடுமை இனி முடியும்!
புதுநிலைமை பிறப்பெடுக்கும்!

அம்மா
உன் மகளுக்கு குப்பைதொட்டி,
இன்று இவள் தவழ.....!
ஆனால்
அவள் மகளுக்கு அவள் அன்னைமடி,
நாளை அவள் மகிழ......!

கள்ளிப்பால் உணவும்,
குப்பைதொட்டி உறக்கமும்,
இன்று மட்டுமே இருக்கும்
பெண்சிசுவுக்கு,
நாளையல்ல......!

-செல்லா

Monday, July 12, 2010

நட்பு-காதல்

உன்னிடம் நட்பு......!
என்னிடம் காதல்......!
நீ உண்மையாய் இரு.
நான் ஊமையாய் இருக்கிறேன்


-செல்லா

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...